head


தேர்தல் நெருக்கடி ? - யதீந்திரா

|Tue 05th May 2020 07:00 AM|Political| Page Views: 47

கொரோனா நெருக்கடியோடு சேர்த்து, இப்போது தேர்தல் நெருக்கடியும் அதிகரித்து வருகின்றது. பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

ஆரம்பத்தில் ஒவ்வொரு கட்சிகளை சேர்ந்தவர்களும், இது தொடர்ப்பில் அவ்வப்போது பேசி வந்தனர். தற்போது எதிரணியை சேர்ந்த அனைத்து கட்சிகளும் கூட்டாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

ஆனால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தரப்பினர் அதனை உறுதியாக நிராகரித்து வருகின்றனர். எக்காரணம் கொண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதில்லை என்னும் நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இதற்கிடையில், புதிய முறையில் தேர்தலை நடத்தப் போவதாக கோட்டபாய தெரிவித்திருக்கின்றார்.

ஆரம்பத்தில் தேர்தல் தொடர்பான இறுதி முடிவை தேர்தல் ஆணைக்குழுவே எடுக்கும், என்று தெரிவித்திருந்த கோட்டபாய, தற்போது மதத் தலைவர்களை கொண்டு நிலைமைகளை சமாளிக்க முற்படுவதுபோல் தெரிகின்றது. கொரோனா பிரச்சினைக்கு ஒரு முடிவு வரும் வரையில் தேர்தல் தொடர்பில் சிந்திக்க முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு முன்னர் தெரிவித்திருந்தது.

கொரோனா முற்றிலும் எதிர்பாராத ஒரு நெருக்கடி. கோட்;டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்குள் இவ்வாறானதொரு நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. உண்மையில் இப்படியொரு நெருக்கடியை கோட்டபாயவோ அல்லது அவரது கட்சியான பொதுஜன பெரமுனவோ, ஒரு போதுமே கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.

உண்மையில் இது கோட்டபாய மற்றும் பொதுஜன பெரமுனவை பொறுத்தவரையில் ஒரு பெரும் சவால். இந்தச் சவாலை தனித்து எதிர்கொள்வதன் ஊடாக, தங்களை மேலும் அரசியலில் பலப்படுத்திக் கொள்ள முடியுமென்னும் கணிப்பு அவர்களிடம் இருந்திருக்கலாம். ஏனைய நாடுகளோடு ஒப்பிட்டால், இலங்கையில், கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதுவரை ஏழு பேரே உயிரிழந்திருக்கின்றனர்.

இது ஒரு ஆறுதலான விடயம். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தால் மக்கள் மத்தியில் பதட்டம் அதிகரித்திருக்கும். மக்கள் பதட்டமடையும் போது, அவர்களது கோபம் ஆட்சியாளர்கள் மீதே திரும்பும். அப்படியானதொரு நிலைமை ஏற்பட்டிருந்தால், கோட்டபாய தொடர்பான சிங்கள அபிப்பிராயம் மாற்றமடைந்துவிடும்.

ஆரம்பத்தில் கொரோனா தொற்று, ஒரு கட்டுப்பாடான நிலையில்தான் இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை அப்படியில்லை. குறிப்பாக கடற்படையினர் மத்தியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதானது கோட்டபாயவை பொறுத்தவரையில் நெருக்கடியான நிலைமையாகும். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சியினர் சத்தமிடுகின்றனர்.

இதனை சமாளிக்க வேண்டுமாயின், தேர்தலை உடனடியாக வைக்க வேண்டும் – பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அரசியல் யாப்பில் இடமுண்டு என்று எதிர்க்கட்சியினர் வாதிடுகின்றனர். ஆனால் அதற்கு இடமில்லையென்று, பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். வழமையாக இவ்வாறான சூழலில் சத்தமிடும் கொழும்புமைய சிவில் சமூகத்தினர் வழக்கத்திற்கு மாறாக மிகவும் அமைதியாக இருக்கின்றனர்.

