head


தமிழ் மக்கள் - யார் யாரை வெல்ல வைப்பார்கள்? - நிலாந்தன்

|Tue 28th July 2020 07:00 AM|Political| Page Views: 64

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும்? என்று எந்த கட்சியைக் கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று.

கட்சிகள் மட்டுமல்ல சுயேட்சை குழுக்களும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டம் சுயேட்சைக் குழு தனக்கு 3 ஆசனங்கள் கிடைக்கும் என்று கூறுகிறது. கிளிநொச்சியில் சந்திரகுமாரின் ஆதரவாளர்களும் அங்கே ஒரு மாற்றம் ஏற்படும் என்று முகநூலில் எழுதுகிறார்கள்.

ஐந்கரநேசனும் தான் வெல்ல முடியும் என்று நம்புகிறார். ஒரு கூர்மையான அவதானி பகிடியாகச் சொன்னார் “இப்படியே எல்லா கட்சிகளுக்கும் 3 ஆசனங்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் யாழ்ப்பாணத்தில் மொத்தம் 12 க்கும் குறையாத ஆசனங்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பது மொத்தம் எழு ஆசனங்கள் தான் ” என்று. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் மட்டுமல்ல முழு வடக்கிலும் கிழக்கிலும் நிலைமை இதுதான்.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தாங்கள் வெல்வோம் என்ற நம்பிக்கையோடு உழைப்பதில் தவறில்லை. நேர்க் கணியமாகச் சிந்திப்பது தானே வாழ்க்கையும் அரசியலும்? எனவே வெற்றி இலக்கை குறித்து அவர்கள் நம்பிக்கையோடு இருப்பதில் தவறில்லை. ஆனால் தங்களுடைய உயரம் எவ்வளவு என்பது குறித்து அவர்களிடம் சரியான மதிப்பீடு இருக்க வேண்டும். அவ்வாறான மதிப்பீடு எத்தனை தமிழ்க் கட்சிகள் மத்தியில் உண்டு?

முதலாவதாக கூட்டமைப்பு. ஒப்பீட்டளவில் தமிழர் தாயகம் எங்கும் அதாவது வடக்கு கிழக்கு என்ற இரண்டு பகுதிகளையும் உள்ளடக்கி பரவிக் காணப்படும் ஒரே கட்சி அதுதான். கடந்த தேர்தல்களில் அது பெற்ற வாக்குகளை வைத்து கணித்தால் ஒப்பீட்டளவில் பெரிய வாக்குத் தளம் அந்த கட்சிக்கு தான் உண்டு.

அப்படி ஒரு வாக்குத் தளம் இருப்பதை நம்பித்தான் இப்பொழுதும் கட்சிக்குள் குமுறிக் கொண்டிருக்கும் அதிருப்தியாளர்கள் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வராமல் இருக்கிறார்கள். கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் உட்பூசல்கள் பாரதூரமானவை. கட்சி ஆட்கள் ஒருவர் மற்றவரை பகிரங்கமாக விமர்சிக்கும் ஒரு நிலைமை.ஒருவர் ஒட்டிய சுவரொட்டி மீது மற்றவர் தன்னுடைய சுவரொட்டியை ஓட்டுகிறார். அந்தப் படங்களை வேறு ஒருவர் முகநூலில் பிரசுரிக்கிறார்.

.ஆனால் கட்சித் தலைமையோ எதையுமே கட்டுப்படுத்தும் சக்தியின்றி காணப்படுகிறது. இவ்வளவு உட்கட்சிப் பூசல்களின் மத்தியிலும் அதிருப்தியாளர்கள் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வராததற்கு காரணம் அந்த வாக்குத் தளம் தான். அதுவே அவர்களுடைய பலம்.

ஆனால் இம்முறை அந்த வாக்குத் தளம் சரியுமா? கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது அதில் கிட்டத்தட்ட 30 வீத வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் அது உள்ளுராட்சித் தேர்தல். அதில் உள்ளூர் உணர்வுகள் அதிகம் செல்வாக்குச் செலுத்தும். சாதி சமயம் இன சனம்; கிராமம் தெரிந்த முகம் போன்ற இன்னோரன்ன அம்சங்கள் அதில் செல்வாக்குச் செலுத்தும்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் அப்படியல்ல. இதில் கட்சி அரசியலே முன்னுக்கு வரும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பே அதிக ஆசனங்களைப் பெற்றது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரையிலும் தமிழ் தேர்தல் அரங்கில் அக்கட்சிக்கு ஏகபோகம் கிடைத்தது. இம்முறை அந்த ஏகபோகம் சோதனைக்குள்ளாகுமா?

