head


சம்பந்தரின் கடும் போக்கு: வரையறை??

- நரேன்


|Thu 08th Feb 2018 08.40AM|General| Page Views : 28

எந்தவொரு ஆளும் வர்க்கமும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் குரலை கடும்போக்கு, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் என்றே வரையறை செய்வது உலகநியதி.

பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் அல்லது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக குரல் கொடுக்கும் அதே தரப்பில் இருந்து கடும் போக்கு என்ற வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதில்லை.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் காந்தி தலைமையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கையில், பிரித்தானியரின் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்காக ஆயுதம் ஏந்தியவர்களை காந்தி வன்போக்காளர்களாக சித்தரித்திருந்தார். ஆயினும் அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

இது ஒரு உதாரணம் மட்டுமே. கியூபா, தென்னாபிரிக்கா, வியட்னாம், தென்சூடான், பலஸ்தீனம், சீனா போன்ற நாடுகளில் அரசியலும், ஆயுதப்போராட்டமும் இரண்டறக் கலந்து இருந்தது. இதில் மென்போக்கு, வன்போக்கு என்ற பிரிவினை ஏதுமில்லை.

இருப்பினும் அந்த அந்த நாட்டின் ஆளும் வர்க்கங்கள் அனைவரையுமே வன்போக்காளர்களாகவே சித்தரித்து இருந்தன. பின்னர் அவர்கள் அனைவரும் தலைவர்களாக அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டனர். மக்களுக்கான தங்கள் போராட்டங்கள் வெற்றி பெற்றதும் இன்று வரை அவர்கள் மக்கள் தலைவர்களாக போற்றப்படுகின்றனர். சர்வதேசமும் அவர்களுக்குரிய மதிப்பை வழங்கி வருகின்றது. தமிழ் தேசிய இனத்தின் உரிமைகள் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே படிப்படியாக பறிக்கப்பட்டு வந்துள்ளது.

அதற்கு எதிராக தமிழ் தேசிய இனத்தின் குரலும் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. சிங்கள பௌத்த மேலாண்மைவாதம் தனது அரசியல் இருப்பிற்காக தமிழினத்தின் குரலை நசுக்குவதற்கு காட்டிய முனைப்புக்களின் அளவுக்கு ஏற்ப தனது சக்திக்கு உட்பட்டு தமிழ் தேசிய இனம் தனது உரிமைகளை வென்றெடுப்பதற்கு போராடி வந்திருக்கின்றது. இவைகள் அனைத்துமே சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளால் கடும்போக்காகவே வரையறை செய்யப்பட்டும் வந்திருக்கின்றது. இதன்காரணமாகவே ஒரு கட்டத்தில் ஆடும் ஓநாயும் ஒரே கொட்டிலில் தங்கியிருக்க முடியாது என்று தமிழ் தலைமைகள் தெரிவித்திருந்தன. அப்போதைய தமிழ் தலைமை ஆயுதமேந்தியிருக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

சுதந்திரத்தின் பின்னர் பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து விடலாம் என்று எண்ணி செயற்பட்ட தமிழ் தலைமைக்கு சிங்கள பௌத்த மேலாதிக்கம் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று பட்டம் சூட்டியே தனது அரச இயந்திரத்தின் மூலம் ஆயுத முனையில் அவர்களின் குரல்களை நசுக்கியது. இதில் தமிழ் தலைமை பிரயோகித்தது மென்போக்கு வாதமா??, கடும்போக்கு வாதமா??

தங்களுக்காக, தங்களின் சந்ததிக்காக, வருங்கால சந்ததிக்காக குரல் கொடுத்து தமிழ் தேசிய இனத்தின் அடையாளத்தை நிலைநிறுத்தப் பாடுபடும் தலைவர்களை இராணுவ பலம் கொண்டு அடக்கி ஒடுக்க துடிக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தது கடும்போக்கு வாதமா??, மென் போக்குவாதமா??

இளைஞர்களின் எழுச்சியைக் கண்டு 1976 இல் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் தமிழர்களுக்கான தனியரசை உருவாக்குவோம் என்று பிரகடனப்படுத்தியது கடும்போக்கு வாதமா??, மென்போக்கு வாதமா?? இதனை அடைவதற்கு நாம் நேரடி நடவடிக்கை உட்பட சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று தெரிவித்தது கடும்போக்கு வாதமா??, மென்போக்கு வாதமா??

