head


வென்டிலேட்டரை துண்டிப்பது என் பணி - நெருக்கடிநிலையை விவரிக்கும் செவிலியர் - சுவாமிநாதன் நடராஜன்

|Thu 23rd Apr 2020 07:00 AM|| Page Views: 22

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உயிருடன் இருக்கிறார்களா இறந்து விட்டார்களா என்ற வித்தியாசத்தை வென்டிலேடர்கள் செயல்படுவது வைத்துத்தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் சமயத்தில் இந்த செயற்கை சுவாசக் கருவிகளாலும் சிலரின் உயிரைக் காப்பாற்ற முடியாது.

வென்டிலேட்டர்களை ஆஃப் செய்வது ஜுவானிதா நிட்லாவின் பணிகளில் ஒன்றாகும். லண்டனின் ராயல் ஃபிரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தலைமை செவிலியராக ஜுவானிதா பணிபுரிகிறார்.

லண்டனின் தேசிய சுகாதார சேவையில் தீவிர சிகிச்சை பிரிவில் நிபுணத்துவம் பெற்ற செவிலியராக 16 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார்.

இந்த பணி வலி மிக்கதாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது என 42 வயதாகும் ஜுவானிதா வருத்தம் தெரிவிக்கிறார்.

சில நேரங்களில் ஒருவர் மரணிக்க நானும் ஒருவிதத்தில் காரணமோ என்று தோன்றுகிறது, என்கிறார்.

கொரோனா வைரசால் நுரையீரல் செயலிழக்கும்போது உடலில் சுவாசத்தை சீர் செய்ய வென்டிலேட்டர்கள் உதவும்.

வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழிக்கத் தேவையான கால அவகாசம் வரை இந்த வென்டிலேட்டர்கள் சிலருக்கு உதவியாக இருக்கும், சிலருக்கு சுவாச கருவிகள் பயன் அளிக்காது.

உடல்நிலையில் முன்னேற்றம் அடையாத நோயாளிகளுக்கு எப்போது வென்டிலேட்டர் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்வதில் மருத்துவக் குழுவினர் பெரும் சங்கடத்தை எதிர்கொள்கின்றனர்

நோயாளியின் வயது, வைரஸ் தொற்று எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது, ஏற்கனவே உடலில் உள்ள பிரச்சனைகள், முழுமையாக குணமடைய எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பது போன்ற காரணிகளை ஆராய்ந்து செயற்கை சுவாச உதவியைத் துண்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் ஒரு நாள் காலை பணிக்கு வந்தவுடன் ஜுவானிதாவுக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டது. கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து கொண்டிருந்தார்.

அவருக்கு 50 வயதாகிறது. ஆனால் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் வென்டிலேட்டரை நிறுத்த வேண்டும் என தீவிர சிகிச்சை பிரிவின் பதிவாளர் ஜுவானிதாவுக்கு உத்தரவிட்டார்.

எனவே ஜுவானிதா வென்டிலேட்டரின் உதவியைத் துண்டிப்பதற்கு முன்பு உயிரிழக்கும் தருவாயில் உள்ள செவிலியரின் மகளுக்கு தொலைப்பேசி மூலம் அழைப்பு விடுத்து செயற்கை சுவாச உதவியை நிறுத்தப் போவதாகக் கூறினார்.

அந்த சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

எனவே ஜுவானிதா பாதிக்கப்பட்ட செலிவியரின் மகளிடம் அனைத்து விவரங்களையும் கூறி, மருத்துவமனை தரப்பில் இருந்து என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், உயிரிழக்கும் செலிவியரின் கடைசி ஆசைகள் என்ன, இறுதி மூச்சு நிற்கும்போது தங்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் ஏதாவது இருக்கிறதா என்பனவற்றைக் கேட்டறிந்தார்.

உயிரிழக்கும் தருவாயில் உள்ள செலிவியரின் மகள், தொலைபேசி மூலம் தன் தாயிடம் இறுதியாக ஒரு முறை பேசினார். உயிரிழக்கும் தருவாயில் உள்ள அவரின் தாயின் செவிகளில் அவர் மகள் பேசியது கேட்டிருக்கும் என்றே நம்புகிறேன் என்கிறார் ஜுவானிதா. வென்டிலேட்டர் உதவி துண்டிக்கப்பட்டு 5 நிமிடங்களில் படுக்கையில் இருந்த செவிலியரின் உயிர் பிரிந்தது.

இறுதியாக அவரின் குடும்பத்தினர் குறிப்பிட்ட பாடலையும் அவருக்காக மொபைலில் ஒலிபரப்பினோம். மருத்துவமனையில் பணியில் இருந்த அனைத்து செவிலியர்களும் சுற்றி அமைதியாக நின்றோம்.

