head


அரசியலில் பொய்கள் ? - யதீந்திரா

|Tue 04th Aug 2020 07:00 AM|Political| Page Views: 67

சர்வதேச அரசியல் உரையாடல்களில், உலகளவில் கவனிக்கப்படும் அறிஞர்களில் ஒருவரான ஜோன் மியஷைமர், சர்வதேச அரசியலில் தலைவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை விபரிக்கும் வகையில் ஒரு நூலை எழுதியிருந்தார்.

அந்த நூலின் பெயர் தலைவர்கள் ஏன் பொய் சொல்லுகின்றனர் : சர்வதேச அரசியலில் பொய்கள் பற்றிய உண்மை (Why leaders lie : the truth about lying in international politics) இந்த நூல் பிரதானமாக அமெரிக்க தலைவர்களை அடிப்படையாகக் கொண்டே விடயங்களை ஆராய்கின்றது. ஆனால் இந்த நூலின் உள்ளடக்கம் அனைத்து நாட்டுச் சூழலுக்கும் பொருந்தக் கூடியது. அவர் பொய்களை வகைப்படுத்தியிருக்கின்றார். அதவாது நாட்டின் நலன்களுக்காக கூறப்படும் பொய்களும் இருக்கின்றன. வெறும் சுயநலன்களுக்காக கூறப்படும் பொய்களும் இருக்கின்றன.

உதாரணமாக ஒரு யுத்தத்தை தடுப்பதற்காக, ஒரு நாட்டின் தலைவர் ஒரு பொய்யை கூறினால் அது மக்களுக்குத் தேவையான பொய்யாகும். ஏனெனில் அந்தப் பொய்யால் நாடு பாதுகாக்கப்படுகின்றது. ஆனால் அரசியலில் சொந்த நலன்களுக்காக கூறப்படும் பொய்கள் சுயநல பொய்களாகும். உதாரணமாக ஒரு அரசியல் தலைவர் தனது பதவிக்காக, தனது வசதிவாய்ப்புக்களுக்காக ஒரு பொய்யை கூறுவாராக இருந்தால் அது அவரது சுயநலத்திற்கான பொய்களாகும். எனவே அரசியல்வாதிகள் கூறும் பொய்களை இந்த அடிப்படையில்தான் நாம் உற்றுநோக்க வேண்டும்.

தேர்தல் காலம் என்பதால் பொய்கள் மிகவும் தாராளமாகவே உலாவருகின்றன. கடந்த 20வருடங்களாக நாடாளுமன்ற கதிரைகளை அலங்கரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மீண்டும் மக்களின் ஆணையை கோருகின்றனர். தங்களுக்கு பலத்தை தருமாறு கேட்கின்றனர். 20 ஆசனங்கள் இருந்தால் பெரிதாக ஏதோ சாதித்துவிட முடியும்போல் பேசுகின்றனர். வழமைபோல் தங்களுக்கு வாக்களித்தால் தங்களால் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமென்று கூறுகின்றனர். 2015இலும் இதைத்தான் கூறி வாக்குகளை பெற்றனர்.

2010இலும் இதைத்தான் கூறினர். மீண்டும் வாக்குகளுக்காக அதே விடயங்களையே கூறுகின்றனர். இவை ஒவ்வொன்றிலும் கலந்திருக்கும் பொய்களை மக்கள் உற்று நோக்க வேண்டும். கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுபவர்களில் எவர் உண்மை கூறுகின்றார்? எவர் பொய் சொல்லுகின்றார்?

இன்று திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் இரா.சம்பந்தன் 20 வருடங்களாக நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக இருந்திருக்கின்றார். ஆனால் மீண்டும் பதவியாசையால் தேர்தலில் போட்டியிடுகின்றார். தாங்கள் நிதானமாகவும் பக்குவமாகவும் பயணித்து, அரசியல் தீர்வொன்றை காணப்போவாக கூறுகின்றார்.

இது உண்மையா அல்லது பொய்யா? 20 வருடங்களில் முடியாமல் போனதை இனி எப்படி அடைய முடியும்? அதற்கான வேலைத்திட்டம் என்ன? ஏன் கடந்தகாலத்தில் அவற்றை அடையமுடியாமல் போனது? அண்மையில் திருகோணமலையில் கப்பற்துறை என்னுமிடத்தில் மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. மக்கள் கேள்விகேட்கின்றனர். இது இலத்திரனியல் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டது. நாங்கள் உங்களுக்குத்தான் வாக்களிக்கின்றோம் ஆனால் ஒண்டும் நடக்கவில்லையென்று மக்கள் கேட்கின்றனர். அதிகாரம் மத்தியில் இருக்கின்றது. அது மாகாணத்திற்கு வரவேண்டும். அதன் பின்னர் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். இதுதான் மக்களின் கேள்விக்கு சம்பந்தனின் பதில்.

உண்மையில் கடந்த ஆட்சிக் காலத்தில் மாகாணசபையை பலப்படுத்துவதற்கான அனைத்து வாய்புக்களும் சம்பந்தனின் காலடியில் இருந்தது. ஆனால் சம்பந்தனோ சாத்தியமில்லாத புதிய அரசியல்யாப்பு என்னும் நாடகமொன்றில் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார். இறுதியில் ஜந்து ஆண்டுகள் வீணாகிப்போனது. தமிழ் மக்கள், 2015இல் ஆட்சி மாற்றத்திற்கு வழங்கிய வாக்குகளுக்கு எந்தவொரு பெறுமதியுமில்லாமல் போனது.

