head


தேர்தல் களம்

- பழைய பணியாரமும் தமிழர்களும் தலைக்கு மேலே கத்தி

- கருணாகரன்


|Thu 08th Feb 2018 09.00AM|General| Page Views : 60

நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் வடக்குக் கிழக்கில் தமிழ்த்தரப்பை விட நான்கு தேசியக் கட்சிகள் போட்டியிடுகின்றன. ஒன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி. மற்றது ஐ.தே.க. மூன்றாவது மகிந்த ராஜபக்ஸ அணி. நான்காவது ஜே.வி.பி.

வழமையை விட இந்தக் கட்சிகளின் வலுத்தன்மை இந்தத் தடவை அதிகமாகவே உள்ளது. வடக்குக் கிழக்கில் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் மட்டுமல்ல, தமிழ்ப்பிரதேசங்களிலும் இவற்றின் செல்வாக்கு கூடுதலாகத் தெரிகிறது.

இதற்கு முக்கியமான காரணம், தமிழ்த்தரப்பின் அரசியல் குழப்பங்களும் தேக்கங்களுமாகும். எந்தத் தரப்பை ஆதரிக்கலாம், யாருக்கு வாக்களிக்கலாம் என்ற குழப்பம் பொதுவாக்காளர்களிடம் உள்ளது. கட்சி சார்ந்தவர்களுக்கும் வேட்பாளர்களைச் சார்ந்தவர்களுக்கும் இந்தப் பிரச்சினையில்லை.

ஆனால் அரசியல் சூழல், நிலைமை, தங்களுடைய தேவைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றை வைத்து மதிப்பிட்டு வாக்களிக்கும் பொது வாக்காளர்களின் தெரிவே எப்போதும் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதுண்டு. அதுவே தேர்தல் வெளிப்பாடுமாகும்.

கடந்த வாரம் என்னிடம் மூத்த ஊடகவியலாள நண்பர் ஒருவர் சொன்னார், ?நான் இந்தத் தடவை ஜே.வி.பிக்கு வாக்களிக்கப்போகிறேன்? என. இதற்கு முன்னெப்பொழுதும் அவர் இப்படிச் சொன்னதில்லை. மட்டுமல்ல, தமிழ்க்கட்சிகளுக்கே அவர் வாக்களித்து வந்தார். இந்தத் தடவை அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்குக் காரணம் என்ன என்றறிய அவரிடம் கேட்டேன், ?ஏன் இந்த முடிவு?? என.

?தமிழ்த்தரப்பில் யாருக்கு வாக்களிக்கலாம் என்று சொல்லு பாப்பம்? எல்லாரும் ?தீராத நோயாளி?களாகவே இருக்கினம்? இவைக்கு என்ரை வாக்கைச் செலவழிக்கிறதுப் பதிலாக இலங்கை முழுவதிலும் ஒரு நேர்மையான ஆட்சியைக் கொண்டு வர விரும்புகிற தரப்புக்கு (ஜே.வி.பிக்கு) வாக்களிக்க விரும்புகிறன். வடக்கிலயும் தங்களுக்கு ஆதரவிருக்கு எண்டதுக்கு ஜே.வி.பிக்கு ஒரு அடையாளமாக இது இருக்கட்டும்? என்றார் அவர்.

இதைப்போல வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் தமிழ்த்தரப்பு அல்லாத பிற கட்சிகளைப் பலரும் ஆதரிக்கிறார்கள். தேர்தல் முடிவுகளில் இதைத் தெளிவாக அடையாளம் காண முடியும். ஆக, இந்த உள்ளுராட்சித் தேர்தலானது தமிழ் அரசியல் தரப்புகள் தம்மை மீள் பார்வைக்குப் பல தளங்களிலும் மறுபார்வைக்குட்படுத்த வேண்டியிருக்கும்.

நிறைவேறாத அல்லது நிறைவேற்றக் கடினமான அரசியல் கோரிக்கைகள் அல்லது நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் தமிழ்க்கட்சிகளை இளைய தலைமுறையினர் அதிருப்தியுடன் நோக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு தொகுதியினர் தீவிர அரசியலை எதிர்பார்க்கின்றனர். முதியவர்கள் மட்டும் சரியோ பிழையோ தங்களுடைய வழித்தடத்திலிருந்து விலகாமல், தமிழ் அடையாளத்தைப் பற்றிச் சிந்திக்கின்றனர். எனவே தேர்தல் முடிவுகள் குழப்பகரமாகவே அமையப்போகின்றன.

