head


முதலாளித்துவத்தைத் திருத்துமா கொரோனா நெருக்கடி? - ரகுநாத்

|Sat 28th Mar 2020 9:00 AM|General| Page Views: 1

கொரோனா மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளை மட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டுவரவும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் வரலாறு காணாத அளவிற்கு செலவு செய்யபோவதாக அறிவித்துள்ளன. வேறுவழியில்லை, இது காலத்தின் கட்டாயம். ஆனால், கொரோனா வைரஸ் ஒரு உலகளாவிய தொற்று (global pandemic) என்று உருவெடுத்துள்ள நிலையில் இந்த அசாதாரண சூழலை சமாளிக்க உலக நாடுகள் தனித்தனியாக மட்டும் செயல்பட்டால் போதாது என்று தோன்றுகிறது.

முதலாளித்துவத்தின் இயக்கவிதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்தால்தான் இதுபோன்ற பெரும் நெருக்கடிகளைத் தவிர்க்கவும், அதையும் மீறி நெருக்கடி ஏற்படும்பட்சத்தில் அரசுகள் திக்குமுக்காடாமல் துரிதமாக செயல்படுவதற்கும் வழிசெய்ய முடியும் எனும் கருத்து பரவலாகப் பகிரப்படுகிறது.

கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் உலகெங்கும் அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டபோதெல்லாம் பெரும்பாலும் அதற்குக்காரணமாக இருந்தது முதலாளித்துவத்தின் பலவீனங்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆக, தற்போது நடந்துகொண்டிருக்கும் போர், கொரோனாவிற்கு எதிரான போர் மட்டுமல்ல; முதலாளித்துவம் சீர்குலைந்து போகாமல் அதைப் பாதுகாக்க அரசுகள் நடத்தும் பொருளாதாரப் போராட்டமும்கூட.

1980களுக்கு பிறகு, அரசுகள் பொருளாதார நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது; தனியார் மீது போடப்படும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக்கொள்ள வேண்டும்; சந்தையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் போன்ற கருத்தாக்கங்கள் வலுப்பெற்றன. அவ்வப்போது சந்தையின் செயல்பாட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அந்தத் தருணங்களில் மட்டும் அரசு இடையீடு செய்து பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டது.

செயல்திறன் இல்லாததால் அரசு பொருளாதாரத்தில் தன்னுடைய பங்கைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னவர்கள், 2008 இல் உலகப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை நோக்கி நகராமல் இருக்க அதே அரசின் உதவியைத்தான் நாடினர். மக்களின் வரிப்பணத்தில் முதலாளித்துவத்தை மேற்கத்திய நாடுகளின் அரசுகள் காப்பாற்றின; மக்களைக் கண்டுகொள்ளாமல் விட்டன.

வளர்ந்த நாடுகளிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பன்மடங்கு அதிகரித்திருப்பதைப் பற்றிய விவாதங்கள் கடந்த பத்தாண்டுகளில் நடந்தன. ஆனால், தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

தொழில்நுட்ப மாற்றங்களால் பணிப்பாதுகாப்பும், சமூகப்பாதுகாப்பும் நிச்சயமற்றதாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் பல மேற்கத்திய நாடுகள் மக்கள் நலனுக்கு அத்தியாவசியமான செலவுகளைத் தொடர்ந்து வெட்டிக்கொண்டே வந்துள்ளன. இங்கிலாந்தின் அனைவருக்குமான இலவசமான பொது சுகாதார சேவைக்கான செலவுகள் குறைக்கப்பட்டு, அந்த களத்தில் லாப நோக்கோடு இயங்கும் தனியார் நிறுவனங்களை சேவைகளை வழங்க அரசு அனுமதித்தது. அமெரிக்காவின் சுகாதார அமைப்பு தனியார்மயத்தின் உச்சக்கட்டம்.

லாபத்தை மையப்படுத்தி இயங்கும் தனியார்மயமான சுகாதார அமைப்புகள், ஒரு பொது சுகாதார அவசரநிலையை பொதுநல நோக்கோடு அணுகும் என்று எதிர்பார்க்க முடியுமா? இதுபோன்ற நேரங்களில்தான் பொருளாதார ஏற்றத்தாழ்வின் வெளிப்பாடுகள் அப்பட்டமாகத் தெரியும். காசு உள்ளவர்கள் மருத்துவம் பெற்றுக்கொள்வார்கள்.

ஆனால், காசு இல்லாதவர்களால் மருத்துவ சேவைகளையும் பெற முடியாது; வீட்டில் இருந்துகொண்டு physical distancing-ஐ கடைப்பிடிக்க முடியாது. அவர்கள் பிழைப்பிற்காக வேலை செய்தே ஆக வேண்டும் என்று கிளம்பினால் வேலையும் இருக்காது; வெளியே நடமாடும் அவர்கள் தொற்றைப் பெற்று, அதைப் பரப்பவும் செய்வார்கள். அதன் விளைவாக பொது சுகாதார நெருக்கடி தீவிரமடையும்; பொருளாதாரப் பரிவர்த்தனைகள் ஸ்தம்பித்துப் போகும்.

மனிதகுலத்தை முதலாளித்துவம் காப்பற்றுமா, இல்லை, மீண்டுமொருமுறை மனிதகுலம் முதலாளித்துவத்தைக் காப்பற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.