head


இலங்கையால் ஜக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேற முடியுமா? - யதீந்திரா

|Thu 04th Jun 2020 07:00 AM|Political| Page Views: 1

அண்மையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்வதேச ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருந்தது.

யுத்த வெற்றி நாயகர்களான இராணுவத்தினர் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதை தனது அரசு ஒரு போதும் அனுமதிக்காது. பலம்பொருந்திய நாடுகள் தங்களின் யுத்த வெற்றி வீரர்கள் மீது எவரும் அழுத்தங்களை பிரயோகிக்க அனுமதிக்க முடியாது என்று கூறகின்றன.

எங்களைப் போன்ற சிறிய நாடுகளின் இராணுவத்தினர் அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். அதனை எங்களால் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் உலக அமைப்புக்களிலிருந்து விலகுவதற்கும் தான் தயங்கப் போவதில்லை என்று கோட்டபாய தனது உரையில் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் 11வது ஆண்டு நிகழ்வில் உரையாற்றும் போதே கோட்டபாய இவ்வாறு தெரிவித்திருந்தார். கோட்டபாயவின் இந்தக் கருத்து ராஜதந்திர வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. சிலர் இதனை விமர்சித்திருந்தனர்.

ராஜபக்ச தரப்புக்களுக்கு நெருக்கமான, இலங்கைக்கான ஜ.நாவின் முன்னைநாள் தூதுவர் தாமர குணநாயகம், ஜ.நாவிலிருந்து வெளியேறுதல் என்னும் எண்ணம் மிகவும் பாரதூரமானது. ஜனாதிபதிக்கு யாரோ தவறான ஆலோசனைகளை வழங்குகின்றனர் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

ஜக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் ஒரு நாடு விலகிக் கொண்ட சந்தர்ப்பம் ஒரேயொரு தடவைதான் இடம்பெற்றிருக்கின்றது. 1965இல் இந்தோனேசியா ஜ.நாவின் உறுப்புரிமையை விலக்கிக்கொண்டது.

மலேசியாவிற்கு பாதுகாப்பு பேரவையில் ஆசனம் வழங்குவது தொடர்பான முரண்பாட்டின் காரணமாகவே இந்த விலகல் இடம்பெற்றது. ஆனால் பின்னர் மீண்டும் இணைந்து கொண்டது. அமெரிக்கா ஜக்கிய நாடுகள் சபையின் உறுப்பு அமைப்புக்களிலிருந்து வெளியேறியிருக்கின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவை உருவாக்கப்பட்ட போது அமெரிக்கா அதில் இணைந்து கொள்ளவில்லை.

ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றும் கொள்கை நிலைப்பாட்டை எடுத்தது. ரொனால்ட் ரம் தலைமையிலான குடியரசு கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, 2018இல் ஜ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. அதே போன்று ஜ.நாவின் பிறிதொரு அமைப்பான யுனெஸ்கோவிலிருந்தும் வெளியேறியது.

2016இல் பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ ஜக்கிய நாடுகள் சபையிலிருந்து விலகப் போவதாக எச்சரித்திருந்தார். போதைவஸ்திற்கு எதிரான யுத்தத்தின் போது இடம்பெற்ற கொலைகள் தொடர்பில், ஜ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்படி எச்சரிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் தற்போது இலங்கை ஜனாதிபதி அவ்வாறானதொரு எச்சரிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கை போன்ற சிறிய நாடுகளால் ஜக்கிய நாடுகள் சபையிலிருந்து விலக முடியுமா? அது அவ்வளவு எளிதான ஒன்றா? மேற்குலகினால் முதன்மைப்படுத்தப்படும் உலக ஒழுங்குடன் முற்றிலுமாக முரண்படும் வடகொரியா, கியுபா போன்ற நாடுகள் கூட ஜ.நாவிலிருந்து வெளியேற முயற்சிக்கவில்லை. ஜ.நாவின் அங்கமாக இருந்து கொண்டே, ஜ.நாவின் நடைமுறைகளுடன் மோதுகின்றன. ஜ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக விமர்சனங்களை எதிர்கொள்ளுவதற்கும் இதுதான் காரணம்.

மனித உரிமைகளை மீறுவோரும் – மனித உரிமைகளை பாதுகாப்போரும் எவ்வாறு ஒரு இடத்தில் இருக்க முடியும் என்பதுதான், அமெரிக்க குடியரசு நிர்வாகம், ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் மீது முன்வைத்துவரும் பிரதான குற்றச்சாட்டாகும். இந்த பின்புலத்தில் நோக்கினால் இலங்கை போன்ற ஒரு சிறிய தெற்காசிய நாடு ஜ.நாவிலிருந்து வெளியேறலாம் என்று எண்ணுவது உலக ஒழுங்கிலிருந்து தனிமைப்படுவதற்கே வழிவகுக்கும்.