அடுத்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணி. கடந்த பதினோரு ஆண்டுகளாக தனது கொள்கைகளை மக்கள் மயப் படுத்துவதில் அக்கட்சி மெது மெதுவான வெற்றிகளை பெற்று வந்துள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது அக்கட்சி முன்னரை விட முன்னேறியது. அந்த வெற்றியானது முதலாவதாக அக்கட்சியின் உழைப்பால் கிடைத்தது.

இரண்டாவதாக கூட்டமைப்பின் மீது உள்ள அதிருப்தியால் கிடைத்தது. மூன்றாவதாக தமிழ் மக்கள் பேரவையோடு தன்னை அடையாளபடுத்தியதால் கிடைத்தது. நாலாவதாக மாற்று அணிக்கு வேறு போட்டிகள் இல்லாத ஒரு களத்தில் கிடைத்தது. ஆனால் வரவிருக்கும் தேர்தலில் அப்படியல்ல மாற்று அணிக்கு போட்டியாக விக்னேஸ்வரனின் கூட்டணி காணப்படுகிறது.எனவே இம்முறை கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் சைக்கிள் மீன் ஆகிய இரண்டு சின்னங்களுக்கு இடையே யோசிக்க வேண்டிய ஒரு நிலை.

முன்னணி கடுமையாக உழைக்கின்றது. குறிப்பாக கோவிட்-19 நிவாரணங்களை ஒரு பிரச்சார உத்தியாக வெற்றிகரமாக முன்னெடுத்த கட்சிகள் இரண்டு. ஒன்று அங்கஜனின் அணி மற்றது முன்னணி..அதுபோலவே அதிகம் இளைஞர்கள் இறங்கி வேலை செய்வதும் இந்த இரண்டு அணிகளுக்கும்தான். தனது உழைப்பின் பயனாக தனது பலம் அதிகரித்திருப்பதாக முன்னணி நம்புகிறது .

மூன்றாவது விக்னேஸ்வரனின் கூட்டணி. இவர்களில் யாருக்குமே நிரூபிக்கப்பட்ட வாக்குத் தளம் கிடையாது. விக்னேஸ்வரன் மாகாணசபைத் தேர்தலில் பெற்ற வாக்குகள் பெருமளவுக்கு அவர் கூட்டமைப்பின் வேட்பாளராக இருந்ததாலும் பெற்றவைதான்.

அவருடைய தனி வாக்குத் தளத்தின் பருமன் எவ்வளவு என்பதனை வரும் தேர்தலில் தான் நிரூபிக்க வேண்டும். இது அனந்தி சசிதரனுக்கு பொருந்தும் அருந்தவபாலனுக்கு பொருந்தும். இவர்கள் மூவரும் தமது சொந்த வாக்குத் தளங்களை பலப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றோரும் இந்த அணிக்குள் உண்டு. இவர்களும் பலமான வாக்குத் தளங்களைக் கொண்டவர்கள் அல்ல. கடந்த மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தலின் போதான சுரேஷ் பிரேமச்சந்திரனின் வாக்குத் தளம் ஒரு நாடாளுமன்ற ஆசனத்தைப் பெறப் போதுமா? சிவாஜி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனந்தியோடு நின்று பெற்ற வாக்குகளும் ஒரு நாடாளுமன்ற ஆசனத்துக்குப் போதாது. அதாவது இவர்கள் அனைவரும் தமது வாக்குத் தளங்களைப் பலப்படுத்தி நிரூபிக்க வேண்டியவர்கள்.

கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் அனைவரும் இந்தக் கூட்டணியின் சின்னமாகிய மீனுக்கு தான் வாக்களிப்பார்கள் என்று இல்லை. அவர்களில் இளம் வயதினர் அதிகம் சைக்கிளை நோக்கி போவதாக ஒர் அவதானிப்பு உண்டு. அதேசமயம் நடுத்தர வயதினரும் முதியவர்களும் மீன் சின்னத்தை நோக்கிப் போவதாக ஒர் அவதானிப்பு உண்டு

நாலாவது, டக்ளஸ் தேவானந்தா. அவருக்கு பலமான ஒரு வாக்குத் தளம் உண்டு. ஆனால் அது வரையறைக்கு உட்பட்டது. அவருடைய வாக்காளர்கள் அனைவரையும் அவருக்கு நேரடியாகத் தெரியும் என்று கூறத்தக்க அளவுக்கு அவருடைய வாக்குத் தளம் அவருடைய கைக்குள் இருக்கிறது. ஆனால் அது வரையறைக்குட்பட்ட ஒரு வாக்குத் தளம். பெருமளவிற்கு தமிழ் தேசிய எதிர்நோக்கு நிலை கொண்ட வாக்காளர்களும் தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களும் அந்த வாக்குத் தளத்திற்குள் அடங்குவர்.

