head


கிழக்கிற்கான தொல் பொருள் செயலணி தமிழ் தலைமைகளிடமுள்ள உபாயம் என்ன? - யதீந்திரா

|Wed 17th Jun 2020 08:00 AM|General| Page Views: 61

சில தினங்களுக்கு முன்னர், கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன அடையாளங்களை பாதுகாப்பதற்கென, ஒரு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டிருந்தது. (The Presidential Task Force for Archaeological Heritage Management in the Eastern Province). இந்தச் செயலணியின் நோக்கங்களில், எந்தவொரு இடத்திலும் பௌத்த அடையாளங்களை பாதுகாப்பது தொடர்பில் பேசப்படவில்லை. தொல்பொருள் பாரம்பரியத்தை முகாமை செய்வது தொடர்பில், பொதுவாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தமிழ்த் தலைமைகள், வழமைபோல் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. அதே வேளை, சர்வதேச அமைப்புக்கள் சிலவும் இது தொடர்பில் கண்டனங்களை பதிவு செய்திருந்தன. ஆனால் இவ்வாறான கண்டனங்கள் எதையும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பெரிதாக பொருட்படுத்தியதாக இல்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பௌத்த பிக்குகளுடனான சந்திப்பு ஒன்றின் போதே, ஜனாதிபதி கோட்டபாய இவ்வாறானதொரு செயலணி தொடர்பில் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்புச் செயலர் கமால் குணரட்ன தலைமையில் மேற்படி செயலணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு செயலணி ஏன் பாதுகாப்புச் செயலரின் தலைமையில் உருவாக்கப்பட வேண்டும் என்பது முதல் கேள்வி? இது ஏன் கிழக்கிற்கு மட்டும் உருவாக்கப்பட வேண்டும் என்பது இரண்டாவது கேள்வி? இதில் ஏன் ஒரு தமிழ் தொல்பொருளியல் அறிஞர் உள்வாங்கப்படவில்லை என்பது மூன்றாவது கேள்வி? இவ்வாறான கேள்விகளின் அடிப்படையில் சிந்திக்கும் போது, இந்தச் செயலணி தொடர்பில் சந்தேகங்களும் அச்சங்களும் ஏற்படுவது இயல்பானதே!

இந்தச் செயலணியிலுள்ள பௌத்த பிக்குவான எல்லாவல மேதானந்த தேரோ, 2012இல், ஒரு முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார். அதாவது கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களில் 99.99 வீதமானவை பௌத்தத்திற்குரியதாகும். அவ்வாறான 10000 தொல்பெருள் இடங்கள் உண்டு. அவற்றில் இதுவரை 1000 மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அங்குள்ள தொல்பொருள் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும் – என்பது அவரது கோரிக்கையாக இருந்தது. அந்தக் கோரிக்கையே, இவ்வாறானதொரு செயலணியின் உருவாக்கத்திற்கு வழிவகுத்திருக்கின்றது. அதே வேளை, திருகோணமலையின் தொன்மைமிக்க இந்து ஆலயமான கோனேஸ்வரம், மகாசேனன் காலத்தில் பௌத்த தலமாக இருந்ததாகவும் ஆனால் பின்னர் இடம்பெற்ற தென்னிந்திய படையெடுப்புக்களால் அது இடிக்கப்பட்டு, அந்த இடத்தில்தான் தற்போதுள்ள கோனேஸ்வரம் கட்டப்பட்டதாகவும் எல்லாவல வாதிட்டுவருகின்றார்.

தொல்பொருளியல் சக்கரவர்த்தி என்று வர்ணிக்கப்படும் மேதானந்த தேரோ, ஜாதிக ஹெல உறுமயவின் நிறுவனர்களில் ஒருவராவார். இவரைப் பொறுத்தவரையில் (எதிராளிகள்) அவர்கள் கத்தியோடு வந்தால் நாங்கள் கத்தியால் பதிலளிக்க வேண்டும். அவர்கள் கருணையோடு வந்தால் நாங்களும் கருணையால் பதிலளிக்க வேண்டும். இவ்வாறான ஒருவர் செயலணியில் இடம்பெறும் போது அச்சங்களும் சந்தேகங்களும் ஏற்படுவது இயல்புதான். இந்தச் செயலணியின் முதலாவது கூட்டத்தின் போது, இதன் தலைவரான பாதுகாப்புச் செயலர் கமால், கிழக்கு மாகாணத்தில் பல்வேறு காரணங்களால் தொல்பொருள் அடையாளங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றது. எனவே அவற்றை இன பாகுபாடுகளுக்கு அப்பால் நாம் பாதுகாக்க வேண்டியிருக்கின்றது என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் எவ்வாறான காரணங்களால் அந்த அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது – அச்சுறுத்தலுக்கு காரணமானவர்கள் யார் என்பது தொடர்பில் எதனையும் அவர் குறிப்பிடவில்லை.

