head


ரபேல் போர் விமானங்கள் வந்தடைந்தன!

|Thu 30th July 2020 10:50 AM|| Page Views: 1

ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, ஐந்து ரபேல் போர் விமானங்கள், இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன. அந்த விமானத்தை சுகோய் போர் விமானங்கள் அழைத்து வந்தன. ஹரியானாவின், அம்பாலா விமானப்படை தளம் அருகே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இவற்றில், முதல்கட்டமாக, ஐந்து ரபேல் விமானங்கள், பிரான்சில் இருந்து, நேற்று முன் தினம்(ஜூலை 27) புறப்பட்டன. இந்த விமானங்கள், 7,000 கி.மீ., பயணம் செய்து, ஹரியானாவில் உள்ள, அம்பாலா விமானப்படை தளத்துக்கு, வந்தடைந்தன இந்திய எல்லையில் நுழைந்ததும், அரபிக்கடலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஐஎன்எஸ் கோல்கட்டா டெல்டா 63, ஐஎன்எஸ் டெல்டா போர்க்கப்பல்களை தொடர்பு கொண்டன.

அப்போது, ரபேல் விமானங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஐந்து ரபேல் போர் விமானங்களும், இந்திய வான் எல்லையில் நுழைந்தன. அந்த விமானங்களை இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் சூ 30 எம்கேஐ விமானங்கள் அழைத்து வந்தன. அம்பாலாவில், நடக்கும் நிகழ்ச்சியில், இந்திய விமானப்படை தளபதி கலந்து கொண்டு விமானங்களை விமானப்படையில் சேர்க்க உள்ளார்.

இதையொட்டி, அம்பாலாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமானப்படை தளத்தின் சுற்று வட்டார பகுதிகளில், ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் இயக்கவும், புகைப்படங்கள் மற்றும் 'வீடியோ' எடுக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்பாலா மக்கள், இன்று இரவு, 7:00 முதல், 7:30 மணி வரை, வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, ரபேல் போர் விமானங்களை வரவேற்குமாறு, அம்பாலா நகர, பா.ஜ., எம்.எல்.ஏ., அசீம் கோயல், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.