head


நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி பணிப்பு!

|Tue 30th Jun 2020 09:03 AM|General| Page Views: 1

பிரச்சினைக்குள்ளாகி இருக்கும், ஈ.ரி.ஐ மற்றும் த பினான்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் உடனே சட்ட ஆலோசனைகளைப் பெற்று, வைப்பாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

ஈ.ரி.ஐ மற்றும் த பினான்ஸ் வைப்பாளர்களுக்கு நிதியை மீள வழங்கும் வழிகள் குறித்து ஆராய்வதற்காக, நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தப் பணிப்புரையை விடுத்தார். ஜனாதிபதி அலுவலகம், மத்திய வங்கி, திறைசேரி மற்றும் வைப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய குழு ஒன்றை அமைத்து, எதிர்கால செயற்பாடுகளை கண்காணிக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஈ.ரி.ஐ நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய வங்கி, இந்த நிறுவனங்கள் தொடர்பாக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இவ்விரு நிறுவனங்களிலும், 6 இலட்சத்திற்கும் குறைவான பெறுமதியுடைய வைப்புக்களை கொண்டுள்ளவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும். இரு நிறுவனங்களுக்கும் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் கையகப்படுத்தியேனும் ஏனைய வாடிக்கையாளர்களுக்கும் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அடுத்த நிதிச்சபைக் கூட்டத்தின் போது மக்களின் முறைப்பாடுகள் மற்றும் மனக் குறைகளை ஆராய்ந்து, அதிகபட்ச தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியு.டி.லக்ஷ்மன் உறுதியளித்தார். மத்திய வங்கியின் குறைபாடுகளை சரிசெய்து, மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், நிறுவனத்தின் கௌரவத்தையும் பொறுப்பையும் உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக, மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

ஈ.ரி.ஐ மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் சொத்துக்களை கண்டறிந்து வழக்கு தொடராது, அதனை கையகப்படுத்தி, மக்களுக்கு சொந்தமான நிதியை மீளளிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். நிதி நிறுவனங்களுக்கு, கடனை செலுத்துவதில் இருந்து விலகிக் கொள்பவர்களுக்கு எதிராகவும், கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும், ஈ.ரி.ஐ மற்றும் த பினான்ஸ் இரு நிறுவனங்களினதும் வைப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய குழுவினரும் பங்கேற்றனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.