head


குற்றச்செயல்களில் 2-ம் இடத்தில் சென்னை மாநகரம்!

|Sun 11th Feb 2018 08..55AM|Crime| Page Views : 21

மத்திய அரசின் தேசியக் குற்றப்பதிவு ஆணையம் அளித்துள்ள புள்ளிவிவரப்படி சென்னை மாநகரம் குற்றச்செயல்களில் 2 ஆம் இடம் பெற்றிருப்பதற்கு கவலை தெரிவித்துள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக அரசு மக்களுக்கு பாதுகாப்பை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசின் தேசியக் குற்றப்பதிவு ஆணையம் அளித்துள்ள புள்ளிவிவரத்தையும், தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றச்செயல்களையும் தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொண்டு, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, தமிழக மக்களுக்கான பாதுகாப்பை தொடர் கண்காணிப்பின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

2017-ல் மத்திய அரசின் தேசியக் குற்றப்பதிவு ஆணையம் அளித்துள்ள புள்ளிவிவரப்படி நம் நாட்டில் உள்ள தென்மாநிலங்களில் நடைபெறும் குற்றச் செயல்களில் 2-ம் இடத்தில் இருப்பது தமிழகத்தின் சென்னை மாநகரப் பகுதி என்பதை தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக தமிழகம் முழுவதும் ஆள்கடத்தலில் ஈடுபட்டோர் தொடர்பாக சுமார் 434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வெடிபொருட்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துதல், உயிர் சேதம் ஏற்படுத்துதல், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுதல், குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள், குழந்தைகளே குற்றச்செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றில் இந்தியாவிலேயே தமிழகத்தின் சென்னை மாநகரப் பகுதி 2-ம் இடத்தில் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

மேலும் கடந்த 2016 -17ல் சென்னை மாநகரப் பகுதியில் மட்டும் நடைபெற்ற சுமார் 133 கொலைகள் சம்பந்தமான வழக்குகளும், பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக 25 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பது புள்ளிவிவரத்தில் தெரியவருகின்றது.

அது மட்டுமல்ல தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கிராமப் பகுதிகள் முதல் பெரிய நகரப் பகுதி வரை கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு போன்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகையை குற்றச் செயல்களை தடுக்கும் விதமாகவும், மேலும் தொடராத வகையிலும் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பு, ரோந்து போன்ற 24 மணி நேரப் பணிகளை மேற்கொண்டு கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

முக்கியமாக மத்திய அரசின் தேசியக் குற்றப்பதிவு ஆணையம் அளித்துள்ள புள்ளிவிவரப்படி சென்னை மாநகரம் குற்றச்செயல்களில் 2 ஆம் இடம் பெற்றிருப்பதாக வெளிவந்திருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னையில் ரவுடிகள் கூட்டிய கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

இப்படி ரவுடிகள் ஒரு துணிச்சலான கூட்டத்தை சென்னையில் நடத்துவதற்கு தமிழக அரசின் சட்டம் ஒழுங்கின் மீது குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு பயம் இல்லை என்ற தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறது.

அது மட்டுமல்ல 150 க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூடிய கூட்டத்தை நெருங்கிய காவல்துறையினர் சுமார் 75 பேரை பிடித்திருக்கிறார்கள்.

இருப்பினும் தப்பிச்சென்ற மீதமுள்ள அனைத்து ரவுடிகளையும் கண்டுபிடிக்க காவல் துறை தீவிர நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு காலம் தாழ்த்தாமல் அவர்கள் அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டும்.

குறிப்பாக சென்னையில் கூடிய ரவுடிகள் அனைவரையும் கைது செய்வதோடு, சட்டத்திற்கு உட்பட்டு அனைவருக்கும் உரிய தண்டனையை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருப்பவர்களையும், குற்றச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்போரையும் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், தமிழக மக்களுக்கு பாதுகாப்பை தொடர்ந்து வழங்கவும் தமிழக அரசு அனைத்து கடுமையான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.