head


ஊரடங்கு: ஆகஸ்ட் 31 வரை தொடர்கிறது!

|Fri 31st July 2020 10:30 AM|| Page Views: 1

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று (ஜூலை 29) மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று (ஜூலை 30) மருத்துவ வல்லுனர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இன்றைய அறிவிப்புகளில் குறிப்பிடத் தக்க அம்சங்கள்.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் வருவதை முன்னிட்டு சுதந்திர தினத்தை தனிமனித இடைவெளியுடன் பாதுகாப்பு முகக் கவசங்களுடன் கொண்டாடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களில் கொரோனா அதிகமாகி வரும் நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ பாஸ் அவசியம் என்ற நிபந்தனை தொடர்கிறது. பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை மறு அறிவிப்பு வரும் வரை தொடர்கிறது.

ஏற்கனவே மாலை 6 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் ஆகஸ்ட் மாதம் இரவு 7 மணி வரை அதிகரிக்கப்படுகிறது. ஜூலை மாதத்தை போலவே ஆகஸ்ட் மாதத்திலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழுக்க ஊரடங்கு பின்பற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் ஹோட்டல்கள் அவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்கின்றன. பேரூராட்சி நகராட்சிகளில் உள்ள சிறிய கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதிக்கப் பட்டுள்ளது. அதேநேரம் மாநகராட்சிகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படுவது இல்லை என்ற முடிவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருப்பதால் ஆகஸ்ட் மாதம் முழுதும் பழைய தடைகளை தொடர்ந்து நீடித்துள்ளது தமிழக அரசு.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.