head


கொரோனாவின் இரண்டாவது அலை அபாயம்!

|Sat 27th Jun 2020 09:40 AM|General| Page Views: 1

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கான பொது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால், அமெரிக்கா ,ஈரான், ஜேர்மனி போன்ற 10 நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தது.

தற்போது கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதாலும், உயிரிழப்பு அந்தளவிற்கு இல்லாததன் காரணமாகவும், பல்வேறு நாடுகளில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இது குறித்து இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் புள்ளி விபரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவின் இரண்டாவது அலை வீசும் அபாயமுள்ள 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

10 நாடுகளின் பட்டியலில், கொரோனா நோய்த்தொற்றால் உலகிலேயே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, ஈரான், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் இரண்டாவது கொரோனா அலை வீசும் அபாயம் உள்ளது. உக்ரைன், வங்காள தேசம், பிரான்ஸ், சுவீடன், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் இரண்டாவது அலை வீசுவதற்குரிய அபாயமுள்ளது.

இவற்றில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் அதிக தீவிரத்துடன் அமுல்படுத்தப்படுவதில்லை. இதன் விளைவாக, ஒவ்வொரு வாரமும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரமும் அதிகரித்து வருகிறது. இது, அந்த நோயின் இரண்டாவது பரவலுக்கு வித்திடும்.

கொரோனாவுக்கு எதிரான பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மிகத் தீவிரமாக அமுல்படுத்தி வரும் சில நாடுகளில் கூட, அந்த நோய் பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை உச்ச அளவை அடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இச்சூழலிலும், பொருளாதாரச் சரிவை சீர் செய்வதற்காக வர்த்தக மையங்களை மீண்டும் திறக்க உலக நாடுகள் பல முனைந்து வருகின்றன. இதுவும், கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலைக்கு மூலகாரணமாக அமையும்.

ஜேர்மனியில் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பின்னர் கொரோனா பரவலின் தீவிரம் அதிகரித்து வருகிறது. சவுதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், அந்த நோயின் இரண்டாவது அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.