head


தகவல் திருட்டு நான்கு தலைவர்களிடம் விசாரணை!

|Fri 31st July 2020 09:40 AM|Crime| Page Views: 1

நிறுவன வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு தொடர்பாக, கூகுள், பேஸ்புக், அமேசான், ஆப்பிள் நிறுவனங்களின் தலைவர்களிடம், அமெரிக்க பார்லி., பிரதிநிதிகள் சபையின் நம்பிக்கை மோசடி தடுப்பு குழு, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரணை நடத்தியது.

அமெரிக்க பார்லி., பிரதிநிதிகள் சபையின் நம்பிக்கை மோசடி தடுப்பு குழு,கூகுள், பேஸ்புக், அமேசான், ஆப்பிள் நிறுவன தலைவர்களிடம், வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தியது.

இக்குழுவின் தலைவர், டேவிட் சிசிலின், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சையிடம்,நேர்மையான நிறுவனங்களின் தகவல்களை, கூகுள் எதற்காக திருடியது, எனக் கேட்டார். அதை மறுத்த, சுந்தர் பிச்சை, கூகுள் உயர்ந்த தரத்தை கடைப்பிடிக்கிறது, என்றார்.

யெல்ப் நிறுவனத்தின் ஆய்வுகளை, கூகுள் திருடியதாகவும், அதை தட்டிக் கேட்டபோது, தன் சர்ச் இன்ஜினில் இருந்து யெல்ப் நிறுவனத்தை நீக்குவோம் என, மிரட்டியதாகவும் கூகுள் மீது குற்றச்சாட்டு உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர், ஜோ பிடன் வெற்றிக்கு, கூகுள் உதவுமா என்ற கேள்விக்கு, பாரபட்சமின்றி குடியரசு கட்சிக்கும் கூகுள் உதவும், என, சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

பேஸ் புக் நிறுவனர், மார்க் ஸக்கர்பர்க், இன்ஸ்ட்டாகிராம் நிறுவனத்தை மிரட்டி வாங்கியது குறித்த கேள்விக்கு, 2012ல், இன்ஸ்டாகிராம் மிகச் சிறிய அளவிலான படப் பகிர்வு, ஆப் என்ற அளவில் தான் இருந்தது.அதை மிரட்டி வாங்கும் அவசியமே இல்லை, என, ஸக்கர்பர்க் கூறினார்.

அதேசமயம், இந்திய வம்சாவளி எம்.பி., பிரமிளா ஜெயபால், போட்டி நிறுவனங்களின் அம்சங்களை பேஸ்புக் காப்பி அடித்திருக்கிறதா, என கேட்டதற்கு, ஆம் என ஒப்புக் கொண்ட ஸக்கர்பர்க், அதன் எண்ணிக்கை தெரியாது என்றார்.

அமேசான், மூன்றாம் நபர் விற்பனையாளர்களின் தகவல்களை பயன்படுத்தி, விற்பனை தொடர்பான முடிவுகளை எடுத்ததா என, பிரமிளா ஜெயபால் கேள்வி எழுப்பினார். அதை மறுத்த அமேசான் நிறுவனர், ஜெப் பெசோஸ், அமேசான் ஊழியர்கள், அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, டிம் குக் பேசும்போது, ஆப் ஸ்டோரில் ஆப் டெவலப்பர் களிடம், அதிக கமிஷன் கோரப்படுவதை மறுத்தார். டெவலப்பர்கள், வாடிக்கையாளர்கள் என, இரு தரப்பிலும் போட்டி அதிகமாக இருக்கும் போது, கூடுதல் தொகை எப்படி வசூலிக்க முடியும் என, அவர் கேள்வி எழுப்பினார்.

நான்கு நிறுவன தலைவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அறிக்கை தயாரிக்கப்பட்டு, அமெரிக்க பார்லி.,யில் தாக்கல் செய்யப்படும் என, மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.