head


தேர்தல் களம் தமிழ்த் தேசிய அரசியலுக்கான பரீட்சைக் களமா? - யதீந்திரா

|Tue 09th Jun 2020 08:00 AM|Political| Page Views: 1

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகளை பொறுத்தவரையில் ஒரு பரிட்சைக்களமாகும். இந்தத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு தெளிவான செய்தியாகவும், சிலருக்கு அவர்களது அரசில் வாழ்வின் அஸ்தமனமாகவும் போகலாம்.

அது யார் – யார் என்பதை தேர்தல் முடிவுகள் கூறும். தேர்தல் களத்தை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு என்று பிரித்தே நோக்க வேண்டும். ஏனெனில் வடக்கையும் கிழக்கையும் தங்கள் வாக்குகளின் பலத்தால் இணைக்கக் கூடிய மாற்று கட்சிகள் எவையும் இல்லை. ஒப்பீட்டடிப்படையில் வாக்குகளால் வடக்கு – கிழக்கையும் இணைக்கக் கூடிய ஒரேயொரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மட்டும்தான். அவர்களுக்குத்தான் வடகிழக்கு என்னும் அடிப்படையில் ஒரு வாக்கு வங்கியுண்டு.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் அப்படியானதொரு பரவலான வாக்கு வங்கியில்லை. ஆனால் வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் நிலைமைகள் வேறு. வடக்கு மாகாணம் இம்முறை ஜந்து முனைத் தேர்தல் போட்டியொன்றை சந்திக்கவுள்ளது.

இதுவரை தமிழ் வாக்கு வங்கியை தனதாக்கியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சவால்விடும் வகையில் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி ஆகியவை தேர்தல் களத்தில் இருக்கின்றன.

இதற்கு வெளியில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் சிங்கள தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் அணி என ஜந்து முகங்கள் வடக்கு மக்கள் முன்னால் இருக்கின்றன. ஆனால் தமிழ்த் தேசிய கண்ணோட்டத்தில் நோக்கினால் மூன்று தரப்புக்கள் வடக்கு மாகாண மக்களின் வாக்குகளை கோரவுள்ளன. முக்கியமாக யாழ் மாவட்டத்தில்தான் இவர்களுக்கிடையிலான போட்டி தீவிரமாக இடம்பெறும்.

தமிழ் வாக்குகள் தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படுவதாக சிலர் கூறுகின்ற சூழலில்தான் வடகிழக்கு தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டிக் களத்தில் ஒவ்வொரு கட்சிகளும் பெறுகின்ற வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்தை மதிப்பிட முடியுமா? ஒரு வேளை, சுமந்திரன் தனது நேர்காணலில் கூறியது போன்று, ஒரு லட்சம் வாக்குகளை பெற்றுவிட்டால் தமிழ்த் தேசியம் அதன் முடிவை நோக்கிப் பயணிக்கின்றது என்னும் முடிவுக்கு வரலாமா? முதலில் ஒரு விடயத்தை தெளிவுபடுத்திக் கொள்வோம்.

அதாவது, தமிழ்த் தேசிய அரசியலை தேர்தல் வெற்றி தோல்விகளோடு முடிச்சுப் போடுவதே தவறானதாகும். அதே போன்று தமிழ்த் தேசிய அரசியலை விடுதலைப் புலிகளை ஆதரித்தல் என்னும் ஒற்றைப் புரிதலுடன் மட்டுப்படுத்துவதும் தவறானதாகும். தமிழர்களுக்கு, தமிழ்த் தேசிய அரசியல் பாரம்பரியம் ஒன்று இருப்பதை நாம் ஏற்றுக் கொண்டால், அது ஏற்ற இறக்கங்களோடுதான் பயணித்தது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கடந்த 70 வருடகால அரசியல் வரலாற்றில் தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்பது எல்லா காலத்திலும் ஒரேமாதிரியாக இருந்ததில்லை. ஆரம்பத்தில் ஜக்கிய இலங்கைக்குள் தீர்வு – பின்னர் பிரிந்து சென்று தனியரசு நிறுவுவதற்கான ஆணையை கோருதல், தனிநாடு ஒன்றை மட்டும் இலக்கு வைத்து நிகழ்ந்த விடுதலைப் புலிகள் தலைமையிலான ஆயுதப் போராட்டம் – 2009இற்கு பின்னர் மீண்டும் ஜக்கிய இலங்கைக்குள் தீர்வு.

