head


இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையில் யார் பக்கம் நிற்கப் போகிறது இலங்கை? -விமலநாதன் விமலாதித்தன்

|Fri 19th Jun 2020 08:00 AM|General| Page Views: 1

ஆசியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்திகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில், இருந்த எல்லைப்பூசலானது உயிர்ச்சேதம் மிக்க மோதலாக உருமாற்றம் கண்டுள்ள வேளையில், ஆசியாவின் பிற நாடுகள் இந்தப் பிரச்சனையை எந்தக் கோணத்தில் அணுகப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.

தெற்காசியப் புவியியலில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாய் அமைந்துள்ள இலங்கை, இன்று வரை அந்த இரு நாடுகளுடனும் மிகச்சிறந்த உறவைப் பேணி வருகின்றது. இந்தியாவின் செல்வாக்கு இலங்கை அரசியல் தளத்தில் பலகாலமாக இருந்து வந்த போதும், 2015ஆம் ஆண்டுக்கு முற்பட்ட மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்திலேயே சீனாவின் கை இலங்கையில் மேலோங்கியது. சீனாவின் நிதியுதவியுடன் பல்வேறு கட்டுமானத்திட்டங்கள் இலங்கையின் பல பாகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டன. வருமான மீட்டுவதற்கு பொருத்தமற்ற திட்டங்கள் என அவற்றின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதும், சீனாவின் கால் அந்தக் காலப்பகுதியிலேயே மிக நன்றாக ஊன்றப்பட்டது.

2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னால், இந்தியாவின் கை உள்ளதென்றும் ஒரு கருத்து நிலவுகின்றது.

அந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷவின் கட்சியைப் பிளந்து கொண்டு எதிர்த்தரப்புக்குச் சென்ற மைத்ரிபால சிரிசேனவின் செயற்பாடுகளின் பின்னால், இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் அதிகாரி ஒருவர் இருந்ததாக, மகிந்தவின் தரப்பு விமர்சித்திருந்தது.

எவ்வாறாயினும் சீன சார்பு கொண்டிருந்த இலங்கையின் முன்னைய ஆட்சியாளர் தூக்கியெறியப்பட்டமையானது, இந்தியாவுக்கு மிகுந்த சாதகமாகவே அமைந்தது.

இலங்கை ஜனாதிபதிப் பதவியில் அடுத்து அமர்ந்த மைத்ரிபால சிரிசேனவும், பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவும் தமக்குள் முரண்நிலை கொண்டிருந்த போதும், இந்தியாவின் நட்புக்கரத்தை மிக உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஏற்கனவே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்த சீனாவின் கட்டுமானத் திட்டங்களில், ஒரு தேக்கநிலை ஏற்படவே செய்தது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பயங்கரவாதக் குண்டுவெடிப்புகளின் பின்னான விசாரணைகளுக்கு, இந்தியாவின் உறுதுணை விரைவாகக் கிட்டியதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது இரண்டாவது பதவியேற்பின் பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயத்தில் இலங்கை உள்ளடக்கப்பட்டதும், இந்தக் கோணத்தில் நோக்கப்பட வேண்டிய ஒன்றே.

இந்தக் காலப்பகுதியில், பதவியிறக்கப்பட்ட மகிந்த ராஜபக்‌ஷ தமது இந்தியத்தொடர்புகளூடாக இந்திய ஆட்சியாளார்கள் தம் மீது வைத்திருந்த பார்வையை மாற்றுவதில் வெற்றிகண்டார் என்றே சொல்லவேண்டும்.IMAGES

இந்தியாவின் பிரதான ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் முக்கியஸ்தரும் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமிக்கும் மகிந்தவுக்கும் இடையில் ஏற்கனவே நிலவிவந்த நட்பு, இந்த முயற்சியில் வெற்றியடைய பெரிதும் உதவியிருந்தது.

அதேவேளை மகிந்த தமது சீன நண்பனையும் கைகழுவி விடாது இறுகப் பற்றியிருந்தார்.

அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த ஜனாதிபதித்தேர்தலில் பெற்ற அபார வெற்றிக்குப் பின்னால், ஈஸ்டர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் நிலவிய போதும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் ஆசீர்வாதம் உறுதியாக இருந்தது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு புதுடெல்லி வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பிதழ் வைக்கப்பட்டமையும், அதை ஏற்று தனது முதலாவது அயல்நாட்டு விஜயமாக அவர் அங்கு சென்றமையும் பிராந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றன.

கடந்த ஆண்டு இறுதியில் இந்திய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினூடாக, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக, இந்தியா செயற்பட்டிருந்தது.

இதன் மூலம் அந்த நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியத் தலையீடு ஏற்பட்டது.

இலங்கையில் பல காலமாக, பெரும்பான்மை - சிறுபான்மை முரண்நிலை காணப்பட்டு வருகின்ற போதிலும், சிறுபான்மை மக்கள் தொடர்பில் இந்தியா தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வந்த போதும், இந்தச் சட்டத்திருத்தத்தில் இலங்கையை இந்திய ஆட்சியாளர்கள் உள்ளடக்காமல் விட்டமை, சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியான கோட்டாபயவுடனான நல்லுறவை முறித்துக் கொள்வதற்கும் அதன் மூலம் அவர் முற்றிலுமாக சீனச் சார்பு கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுவதற்கும், இந்திய அரசாங்கம் சந்தர்ப்பம் அளிக்கவில்லை.

இலங்கையின் சிறுபான்மை இன மக்களான தமிழர்கள், பல ஆண்டுகளாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் நிலை காணப்படுகின்றது.

இந்த அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டே வந்திருக்கின்றது.

தமிழ்நாடு மாநிலத்தில் வலுவாக காலூன்ற முனைந்து கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி, இந்தப் பிரச்சினையை தமிழ் அகதிகளுக்குச் சாதகமாகக் கையாண்டு, அந்தச் சட்டத்திருத்தத்தில் இலங்கையையும் உள்ளடக்கியிருக்க முடியும்.

அதன் மூலம், தமிழ்நாட்டு அரசியலில் தன் மீது சாதகமான அலையொன்றையும் கிளப்பியிருக்க, இந்தியாவின் பிரதான ஆளும் கட்சியால் முடிந்திருக்கும். எனினும், இலங்கை அரசினுடனான நல்லுறவை, தனது கட்சியின் எதிர்காலத்தை விடவும் முக்கியமாகப் பார்த்தது இந்திய ஆளுந்தரப்பு.

இந்தியாவுடன் பலகாலமாக நட்புப்பேணி வந்த நேபாளம், தற்போது சீனச்சார்பு நிலையை எடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவின் வெளியுறவுச் செயற்பாட்டில், இது குறிப்பிடத்தக்க ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.