head


சிறப்பு பாதுகாப்பு படையில் இருந்து திருப்பி அனுப்பப்படும் 200 பேர்!

||| Page Views: 2

பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும், எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையில் இருந்து, 200 பேர், அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய பிரிவிற்கு, திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளனர். நாட்டில், பிரதமர் மற்றும் அவருக்கான அரசு இல்லத்தில் தங்கியுள்ள குடும்பத்தினருக்கு, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள், உயரடுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இதற்கு முன், முன்னாள் பிரதமர்கள், அவர்களின் குழந்தைகள் உள்ளிட்டோருக்கும், எஸ்.பி.ஜி.,வீரர்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர். இந்த சிறப்பு பாதுகாப்பு படை, 1985ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதில், துணை ராணுவத்தினர், சி.ஏ.பி.எப்., எனப்படும் மத்திய ஆயுதப்படை பிரிவினர், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மாநில சிறப்பு போலீஸ் படையினர் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவில் இருந்து சிறப்பாக பணிபுரிவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு, தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு, எஸ்.பி.ஜி.,யில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இந்நிலையில், எஸ்.பி.ஜி., பாதுகாப்பு பணிக்கான சாசனத்தில், சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, பிரதமர் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியுள்ள குடும்பத்தினருக்கு மட்டும், கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்தால் போதுமானது. இதனால், கூடுதலாக உள்ளவர்களை, அவர்கள் ஏற்கனவே பணியில் இருந்த பிரிவுகளுக்கு, திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, எஸ்.பி.ஜி., அதிகாரிகள் கூறியதாவது: எஸ்.பி.ஜி.,யில், 4,000 கமாண்டோ வீரர்கள் உள்ள நிலையில், அவர்களில், 50 முதல், 60 சதவீதம் பேர் மட்டும் பிரதமரின் பாதுகாப்புக்கு போதுமானவர்கள். இதனால், நேற்று முன்தினம், அமைச்சரவை செயலகம் பிறப்பித்த உத்தரவின்படி, பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும், 200 க்கும் மேற்பட்டோர், அவர்கள் ஏற்கனவே பணியில் இருந்த பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

அவர்கள், உள்நாட்டு பாதுகாப்பில், தங்கள் கடமைகளை தொடர்வர். இந்த அமைப்பில் இருந்து, பல பணியாளர்களையும், அதிகாரிகளையும், ஒரே நேரத்தில் திருப்பி அனுப்புவது, இதுவே முதல் முறை; இந்த நடவடிக்கை தொடரும்.தற்போதைய, 200 பேர் பட்டியலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து வந்த, 86 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், எல்லை பாதுகாப்பு படையில், 45; மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில், 23; இந்தோ - -திபெத் எல்லை காவல்துறையை சேர்ந்த, 17 பேர் இடம் பெற்றுள்ளனர். ரயில்வே பாதுகாப்புப் படை, புலனாய்வு பணியகத்தை சேர்ந்தோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.