இதனை தமிழ் தலைமைகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? தமிழ் சிவில் சமூகத்தினர் என்போர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்? கிழக்கு மாகாணத்தின் மீது, கொழும்பு அதிக கரிசனையை வெளிப்படுத்துவது புதிய விடயமல்ல. இதற்கு நாற்பது வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறுண்டு. குறிப்பாக தமிழர் அரசியல் ஆயுதப் போராட்டமாக பரிணமித்த காலத்திலிருந்து கொழும்மை பொறுத்தவரையில் கிழக்கு மாகாணம்தான், கருத்தியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முக்கியமான இலக்காக இருந்தது. ஆனால் தமிழ்த் தலைமைகளை பொறுத்தவரையில் எப்போதுமே ‘முதலில் வடக்கு’ என்னும் அணுமுறைதான் அவர்களை வழிநடத்தியது. 1990களில் இது தொடர்பில் இராணுவ ஆய்வாளர் சிவராம் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகளின் ‘முதலில் யாழ்ப்பாணம்’ என்னும் கொள்கை தொடர்பில் விவாதித்திருந்தார். சிவராம் புளொட் இயக்கத்தை நேர்ந்தவர். புளொட் இயக்கம் ஆரம்பத்திலிருந்தே முதலில் யாழ்ப்பாணம் என்னும் அணுகுமுறையை விமர்சித்து வந்ததாகவும் சிவராம் குறிப்பிட்டிருக்கின்றார்.

வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பை தமிழர் தாயகப்பகுதியாக அறிவித்த காலத்திலிருந்து, அதனை நிலரீதியிலும் அரசியல் ரீதியிலும் பலவீனப்படுத்தும் உபாயங்கள் தொடர்பிலேயே கொழும்பு தனது சிந்தனையை தீட்டிவந்தது. திட்டங்களை வகுத்து, அதனை நடைமுறைப்படுத்தியும் வந்தது. வடக்கில் தமிழர் பலம்பெற்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் அதற்கான விலையை கிழக்கே கொடுக்க நேர்ந்தது. உண்மையில் ஆரம்பத்தில் வடக்கின் மீது கொழும்பிற்கு பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. விடுதலைப் புலிகள் வன்னியை மையப்படுத்தி ஒரு அரசை நிறுவிய பின்னர்தான், வடக்கின் மீது கொழும்பு அதிக சினத்துடன் திரும்பியது. அதுவரை அதன் முழு இலக்கும் கிழக்கின் மீது மட்டுமே இருந்தது. இதற்கு கிழக்கின் மாவட்டங்களில் ஒன்றான திருகோணமலையின் துறைமுகம் பிரதான காரணமாகும். திருகோணமலை எப்போதுமே சிங்கள கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதில் கொழும்பு எப்போதுமே கவனமாக இருந்திருக்கி;ன்றது. இதற்கு திருகோணமலை ஈழத் தமிழர்களின் தலைநகரம் என்னும் உணர்ச்சிவசமான சுலோகமும் ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் இவ்வாறான உணர்ச்சிவசமான சுலோகங்களை முன்வைத்த தமிழ்த் தலைமைகள் எவருமே, கொழும்பின் திட்டங்களை தடுத்துநிறுத்துவதற்கான உபாயங்களை அறியவில்லை. இப்போதும் நிலைமை அப்படியே இருக்கின்றது.

வடக்கு கிழக்கில் தமிழர்களின் தொன்மை என்பது இந்துத் தொன்மைகளுடன் பின்னிப்பிணைந்த ஒன்று. இலங்கையின் தலைசிறந்த வரலாற்று ஆசிரியரான கலாநிதி போல் பீரிஸ், 1917இல், இலங்கையில் பஞ்ச ஈஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிர்வாகம் இருந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். அதனை அவர் பஞ்ச ஈஸ்வர நிர்வாகம் என்று குறிப்பிடுகின்றார். விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே அவ்வாறானதொரு நிர்வாகம் இருந்ததாக அவர் நிறுவியிருக்கின்றார்.

உண்மையில் வடக்கு கிழக்கு என்பது இந்துக்களின் புராதான தொன்மைக்குரிய இடமாகும். இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் பிற்காலங்களில் பௌத்தர்களாக மாறியிருக்கின்றனர். அவ்வாறு பௌத்தர்களாக மாறியவர்களாலும் வடக்கு கிழக்கில் பௌத்தம் நிலைபெற்றிருக்கின்றது – வளர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த வரலாற்றை தமிழ் தரப்பினர் ஒப்புக்கொள்ள வேண்டும். அது தொடர்பில் வாதங்களை முன்வைக்க வேண்டும். அவ்வாறில்லாது வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் என்று மட்டும் கூறிக்கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது. வடக்;கு கிழக்கில் பௌத்தம் இருந்தது உண்மை. இந்தச் செயலணி கிழக்கில் ஆய்வுகளை மேற்கொண்டால் அந்த உண்மை வெளிப்படும். அவ்வாறாயின் அந்தப் பகுதிகளிலெ;லாம் சிங்களவர்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்தார்கள் என்பதை ஏற்க வேண்டிவரும். தமிழ் பௌத்தத்தை ஏற்க மறுத்தால் அப்போது, பௌத்தம் சிங்களவர்களுக்கான ஒன்றாகத்தான் இருக்க முடியும். உண்மையில் வட-கிழக்கு என்பது, இந்துக்களினதும், இந்துக்களிலிருந்து பௌத்தத்திற்கு மாறியவர்களதும் பாராம்பரிய வாழ்விடமாக இருந்திருக்கின்றது என்பதை தர்க்க பூர்வமாக நிறுவ வேண்டும். அவ்வாறில்லாது இவ்வாறான விடயங்களை எதிர்கொள்ள முடியாது. தாயகம் – தேசியம் – தன்னாட்சி சுலோகங்கள் இதுவரை கிழக்கை பாதுகாக்கவில்லை. இதுவரை முடியவில்லை என்றால் அதன் பொருள் இனியும் முடியாது என்பதுதான். புதிய – ஆக்க பூர்வமான – தந்திரோபாய அணுகுமுறைகள் தேவை.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.