ஒரு வேளை இன்னும் சில தினங்களில் அவர்கள் மத்தியிலிருந்தும் அறிக்கைகள் வெளிவரலாம். தமிழ்ச் சூழலை பொறுத்தவரையில் சுமந்திரன் ஒருவர்தான் பாராளுமன்றத்தை கூட்டுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டிருந்தார். தேர்தலை வைப்பதற்கு இது உகந்த தருணமல்ல என்பதை தமிழ் மக்கள் கூட்டணியினரும் அவ்வப்போது வலியுறுத்தியிருந்தனர்.

உண்மையிலேயே தேர்தல் ஒன்றை வைப்பதற்கு இது உகந்த சூழலில்லை என்பதில் இரு வேறு கருத்திருக்க முடியாது. ஆனால் பாராளுமன்றத்தை மீளவும் கூட்டுவதற்கு ஜனாதிபதி விரும்பவில்லையாயின், மாற்று வழிதான் என்ன? பாராளுமன்றத்தை மீளவும் கூட்டுவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறதா அல்லது இல்லையா என்பது சட்டத்துறை வல்லுனர்களின் பிரச்சினை.

எதிரணியை சேர்ந்த சட்ட வல்லுனர்கள் பாராளுமன்றத்தை மீளவும் கூட்டுவதற்கு அரசியலமைப்பில் இடமிருக்கின்றது என்று கூறுகின்றனர். ஆனால் அதனை எதிர்க்கும் பொதுஜனபெரமுனவின் சட்டத்துறை வல்லுனர்களோ இவர்கள் சட்டம் தெரியாமல் பேசுகின்றனர் – அதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்கின்றனர்.

எவர் கூறுவது சரி? இலங்கையின் அரசியலமைப்பு தொடர்பில் ஒவ்வொருவரும், அவரவரின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப விளக்கமளிக்க முடியும் என்பதுதான் கடந்த கால வரலாறு. இருக்கும் ஆனால் இருக்காது – இருக்காது ஆனால் இருக்கும் – இதுதான் இலங்கை அரசியல் யாப்பின் பேராற்றல்.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய பெரும் வெற்றியை பெற்றிருந்தார். எண்ணிக்கையில் சிறுபாண்மையினரின் ஆதரவின்றி, ஒரு சிங்களத் தலைவரால் வெற்றிபெற முடியுமென்பதை நிரூபித்திருந்தார். இந்த வெற்றிக்கு பின்னால் மூன்று பிரதான காரணங்கள் இருந்தன.

ஒன்று, எவராலும் வெல்ல முடியாது என்று கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்தவர் கோட்டபாயதான், என்னும் சிங்களப் பார்வை. அடுத்தது, ஈஸ்டர் தாக்குதல் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அதிர்வலைகள். மூன்று, 2015இல் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய ரணில்-மைத்திரி கூட்டரசாங்கத்தின் மோசமான தோல்வி. இதில் யுத்த வெற்றி வாதத்தை விடவும் ஈஸ்டர் தாக்குதல் கோட்டாவின் வெற்றியில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியிருந்தது.

ஏனெனில் 2009இற்கு மேயில் யுத்தம் நிறைவுற்ற பின்னர், இலங்கைத் தீவில் எந்தவொரு குண்டு வெடிப்பு சம்பவங்களும் இடம்பெறவில்லை. எந்தவொரு சிங்கள குடிமகனும் இறக்கவுமில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் ஈஸ்டர் சிங்கள மக்கள் மறந்துபோன பிரமாண்டமான குண்டு வெடிப்புக்களை மீளவும் நினைவூட்டியது. உண்மையில் சிங்கள மக்களை பொறுத்தவரையில் இது எந்த வகையிலும் சகித்துக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

மேலும், இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்ற பின்னனியில் அதற்கு அரசாங்கம் வழங்கிய பொறுப்பற்ற பதில்கள் மக்களை மேலும் எரிச்சலையடையச் செய்வதாக இருந்தது. போதியளவு புலனாய்வு தகவல்கள் இருந்த போதும், அரசாங்கத்தின் உள் மோதல்களால் முன் கூட்டியே போதிய நடவடிக்கைகளை எடுக்க முடிந்திருக்கவில்லை. இவ்வாறான காரணங்கள் அனைத்தும் யுத்தத்தை வெற்றிகொள்வதில் பிரதான பங்குவகித்த கோட்டாவிற்கு முற்றிலும் சாதகமாகவே இருந்தன.