தமிழ்த்தரப்பை ஒருங்கிணைக்கக் கூடிய எந்தப் புள்ளியும் மையங்கொள்ளவில்லை இந்தத் தேர்தலில். பொதுவாகவே தேர்தல் முடிவுகள் கட்சிகளை உள்ளாய்வுக்குட்படுத்துவதுண்டு. அப்படிச் செய்யும்போதே அடுத்த கட்ட நகர்வைச் சரியாகச் செய்ய முயும். இது ஒரு விஞ்ஞானச் செயல்முறை. ஆனால், இந்த உள்ளாய்வு அல்லது மீளாய்வு சரியாகச் செய்யப்படாமல் பிறரின் மீது பழியைச் சுமத்துவதாகவே அமைந்து விடுவதுமுண்டு. தவறுகளை ஏற்றுச் சீர்செய்யத் தயாரில்லாத மனப்பாங்கின் வெளிப்பாடு இதுவாகும். தமிழர்களிடத்திலே இது மேலோங்கிய குணமாக உள்ளது.

இத்தகைய விளைவின் வெளிப்பாடே தமிழ்த்தரப்பு அல்லாத பிற தேசியக் கட்சிகளின் வலுவாக்கம் வடக்குக் கிழக்கில் உருவாகக் காரணமாகிறது. இதை சிங்கள எதிர்ப்பு மனோ நிலையுடன் இந்தப் பத்தி அணுக முற்படவில்லை. பதிலாக தமிழ்த்தரப்பில் தொடர்ந்து நீடிக்கின்ற அரசியற் சிந்தனையின் - செயற்பாடுகளின் பலவீனத்தைக் குறித்து கவனப்படுத்தவே இந்தப் பத்தி முற்படுகிறது.

வடக்குக் கிழக்கில் பொதுவான சில அரசியல் அடையாளங்களை முன்னிறுத்தியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசியப் பேரவையும் தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பும் போட்டியிடுகின்றன. தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை, அரசியல் தீர்வு தொடர்பாக இவை மூன்றும் வெவ்வேறு நிலைப்பாடுகளையும் அணுகுமுறைகளையும் கொண்டுள்ளன.

எளிய உதாரணம், புதிய அரசியலமைப்புக்கான உத்தேச வரைபான இடைக்கால அறிக்கையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராட்டுகிறது. தமிழ்த்தேசியப் பேரவையும் தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பும் எதிர்க்கின்றன.

இதேவேளை தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பும் தமிழ்த்தேசியப் பேரவையும் ஒன்றாகவும் இல்லை. ஆனால், இவை மூன்றும் முன்பு ஒரே நிலைப்பாட்டோடு, ஒரே அணியிலிருந்து கொண்டு ஒரே அரசியல் கோரிக்கையை முன்வைத்தவை. இன்று - 2010 க்குப் பிறகு இப்படித் தனித்தனியாகப் பிரிந்து பிளவுண்டிருக்கின்றன. இதெல்லாம் சனங்களிடையே குழப்பங்களை உண்டாக்கியுள்ளது. போதாக்குறைக்கு தமிழ்த்தேசியப் பேரவை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என இவை கொண்டுள்ள பெயரும் பெருங்குழப்பத்தை உண்டாக்கக்கூடியதாகவே உள்ளது.

எல்லாமே தேர்தல் திருவிழாவுக்காக விரிக்கப்பட்ட காப்புக்கடையைப்போல ?தமிழ்த்தேசியம்? என்ற அடையாளத்தை மட்டும் கொண்டிருக்கின்றன. நடைமுறை யதார்த்தம் குறித்து இவை எத்தகைய விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இதைவிட வேறு குழப்பங்களும் உண்டு. இன்னும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராகவும் தமிழரசுக் கட்சிச் சின்னத்திலேயே வெற்றியீட்டியவராகவும் இருக்கிறார் சிவசக்தி ஆனந்தன்.