அந்த வார்டில் சுற்றி இருந்த அனைத்து நோயாளிகளும் மயக்கத்தில் இருந்தனர். ஆனாலும் திரையிட்டு , பாதிக்கப்பட்ட செவிலியரின் படுக்கையை மறைத்துத்தான் வென்டிலேட்டரை ஆஃப் செய்தேன்.

உயிரிழந்த செவிலியரின் மகளிடம், அவரின் தாய் எந்த வலியும் அனுபவிக்காமல் அமைதியாகவே உயிர் பிரிந்தது என்பதையும் தெரிவித்தேன். அவரின் உயிர் பிரிந்தவுடனும் அவரின் மகள் தொலைப்பேசி மூலம் தொடர்ந்து பிராத்தனையில் ஈடுபட்டிருந்தார்.

நாங்கள்தான் அவரின் தாயின் உயிர் பிரிந்துவிட்டது, என்று கூறி தொலைபேசி அழைப்பை துண்டித்தோம்.

அவரின் உயிர் பிரியும் வரை அவரின் கைகளை இறுக்கி பிடித்திருந்தேன் என்கிறார் ஜுவானிதா.

பிறகு குடும்பத்தினர் விரும்பியவாறே மற்றொரு செவிலியரின் உதவியுடன், உயிரிழத்த செவிலியரின் உடலை படுக்கை அறையில் வைத்தவாறே குளிப்பாட்டினோம். நெற்றியில் சிலுவைக் குறியிட்டோம் .

பலர் உயிரிழப்பதை பார்க்க வேண்டிய இந்த நெருக்கடி நிலையில், அவர்களின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு அவர்களின் கடைசி ஆசையை கேட்டறிவதே ஆறுதலாக உள்ளது என்கிறார் ஜுவானிதா.

பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைகாக அனுமதிக்கப்படுவதால் தீவிர சிகிச்சை பிரிவில் 34 ஆக இருந்த படுக்கை வசதிகளை 60 ஆக விரிவுபடுத்தியுள்ளோம். மூன்று நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் வீதம் பணியில் ஈடுப்பட்டுளோம் என்கிறார் ஜுவானிதா.

இவரின் மருத்துவக் குழுவில் உள்ள பல செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டதாகக் கூறுகின்றனர். எனவே பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் செவிலியர்களை தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற அழைப்பு விடுதிருப்பதாக ஜுவானிதா கூறுகிறார்.

ஒவ்வொரு நாள் பணியைத் துவங்கும்போதும் அனைவரும் சேர்ந்து ஸ்டே சேஃப் என்று கூறி பணியை துவங்குவோம். ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறுவோம். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை உறுதி செய்துகொள்வோம். யாராவது கையுறைகளை அணியவில்லை என்றால் அவர்களுக்கு நினைவுப்படுத்துவோம் என்கிறார் ஜுவானிதா.

தற்போது வரை தினமும் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஒருவர் உயிரிழகின்றனர். எனவே மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்கிறார் ஜுவானிதா. தலைமை செவிலியராக பணியாற்றுவதால் சமயத்தில் தனது அச்சத்தை வெளிப்படுத்தாமல் மறைத்துக்கொள்வதாக கூறுகிறார்.

இரவில் தூங்க முடியவில்லை, கெட்ட கனவுகள் வருகின்றன. எனக்கும் கொரோனா வைரஸ் தொற்று வந்துவிடும் என்ற கவலை இருக்கிறது. எல்லோருமே அச்சத்தில் இருக்கிறோம். கடந்த ஆண்டு டி.பியால் பாதிக்கப்பட்டதால் பணியில் இருந்து நிறைய நாட்கள் விடுப்பில் இருந்தேன். எனவே எனது நுரையீரலின் திறன் குறைந்துள்ளதையும் நான் அறிவேன் என்கிறார் ஜுவானிதா.

இந்த நெருக்கடி நேரத்தில் பணிக்கு செல்ல வேண்டாம் என அனைவரும் எனக்கு ஆலோசனை வழங்குகின்றனர். ஆனால் என் பணியை நான் தொடர்ந்து செய்து வருகிறேன்.பணி முடிந்து மருத்துவமனை விட்டு வெளியே வரும்போது, அன்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் நினைவுக்கு வருகின்றனர். ஆனால் நினைவுகளை மறக்க முயற்சிக்கிறேன் என்கிறார் ஜுவானிதா

நன்றி :பிபிசி உலக சேவை



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.