ஒரு நாடு இரண்டு தேசங்கள் என்னும் அடிப்படையில் அரசியல் தீர்வை கோருவதும் ஜக்கிய இலங்கைக்கு உட்பட்ட ஒன்றுதான் அதாவது பிரிபடாத இலங்கை. ஆனால் இந்த ஏற்ற இறக்கங்களி;ன் போதும், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இன உணர்வோடு வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் கட்சிகளுக்கே வாக்களித்திருக்கின்றனர். 2009இற்கு பின்னர் இடம்பெற்ற இரண்டு பாராளுமன்ற தேர்தல்களிலும் அத்தகைய இன உணர்வின் அடிப்படையில்தான் கூட்டமைப்பிற்கும் வாக்களித்தனர். அந்த இன உணர்வின் எல்லைக்குள் நின்றுதான் சுமந்திரனும் வாக்குகளை கோருகின்றார். இன உணர்வு நிலையையும் தமிழ்த் தேசிய அரசியலையும் பிரிக்க முடியுமா?

உண்மையில் தமிழ்ச் சூழலில் சுமந்திரன் தொடர்பில் அளவுக்கதிகமாகவே விவாதிக்கப்படுகின்றது. இதனால் அதிகம் நன்மையடைவதும் சுமந்திரன்தான். மேலும் 70 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் பாரம்பரியத்தை சுமந்திரன் என்னும் ஒரு தனிநபரால் ஒழித்துக்கட்டிவிட முடியுமா? அந்தளவிற்கு தமிழ்த் தேசிய அரசியல் பலவீனமான ஒன்றா? சுமந்திரனுக்கு விழும் வாக்குகள் தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்பட்ட வாக்குகள் என்றால், கடந்த இரண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது சம்பந்தன் பெற்ற வாக்குகளும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான வாக்குகள் என்னும் முடிவுக்கே நாம் வர வேண்டும்.

ஏனெனில் சுமந்திரனின் அரசியல் தந்தை சம்பந்தனாவார். சம்பந்தனின் கருத்துக்களை மக்கள் மத்தியில் பிரதிசெய்யும் ஒரு நபர்தான் சுமந்திரன். எனவே சுமந்திரனின் கருத்துக்களை முதன்மைப்படுத்தி, தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலம் தொடர்பில் விவாதிப்பது பொருளற்றது. தேசியவாத அரசியலை புரிந்து கொள்வதற்கு அல்ஜீரிய சிந்தனையாளர் பிரான்ஸ் பனானின் கூற்று மிகச் சிறந்த ஒன்று. தேசியம் என்பது ஒரு வெற்றுக் கூடு. அது எவர் கையில் இருக்கின்றதோ அதற்கு ஏற்பவே அது முகம் காட்டும். கடந்த 70 வருடகால தமிழர் அரசியலை உற்று நோக்கினால் நாம் இதனை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

ஒவ்வொரு காலகட்டங்களிலும் யார் தமிழ்த் தேசிய அரசியலுக்கு தலைமை தாங்கினார்களோ, அவர்களது தலைமைத்துவ ஆளுமை, அரசியல் நிலைப்பாட்டில் அவர்கள் காண்பித்த உறுதிப்பாடு, அதற்காக அவர்கள் தங்களை முழுமையான அர்ப்பணித்து நின்றமை என்பற்றிற்கு ஏற்பவே, தமிழ்த் தேசிய அரசியல் வெளிப்பட்டது.

செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பானாகொட முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். சம்பந்தனும் அதில் ஒருவர். ஆனால் அனைவரும் சிறையில் இருந்த நிலையில், சம்பந்தன் மட்டும் விடுவிக்கப்பட்டுவிட்டார். எவ்வாறு? தனக்கும் இலங்கை தமிழசு கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை.