கோட்டாவின் வெற்றியை, பாராளுமன்ற தேர்தல் மூலம் பொதுஜன பெரமுனவின் பாரிய வெற்றியாக மாற்றிக் கொள்வதுதான் ராஜபக்ச தரப்பினரின் அடுத்த கட்ட இலக்காக இருந்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் எதிர்பாராத வகையில், கொரோனா என்னும் புதிய சவால் ஒன்றிற்கு முகம் கொடுக்க நேர்ந்தது.

அரசியல் தரப்பினரை பொறுத்தவரையில் ஒவ்வொரு சவால்களையும் எவ்வாறு தங்களின் அரசியல் அதிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றே எண்ணுவதுண்டு. இதற்கு ராஜபக்ச தரப்பு மட்டும் எவ்வாறு விதிவிலக்காக இருக்க முடியும்? கொரோனாவை வெற்றிகரமாக கையாண்ட ஜனாதிபதி என்னும் புதிய தகுதியுடன், தேர்தலை எதிர்கொள்ளும் போது, அது பொதுஜன பெரமுனவின் வெற்றியை மிகவும் இலகுவாக்கும் என்னும் கணிப்பு அவர்களிடம் நிச்சயம் இருந்திருக்கும். ஆரம்பத்தில் நிலைமைகள் பொதுஜன பெரமுனவிற்கு முற்றிலும் சாதகமாகவே இருந்தது. ஆனால் முன்னைய நிலைமை தற்போதிருப்பதாக கூற முடியாது.

இவ்வாறானதொரு சூழலில் பாராளுமன்றத்தை கூட்டினால், கொரோனா பரவலை வெற்றிகொண்டமைக்கான பொறுப்பை அனைத்து கட்சிகளும் பகிர்ந்து கொள்வர். அது அனைவரதும் வெற்றியாகவே பார்க்கப்படும். மேலும், நிலைமைகளை கோட்டாவால் சமாளிக்க முடியாமல் போய்விட்டது.

அதனால்தான் பாராளுமன்றத்தை கூட்டி, அனைவரது ஆதரவையும் பெற முயற்சிக்கின்றார் என்னும் அபிப்பிராயமும் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடலாம்.

இந்த நிலைமை பொதுஜன பெரமுனவின் வெற்றிக் கனவை பெருமளவிற்கு சிதைத்துவிடவும் கூடும். இப்படியான காரணங்களினால்தான் கோட்டாவும் பொதுஜன பெரமுனவும் பாராளுமன்றத்தை மீளவும் கூட்டுவதை எதிர்க்கின்றனர்.

இப்போதுள்ள நிலையில் தேர்தலை முன்வைத்தால், கொரோனாவை ஒரு கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கின்றோம் – ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியான நிர்வாகத்தை நாங்கள் கொண்டிருக்கின்றோம் – என்னும் சுலோகங்களோடு சிங்கள மக்களை எதிர்கொள்ளலாம். இது பொதுஜன பெரமுனவிற்கு சாதகமான பெறுபேறுகளை கொடுக்கக் கூடும்.

ஆனால் தேர்தலை என்ன முறையில் வைத்தாலும், நிச்சயம் மக்கள் முன்னரைப் போன்று தேர்தலில் பெரியளவில் ஆர்வம் காட்டப்போவதில்லை. ஆனால் இப்போது, மக்களின் ஆர்வம் தொடர்பில் எவருமே அக்கறை கொள்ளவும் இல்லை. உண்மையில் இப்போதைய தேர்தல் நெருக்கடி என்பது அரசியல்வாதிகளின் பிரச்சினையே தவிர, சாதாரண சிங்கள – தமிழ் – முஸ்லிம் மக்களின் பிரச்சினையில்லை.

மக்களின் பிரச்சினை கொரோனாவும் பொருளாதாரமும்தான். ஆனால் நாட்டில் ஏற்பட்டிருக்கும், ஏற்படப் போகும் நெருக்கடிகளை எதிர்கொள்ளுவதற்கு, மக்களுக்கு பொறுப்புச் சொல்லக் கூடிய ஒரு அரசாங்கம் தேவை – என்பதில் முரண்பட ஏதுமில்லை.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.