இதேபோலத்தான் வடமாகாணக் கல்வி அமைச்சராக இருக்கும் சர்வேஸ்வரனும். ஆனால், இவர்கள் தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிராக, தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் நின்று பரப்புரையில் ஈடுபடுகிறார்கள். இன்னொரு முனையில் வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தான் எந்தத் தரப்புக்கும் ஆதரவில்லை என்று தனித்து நிற்கிறார். வெளிப்படையாக விக்கினேஸ்வரன் தன்னுடைய ஆதரவைக் கூற வேண்டும் என்று கட்டளையிடுவதற்கோ வலியுறுத்திச் சொல்வதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் முடியவில்லை. விக்கினேஸ்வரனும் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாகக் கூற முடியாதிருக்கிறார்.

?இப்படியே தொடர்ந்தும் மதில் மேல் பூனையாக விக்கினேஸ்வன் இருக்க முடியாது. தேர்தல் நெருங்கி விட்டது. அவர் தன்னுடைய நிலைப்பாடு என்னவென்று சொல்ல வேண்டும்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லாது விட்டாலும் பரவாயில்லை. வழிகாட்டியாகத் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்க வேணும். அந்தத் துணிவில்லை என்றால், அதற்கான பொறுப்பும் பதவியும் தலைமையும் அவரிடம் இல்லை என்றே அர்த்தமாகும்? என்று கவலையோடு கடிந்து கொள்கிறார் விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்ட மூத்த போராளி ஒருவர்.

எனவே இத்தகைய குழப்பமான ? பலவீனமாக இருக்கும் தமிழ் அரசியல் களத்தையிட்டுச் சலித்துப் போயிருக்கின்றனர் சனங்கள். இதனால் அவர்கள் முடிந்த அளவுக்கு வெவ்வேறு நிலைப்பட்ட தெரிவுகளைச் செய்யப்போகிறார்கள். அப்படித் தெரிவு செய்யப்படும்போது வழமையை விட அதிகமான ? மாறுதலானதொரு கணிதம் வடக்குக் கிழக்கில் தெரியும்.

மறுவளமாகச் சில இடங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (வீடு) செல்வாக்குப் பெறும். சில இடங்களில் தமிழ்த்தேசியப் பேரவை (சைக்கிள்) வெற்றியடையும். சில இடங்களில் தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு (உதயசூரியன்) முன்னிலை அடையும். சில இடங்களில் சுயேச்சைக் குழுக்கள் வெற்றியடையக் கூடிய சாத்தியங்கள் உண்டு. ஆக மொத்தத்தில் எந்தத் தரப்பும் பலமாக முடியாத சூழலே காணப்படுகிறது. ஒட்டுமொத்தமாகத் தமிழ்த்தரப்பின் வீழ்ச்சி துலக்கமாகத் தெரிகிறது. இது புதியதொரு அரசியல் விளக்கத்தைத் தமிழ் மக்களுக்குக் கொடுக்கப்போகிறது.

நீண்டகாலமாகவே தமிழ் மக்கள் தங்கள் பெரும்பான்மை ஆதரவைப் பிரயோகித்து, ஒரு கட்சியை அல்லது ஒரு இயக்கத்தை அடையாளப்படுத்தி வந்திருக்கின்றனர். முன்பு தமிழரசுக் கட்சி. பிறகு தமிழர் விடுலைக் கூட்டணி. அதற்குப் பிறகு புலிகள். பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. இந்தக் கணிதம் இந்தத் தடவை மாறப்போகிறது. இதற்குக் காரணம் தமிழ்த் தேசியவாதக் கட்சிகளே. அவற்றின் பலவீனமே.

இதை தேர்தலுக்குப் பிறகாவது இவை மீளாய்வு செய்து கண்டறியுமா? கண்டறிந்து தம்மைச் சீர்ப்படுத்திக் கொள்ளுமா? அல்லது பழைய பணியாரத்தையே திரும்பத்திரும்பச் சுட்டுக் கொண்டிருக்குமா? அந்தப் பழைய பணியாரத்துடன் இன்னும் எவ்வளவு காலம்தான் தமிழர்கள் மாய்ந்து கொண்டிருப்பது?
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.