head


தேர்தல் அரசியலால் திசை மாற வேண்டாம் என, தமிழ் மக்கள் பேரவை!

|Tue 30th Jun 2020 09:12 AM|Political| Page Views: 1

தேர்தலின் பொழுதும் அதன் பின்பும், அரசியல் வேறுபாடுகள் கடந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் பயணத்திற்காய் ஒன்றிணைவோம் என, தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று (29), ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுளள்தாவது:- எமது மக்களின் நீண்ட கால அபிலாசைகள் நோக்கிய பயணம், பல இழப்புக்கள் ஊடாகவும் தியாகங்கள் ஊடாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதிலே தன்னலமற்ற முகம் தெரியாத பலரின் பாரிய பங்களிப்புக்கள் இருக்கின்றன.

இந்த நிலையிலே, தேர்தல் அரசியலினால் கட்சிகள் தமக்கிடையேயும் தமக்குள்ளேயும் குழுக்களாகப் பிரிந்து நின்று அநாகரிமான வார்த்தைப் பிரயோகங்களுடன் பேசிக்கொள்வது எமது நீண்ட கால அபிலாசைகள் நோக்கிய பயணத்திற்கு ஆரோக்கியமானதாக அமையாது. தேர்தலிலே கிடைக்கின்ற நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை, எமக்கு விடிவு எதனையும் தந்ததும் இல்லை, தரப்போவதும் இல்லை.

எமது தெளிவான நிலைப்பாடுகளும், ஒற்றுமையான, துல்லியமான திட்டமிடல்களும் செயற்பாடுகளுமே, எமது பயணத்திற்கு வளம் சேர்க்கும். ஒவ்வொருவரும் மற்றவரிலே சேறு பூசும் கீழ்த்தரமான அரசியலை விடுத்து, தமது நிலைப்பாடுகளையும் திட்டங்களையும் கொள்கைகளையும் முன்வைப்பதிலே, தமது சக்தியை செலவிடுவார்களானால், அது ஆரோக்கியமானதாக அமையும்.

நடக்க இருக்கும் இந்தத் தேர்தலிலே, மக்கள் முன் பல போதுமானளவு தெரிவுகள் இருக்கின்றன. எமது மக்கள், ஏனையவர்களுடன் ஒப்பிடும் பொழுது, தெளிவான அரசியல் பார்வை கொண்டவர்கள். அவர்களால் சரியான தெரிவுகளை அடையாளப்படுத்த முடியும். மரத்தினாலான பிடியை கையகப்படுத்தியே, கோடரியானது மரங்களை வெட்டிச்சாய்க்கின்றது. அதுபோலவே எம்மவர்களும் கையகப்படுத்தப்பட்டு, அது எமது அழிவுக்கு காரணமாகாமல் பார்த்துக்கொள்வது எமது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

பலர் சூழ்நிலைகளின் அழுத்தங்களினால் அல்லது வேறு காரணங்களினால், தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். அதற்காக அவர்கள் நம்மவர்கள் அல்ல என்று ஆகிவிடாது. அவர்களுக்கான தெளிவூட்டல்களை தொடர வேண்டிய தேவை இருக்கிறது.

அற்ப சலுகைகளுக்காகவும் பணத்திற்காகவும் பதவிகளுக்காகவும் வெகுமானங்களுக்காகவும், எங்கள் வாக்குரிமையை வீணடிக்கப் போகின்றோமா? அல்லது எமது நீண்ட கால அபிலாசைகளை, மக்களுடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்களுடன், வெளிப்படைத் தன்மையுடனும் முன்னெடுக்கும் வல்லமையும், பிறரால் கையகப்படுத்தப்படாமல் செல்லக்கூடிய திறனும் உடையவர்களை, தெரிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றோமா? என்பது சம்பந்தமான, தெளிவு எமக்கு இருக்குமாயின், எம்மால் சரியான தீர்ப்பை எழுத முடியும்.

தேர்தல் அரசியலுக்காக, கட்சிகளுக்குள்ளேயும் கட்சிகளுக்கு இடையேயும் மக்களிடையேயும் பகை வளர்க்கும் பேச்சுக்களையும் பதிவுகளையும் தவிர்த்து, தேர்தலில் நிற்கும் ஒவ்வொருவரும், தமது நிலைப்பாடுகளையும் திட்டங்களையும் கருத்துக்களையும் முன்வைத்து, மக்களின் தீர்ப்புக்காக காத்திருந்து, அதை ஏற்றுக்கொள்ளும் மன நிலையை வளர்த்துக் கொள்வதே ஆரோக்கியமானதாக அமையும். தேர்தலின் பொழுதும் அதன் பின்பும், அரசியல் வேறுபாடுகள், கடந்து எமது அபிலாசைகளை வென்றெடுக்கும் பயணத்திற்காய் ஒன்றிணைவோம். என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.