ஒரு நாடு ஜ.நாவின் உறுப்புரிமையிலிருந்து விலகுவது தொடர்பான தெளிவான சர்வதேச விளக்கங்கள் இல்லை. 1965இல் இந்தோனேசியா ஜ.நாவின் உறுப்புரிமையிலிருந்து விலகப் போவதாக ஒரு கடிதத்தின் மூலம் அறிவித்துவிட்டு, உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டது. 18 மாதங்களின் பின்னர் இந்தோனேசியாக மீண்டும் ஜ.நாவில் இணைந்து கொண்ட போதும் அது தொடர்பில் பெரிய எதிர்ப்புக்கள் இருக்கவில்லை.

அன்றைய சூழலில் இந்தோனேசியாவின் முடிவை சீனா மட்டுமே ஆதரித்திருந்தது. இந்த பின்புலத்தில் நோக்கினால் இலங்கை ஜ.நாவிலிருந்து வெளியேறுவதாக தீர்மானித்தால் அது இயலுமான காரியம்தான். ஆனால் இவ்வாறானதொரு அறிவிப்பை கோட்டபாய ஒரு எச்சரிக்கையாக வெளிப்படுத்தினாரா அல்லது இது தொடர்பில் அவரிடம் ஒரு தெளிவான நிலப்பாடு இருக்கின்றதா என்பதை இப்போதைக்கு ஊகிக்க முடியாது.

ஆனால் பாராளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு தயாராகிவருகின்ற நிலையிலேயே கோட்டபாய இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கி;ன்றார். இந்த அறிவிப்பு இராணுவத்தினர் மத்தியிலும் சிங்கள தேசியவாதிகள் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருக்கும் என்பதில் ஜயமில்லை.

ஜக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக அமெரிக்காவின் தற்போதைய நிர்வாகம் ஜக்கிய நாடுகள் சபையுடன் ஒத்துழைக்க மறுத்துவருகின்றது அத்துடன், ஜ.நாவின் அங்கத்துவ அமைப்புக்கள் தொடர்பிலும் அமெரிக்கா, தொடர்ந்தும் கடுமையான குற்றசாட்டுக்களை முன்வைத்துவருகின்றது. வூகான் வைரஸ் பரவலுக்கு பின்னர், ஜ.நாவின் உலக சுகாதார அமைப்பு தொடர்பிலும் அமெரிக்கா கடும் அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் கோட்டபாயவின் எச்சரிக்கையும் வெளியாகியிருக்கின்றது. இன்றைய நிலையில் ஒரு நாடு ஜ.நாவுடன் மோதுவதானது அமெரிக்காவை பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையில்லை. கோட்டபாய தரப்பு இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமான ஒன்றாகவும் கணிக்கலாம்.

ஜக்கிய நாடுகள் சபை என்பது அடிப்படையில் நாடுகளை கண்காணிக்கும், நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் ஒரு உலக அமைப்பாகவே இருக்கின்றது. இந்த அழுத்தங்களால் பெரிய மாற்றங்கள் ஏற்படாவிட்டாலும் கூட, நாடுகள் தொடர்பான உலக அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில் ஜ.நாவின் செயற்பாடுகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. ஆனால் ஒப்பீட்டடிப்படையில் ஜ.நாவினால் சிறிய நாடுகள் மீதே செல்வாக்குச் செலுத்த முடிகின்றது.

இந்த நிலையில் ஜ.நாவிலிருந்து வெளியேறப் போவதாக அச்சுறுத்துவதன் மூலம், ஜ.நாவின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியுமென்று சில நாடுகள் எண்ணுகின்றன. பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி ஜ.நாவிலிருந்து விலகப் பேவதாக எச்சரித்தமை அவ்வாறானதொரு அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சிதான். தற்போது கோட்டபாயவின் அறிவிப்பும் அவ்வாறான ஒன்றே.

ஒருவேளை நாடுகள் எச்சரிப்பது போன்று ஜ.நாவிலிருந்து வெளியேறினாலும் கூட, ஜ.நாவினால் எதனையும் செய்ய முடியாது. ஜ.நாவின் அமைப்புக்கள் மூலம் வழங்கப்படும் நிதியை மட்டுமே நிறுத்த முடியும். அந்த நிதியிழப்பை ஒரு நாடு கருத்தில் கொள்ளாவிட்டால் ஜ.நாவை எதிர்த்தும் ஒரு நாடு செயலாற்ற முடியும்.

ஜ.நாவிலிருந்து விலகி நாடுகளுக்கிடையிலான ராஜதந்திர உறவை பலப்படுத்திக் கொள்வதன் ஊடாகவும் பரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்.

பலம்பொருந்திய நாடுகளின் விருப்பங்களுடன் முரண்படாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நடைமுறை ஒன்று தொடர்பிலும் இலங்கை சிந்திக்கலாம். ஆனாலும் இதில் ஆபத்துக்கள் உண்டு. இது ஒரு வகையில் கத்தியின் மேல் நடப்பது போன்றது. சறுக்கினால் மரணம்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.