ஆனால் பிரச்சினை என்னவென்றாலல் கோவிட்-19 சூழலுக்குள் அங்கஜன் தன்னுடைய போட்டியிடும் தகமையை அதிகரித்துக் கொண்டிருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது. அவரும் டக்ளஸ் தேவானந்தாவின் வாக்குத் தளம் காணப்படும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைத்தான் அதிகமாகக் குறி வைக்கிறார். அவர் மட்டுமல்ல தேவானந்தாவிடம் இருந்து பிரிந்து சென்ற சந்திரகுமாரும் அதைத்தான் செய்கிறார். விக்னேஸ்வரனிடம் இருந்து பிரிந்து சென்ற ஐங்கரநேசனும் அதைத்தான் செய்கிறார்.

பட்டம் சின்னத்தின் கீழ் போட்டியிடும் சுயேச்சைக் குழுவும் அதைத்தான் செய்கிறது. இவை மட்டுமல்ல தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அந்த மக்கள் தொகுதிக்குள் அதிகமாக இறங்கி வேலை செய்கிறது. குறிப்பாக வலிகாமத்தில் உள்ள நலன்புரி நிலையங்களுக்குள் அக்கட்சி கணிசமான அளவுக்கு வேலை செய்கின்றது. இப்படிப் பார்த்தால் முன்னெப்போதையும் விட தேவானந்தாவின் வாக்குத் தளத்திற்கு போட்டி அதிகரித்திருக்கிறது. அவருடைய வாக்காளர்கள் மனம் மாறுவார்களா இல்லையா என்பதை வரும் தேர்தல் நிரூபிக்கும்.

மேற்கண்டவற்றை தொகுத்துப் பார்த்தால் இம்முறை ஏற்கனவே பலமான வாக்குத் தளத்தைக் கொண்ட கட்சிகளும் கூட தமது வாக்குத் தளத்தின் நிரந்தரத் தன்மை குறித்து சந்தேகப்படும் அளவுக்கு போட்டி அதிகமாக காணப்படுகிறது. இதுவரை நிரூபிக்கப்படாத வாக்குத் தளங்களைக் கொண்டவர்கள் தமது பலத்தைக் கட்டியெழுப்பக் கடுமையாக உழைக்கிறார்கள். இதை மறு வளமாகச் சொன்னால் எல்லாக் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தமிழ் வாக்காளர்களை அதிகமாகக் குழப்பும் ஒரு தேர்தல் களம் இது.

ஆனால் வாக்காளர்கள் எந்த குழப்பத்தையும் வெளிக்காட்டாமல் அமைதியாக காணப்படுகிறார்கள். யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை அவர்கள் பெருமளவுக்கு பகிரங்கமாகக் கூறுவதில்லை. ஒரு ஆசிரியை சொன்னார் பள்ளிக்கூட ஓய்வு அறையிலிருந்து கதைக்கும் போது சக ஆசிரியர்கள் தாம் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதைக் கடைசி வரை கூற மாட்டார்களாம்.

அதே சமயம் பிரச்சாரத்துக்குச் செல்லும் கட்சிகார்கள் தரும் தகவலின்படி சனங்கள் வீடு தேடிவரும் எல்லா வேட்பாளர்களும் சொல்பவற்றைக் கேட்கிறார்கள் ஆனால் மிகக் குறைந்தளவே அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள். சனங்களின் முகபாவத்தை வைத்து அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளது என்று

அதுமட்டுமல்ல கோவிட்-19 நிவாரணங்களை வாங்கும் போதும் ஏனைய உதவிகளைப் பெறும் போதும் குறிப்பிட்ட கட்சிகளுக்கு வாகுறுதியளித்தபடி மக்கள் விசுவாசமாக வாக்களிக்க மாட்டார்கள் என்றும் ஒரு சமூகச் செயற்பாட்டாளர் தெரிவித்தார். நிவாரணம் எல்லாம் வாக்குகளாகி விடாது.

உதவிகள் எல்லாம் வாக்குகளாகி விடாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இது கிளிநொச்சியில் சந்திரகுமாருக்கு நடந்தது. இதற்கு முன்னைய தேர்தல்களிலும் தமிழ் வாக்காளர்கள் அப்படித்தான் காணப்பட்டார்கள். தமது அபிப்பிராயத்தை வெளிப்படையாகக் கூறத் தயாரற்ற ஒரு மக்கள் கூட்டம். இம்முறை யார் யாரை வெல்ல வைப்பார்கள் ?



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.