1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் தங்களிடம் வந்த இளைஞர்களை நோக்கி ஐயாயிரம் இளைஞர்களை திரட்டி வாருங்கள். அவர்கள் எதற்கும் தயாரானவர்களாக இருக்க வேண்டும். அப்படி வருகின்றவர்களுக்கு நாம் எமது பதவியைப் பயன்படுத்தி ஆயுத பயிற்சி முதல் அனைத்தையும் வழங்கி எமக்கான நாட்டை உருவாக்குவோம் என்று அமிர்தலிங்கம் தெரிவித்தது வன்போக்கு வாதாமா??, மென்போக்கு வாதமா?? இந்த விடயங்களைத் தொடர்ந்து கலவரம் என்ற பெயரில் தமிழ் தேசிய இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் எதனடிப்படையில் நிகழ்ந்தது.

அது இலங்கை அரசாங்கத்தின் மென்போக்கா?? வன்போக்கா?? மேற்சொன்ன பின்புலங்களை அடிப்படையாக் கொண்டே தமிழ் தேசிய இனத்தின் விடுதலையை வென்றெடுப்பதாக இருந்தால் அரச வன்முறைக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானவைகளே ஆயுதப் போராட்ட அமைப்புக்கள். இந்த அமைப்புக்களின் தோற்றமானது காலத்தின் தேவையாகவும், இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு பதில் அளிப்பதாகவும் இருந்தன.

இதன்விளைவாகவே சர்வதேச சமூகமும் தமிழ் தேசிய இனப்பிரச்சனையில் கரிசனை கொள்ள ஆரம்பித்தது. இதன் முதல்கட்டமாக இந்தியா தனது நேரடி தலையீட்டை செலுத்தி தென்னிலங்கையில் இருந்து அடித்து விரட்டப்பட்ட அகதிகளை கப்பல் மூலம் இலங்கையின் வடக்கு ? கிழக்கு பகுதிக்கு அனுப்பி வைத்ததுடன், தனது நாட்டிற்கு வர விரும்புவர்களையும் அழைத்துச் சென்றது. அதன் தொடர்ச்சியாக ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்திய தமிழ் தலைமைகள் ஆகியோரை ஒரே மேசையில் அமர வைத்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவர்த்தையில் ஈடுபடுவதற்கும் வழியை ஏற்படுத்தியது.

இதன் விளைவாகவே இந்திய ? இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதனூடாக இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு மாகாண அரசும் உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் விடுதலைப் புலிகளினது ஆயுதப் போராட்டம் வலுப்பெற்றிருந்த போது சர்வதேச சமூகம் தலையிட்டு இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகியோரை ஒரே மேசையில் அமரச் செய்து பேச்சுக்களை நடத்தியிருந்தது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்குரலை வென்றெடுப்பதற்கு தமிழ் தேசிய இனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு சர்வதேச சமூகம் முன்வந்துள்ளது.

சர்வதேச சமூகத்தின் இத்தகைய ஆதரவுடன் தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்குரலை வென்றெடுப்பதற்கு, முன்னர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு ஜனநாயக வழிக்கு திரும்பிய அமைப்புக்களும், தொடக்கத்தில் இருந்தே பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக குரல் கொடுத்து வந்த கட்சிகளும் பாடுபட்டு வருகின்றன.

தனிநாடு என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தாமல் இணைந்த வடக்கு ? கிழக்கை பாரம்பரிய வாழிடமாகவும், தமக்கென்று ஒரு மொழி- கலாசாரம்- பண்பாடு என்பவை இருப்பதன் அடிப்படையிலும், தாம் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமக்கு சுயநிர்ணய உரித்து சர்வதேச சட்ட நியமங்களின் அடிப்படையில் உள்ளதென்பதை வலியுறுத்தியும் தமது நிலப்பகுதியில் ஒரு சமஸ்டி ஆட்சி முறையை ஒருமித்த குரலில் கோரி வருகின்றனர்.

இன்றைய தமிழ் தேசிய இனத்திற்கான அரசியல் சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் செயற்திறன் போதுமான அளவிற்கு இல்லை என்று தெரிவித்து உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையும், அதன் இணைத்தலைவரான வடக்கு மாகாண முதலமைச்சரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் மேற்சொன்ன விடயத்தை கோரி வருகின்றனர்.