நான் ஒரு சட்டக் கல்லூரி மாணவன். நான் தெரியாமல் இதற்குள் அகப்பட்டுக் கொண்டேன் – என்று கூறி, மன்னிப்புக் கடிதம் ஒன்றைக் கொடுத்ததால் சம்பந்தனை மட்டும் விடுவித்தனர். இவ்வாறான ஒருவர் தமிழ்த் தேசிய அரசியலுக்கு தலைமை தாங்கும் போது, தமிழ்த் தேசிய அரசியல் எவ்வாறு முகம் காட்டும்? தமிழரசு கட்சிக்கென்று ஒரு அடையாளம் உண்டு. அந்த அடையாளம் சம்பந்தனின் காலத்தில் கடுமையாக வீழ்சியடைந்திருக்கின்றது. இது தொடர்பில் அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள்தான் சிந்திக்க வேண்டும்.

கடந்த கால பட்டறிவை முன்னிறுத்தி சிந்திப்போமானால், தமிழ்த் தேசிய அரசியல் என்பது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் காணப்படும் முரண்பாடுகளின் தீவிரத் தன்மை மற்றும் அதற்கு தலைமை தாங்கும் நபர்களினால் ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கின்றது என்னும் முடிவுக்கே நாம் வரமுடியும். அது தவிர்க்க முடியாதது. ஆனால் தமிழ் இன-உணர்வு மனோநிலை எந்தவொரு காலகட்டத்திலும் மங்கிவிடவில்லை.

2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்டதால் சம்பந்தனின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றே மக்கள் முன்னால் இருந்தது. மக்கள் தமது இன உணர்வை கூட்டமைப்பின் மூலமாக வெளிப்படுத்தினர். கூட்டமைப்பின் செயற்பாடுகள் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தொடங்கிய நிலையிலேயே அதற்கு மாற்றான புதிய அரசியல் தலைமை ஒன்றி;ன் தேவை தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

இதன் விளைவாக அரங்கிற்கு வந்த கட்சிதான் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி. விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு பரந்தளவான ஜக்கிய முன்னணி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்னும் வாதமும், அதற்கு ஆதரவான செயற்பாடுகள் பல இடம்பெற்றிருப்பினும் கூட, அது வெற்றிபெறவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் மும்முனைப் போட்டியை சந்திக்கவுள்ளது.

தேர்தல் களத்தில் சில எதிர்பாராத முடிவுகள் வரலாம் என்பதே பலரதும் அபிப்பிராயம். ஆனால் இதில் ஒரு கட்சி அல்லது சில தனிநபர்கள் பெறுகின்ற வெற்றி – தோல்விகளை முன்வைத்து தமிழ்த் தேசியத்தின் எழுச்சி – வீழ்சி தொடர்பில் விவாதிக்க முடியாது. அவ்வாறு விவாதிப்பது ஒரு சரியான பார்வையுமல்ல. அதே வேளை சிலரது தோல்வியை முன்வைத்து தமிழ்த் தேசியம் மீண்டும் எழுச்சிபெற்றுவிட்டது என்னும் முடிவுக்கும் வர முடியாது. அவ்வாறு வாதிடுவதும் தவறான ஒன்றாகவே அமையும்.

ஒரு தேர்தலில் வெற்றி பெற்றவர் அடுத்த தேர்தலில் தோல்விடையலாம். தோற்றவர் பின்னர் வெற்றிபெறலாம். மக்களின் வாக்களிப்பிற்கு பின்னால் பல்வேறு விடயங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அதில் சாதியும் ஒன்று. எனவே இவ்வாறான விடயங்களை முன்வைத்து, தேசியவாத அரசியல் தொடர்பில் நாம் முடிவுக்கு வர முடியாது.

கொரோனாவிற்கு பின்னரான சூழலில் மக்களின் வாக்களிப்பு தொடர்பில் அதிகம் எதிர்பார்க்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. அதே வேளை கட்சிகள் அதிகம் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடியாது. அதற்கான கால அவகாசமும் இல்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவை மக்களிடம் செல்லவுள்ளன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.