head


இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

||| Page Views: 1

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 இலட்சத்து 49 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தொடர் ஊரடங்குக்கு பின்னர் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து ஏனைய இடங்களில் ஒரே நாளில் மொத்தம் 19 ஆயிரத்து 906 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனாத் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று (29) காலை வரை 5 லட்சத்து 49 ஆயிரத்து 197ஆக அதிகரித்துள்ளது. கொரோனாத் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மராட்டிய மாநிலத்தில் அதிகளவில் பதிவாகியுள்ளது.

அந்த மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 133 ஆக அதிகரித்துள்ளது. அடுத்து டெல்லியில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 188 ஆகவும், தமிழகத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆகவும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தை தொடர்ந்து குஜராத்தில் 30 ஆயிரத்து 709 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 21 ஆயிரத்து 549 பேருக்கும், ராஜஸ்தானில் 19 ஆயிரத்து 944 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 16 ஆயிரத்து 711 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உள்ள மாநிலங்களின் பட்டியலில் தெலுங்கானா, அரியானா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகம் ஆகியவை உள்ளன.

கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 410 ஆகும். இதில் மராட்டியத்தில் அதிகபட்சமாக 167 பேரும், தமிழகத்தில் 68 பேரும், டெல்லியில் 66 பேரும் உயிரிழந்துள்ளனர். பிற மாநிலங்களை பொறுத்தவரையில் உத்தரபிரதேசத்தில் 19 பேரும், குஜராத்தில் 18 பேரும், மேற்கு வங்காளத்தில் 13 பேரும், ராஜஸ்தான், கர்நாடகத்தில் தலா 11 பேரும், ஆந்திராவில் 9 பேரும், அரியானாவில் 7 பேரும், பஞ்சாப், தெலுங்கானாவில் தலா 6 பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும், ஜம்மு காஸ்மீரில் 2 பேரும், பீகார், ஒடிசா மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 487 ஆக உயர்ந்துள்ளது. எனினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துச் செல்கிறது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 3 ஆயிரத்து 51 ஆக உள்ளபோதிலும், குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 1 இலட்சமாக அதிகரித்து 3 இலட்சத்து 9 ஆயிரத்து 712 ஆக உள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.