சமஸ்டி ஆட்சிமுறையை உருவாக்குவாக்குவதையும் நோக்கமாக கொண்டே ஒட்டுமொத்த இலங்கைக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகின்றது. இதற்காக வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கையானது சமஸ்டிக் கோரிக்கைளைய தெளிவாக முன்வைக்கவில்லை என்று தமிழ் மக்கள் பேரவை, தமிழ் சட்டத்தரணிகள் சங்கம், வடக்கு முதலமைச்சர், தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் ஈழமக்கள் புரட்கர விடுதலை முன்னனி ஆகியன தெரிவித்து வருகின்றன. மறுபுறம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக் கட்சியினர் இதற்குள் சமஸ்டி ஒழிந்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

அரசாங்க தரப்பில் ஒற்றையாட்சிக்கு உட்பட்டே இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படும் என்றும், பௌத்திற்கு முன்னுரிமை என்பதையும், வடக்கு ? கிழக்கு இணைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவில்லை என்றும் தெரிவித்து வருகின்றது.

இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது அடிப்படை விடயங்களில் விட்டுக் கொடுப்பின்றி அனைத்து மக்களும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பமாகும். இதுவே நாட்டின் நிரந்தர அமைதிக்கும், சமாதானத்திற்கும், அபிவிருத்திக்கும் வழி சமைப்பதாகவும் இருக்கும். சமரசம் செய்து கொள்ள முடியாத விடயங்களில் உறுதியாக நின்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக சர்வதேச சமூகத்திடம் எங்களுக்கு இவைகள் வேண்டும் என்று சொல்வதால் எத்தகைய பலன் விளையப்போகிறது.

ஒரு புறம் தீர்வு இருப்பதாக சொல்லிக் கொண்டு மறுபுறம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு வேண்டும் என்று சொல்வது மக்களை குழப்புவதாகவே அமைகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அன்றாட பிரச்சனை முதல் அரசியல் தீர்வு வரை தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய இனத்தை அணிதிரட்டி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காமல், அத்தகைய அழுத்தமானது கடந்த ஆட்சியாளர்களை மீண்டும் பதவிக்கு கொண்டு வந்து விடும் என்று தெரிவித்து வரும் சூழலில் சர்வதேச சமூகத்தினரிடம் அந்த விடயங்களை நிறைவேற்றுமாறு கோருவது வேடிக்கையானது. உதாரணமாக மக்களின் காணிகள் மீண்டும் அவர்களிடமே கையளிக்கப்பட வேண்டும் கூட்டமைப்பின் தலைவர் சர்வதேசத்திடம் கோரிக்கை வைக்கிறார். கூட்டமைப்பின் பேச்சாளரோ முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு மேல் விடுவிப்பதற்கு சாத்தியமில்லை என்று கூறுகின்றார்.

கூட்டமைப்பின் தலைவர் அரசியல் கைதிகள் அரசியல் ரீதியாக தீர்க்க வேண்டும் என்று கூறுகின்றார். பேச்சாளர் அதற்கு சட்ட விளக்கம் கொடுக்கிறார். ஆக, கட்சிக்குள்ளும் ஒருமித்த நிலைப்பாடு இன்றி அரசாங்கத்திற்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் இருந்து கொண்டு, அரசாங்கம் காலதாமதம் செய்வதானது கடும் போக்காளர்களின் கைகளை ஓங்கச் செய்து விடும் என்று கூட்டமைப்பின் தலைவர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சிங்கப்பூர் பிரதமர், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் உள்ளிட்ட சர்வதேச இராஜதந்திரிகளிடம் சொல்வதன் மூலம் இவர் கடும்போக்காளர்களாக யாரை காட்ட முயல்கிறார்.

தேர்தல் மேடைகளில் கூட்டமைப்பினர் முன்வைக்கும் அதே விடயங்களையே தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ் தேசியப் பேரவை என்பனவும் தமிழ் தேசிய இனம் சார்ந்த விடயங்களில் முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் திரு சம்மந்தன் யாரை கடும் போக்காளர்கள் என்று குறிப்பிடுகின்றார்??. அரசாங்கத்தை பலவீனப்படுத்தி விடக் கூடாது என்பதிலும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கின்ற ஒருவர் தேர்தல் மேடைகளில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்.

மற்றையவர்கள் எப்பொழுதுமே அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து, அதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் கோருகின்றனர். இந்த நிலையில் சம்மந்தர் எதை கடும் போக்கு என்று சொல்கிறார்..? அதற்கான வரையறை தான் என்ன??
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.