அனைத்து வாய்புக்களையும் வீணாக்கிவிட்டு, இப்போது அப்பாவி மக்களிடம் கூறுகின்றார் – மாகாணத்திற்கு அதிகாரம் வந்தால் உங்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். ஆனால் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை. இதற்காக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது சலுகைகளை புறம்தள்ளவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக கொடுக்கப்பட்ட சலுகைகள், வசதிவாய்புக்கள் எவற்றையும் சம்பந்தன் புறக்கணிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில்லாத காலத்திலும் கூட அவர் தனக்கான சலுகைகளை புறம்தள்ளவில்லை. ஆனால் மக்களின் பிரச்சினைகளென்று வருகின்றபோது மட்டும்தான், அதற்கு அரசியல் விளக்கம் கூறுகின்றார். இதுதான் ஒரு அரசியல் தலைவர் தனது சுயநலத்திற்காக கூறும் பொய்கள்.

எனது பிரதான இலக்கு அரசியல் தீர்வொன்றை காண்பதுதான். அதில் வெற்றிபெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும் அதில் எனது பங்குண்டு. ஏனெனில் ஏனையவர்களெல்லாம் மதில் மேல் பூனைபோன்றிருக்கின்றனர். எனவே அரசியல் தீர்வு முயற்சிகள் தோல்வியடைந்தால் அரசியலிலிருந்து விலகும் எண்ணம் இருக்கின்றது. இவ்வாறு கூறிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இப்போது யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர். அவர் தனது வெற்றிக்காக அல்லும் பகலும் ஓய்வில்லால் பேசிவருகின்றார்.

ஒரு சட்டத்தரணியாக அவர் கெட்டித்தனமாக பதிலளிக்கலாம். அரசியல் தீர்வு முயற்சிகள் தோல்விடையவில்லை. அதற்கான முயற்சிகளை நாங்கள் தொடரப்போகின்றோம். புதிய அரசாங்கத்துடனும் அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளோம். பின்னர் எதற்காக நான் ஒதுங்கவேண்டுமென்று அவர் வாதிடலாம். வாதம் சரியானதுதான் ஆனால் இந்த வாதத்தை அவர் அரசியலில் இருக்கும் வரையில் தொடர்ந்தும் கூறிக்கொண்டேயிருக்காலாம் ஏனெனில் இதுதானே கடந்த 70 வருடங்களாக இந்தத் தீவில் நடக்கின்றது. 1977இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவான சம்பந்தன் இன்றுவரை நிதானமான பக்குவமான அரசியல் தீர்வு பற்றித்தானே பேசிக்கொண்டிருக்கின்றார். உண்மையில் சுமந்திரனின் அரசியல் தீர்வு முயற்சிகள் படுதோல்வியடைந்துவிட்டது என்பதே உண்மை. ஆனாலும் அந்த உண்மையை ஏற்றுக்கொண்டால் அவர் தொடர்ந்தும் அரசியலில் இருக்க முடியாது என்பதால் மேடைகளில் பொய் தேவைப்படுகின்றது. இது சுயநலத்திற்கான அரசியல் பொய்தானே!

கடந்த ஜந்து வருடத்தில் நடந்த விவாதங்களை திரும்பிப் பார்த்தால் எதிலும், எங்கும் பொய்கள்தானே தெரிகின்றது. இடைக்கால அறிக்கைக்குள் சமஸ்டி மறைந்திருக்கின்றது என்று கூறப்பட்டது. ஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சியல்ல, அது ஒருமித்த நாடு என்று கூறப்பட்டது. ஆனால் சிங்களத்தில் ஏக்கியராஜ்ய என்பது ஒற்றையாட்சியைத்தானே குறிக்கின்றதென்று கேட்டால் அதற்கு பதிலில்லை. கூட்டமைப்பு கடந்த ஜந்துவருடங்களில் என்ன செய்ததென்று கேட்டால் காணிவிடுப்பு, ஹம்பரலிய என்று பதில் வருகின்றது. உண்மையில் சுமந்திரன் கடந்த ஜந்து வருடங்களாக முயற்சித்தது ஹம்பரலியவை கொண்டுவருவதற்காகவா? ஏன் இப்போதும் உண்மைகளை கூற முடியாமல் தடுமாறுகின்றீர்கள்.

விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சபையை சரியாக பயன்படுத்தவில்லையென்று கூறப்படுகின்றது. ஒரு வேளை வடக்கு மாகாண சபையை கையாளுவதற்காக மட்டும் விக்கினேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவந்திருந்தால் இந்தக் குற்றச்சாட்டு நியாயமானதே! ஆனால் அது உண்மையா? வடக்கு மாகாண சபைiயை கையாளுவது மட்டும்தான் விக்கினேஸ்வரனின் இலக்கு எனின், பின்னர் எதற்காக வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது கூட்டமைப்பு ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைக்க வேண்டும். அதில் ஏன் சமஸ்டித் தீர்வு தொடர்பான விடயங்களை முன்வைக்க வேண்டும். இருக்கின்ற மாகாணசபை முறைமையை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் மட்டும் பேசயிருக்கலாமே. இப்போது விக்கினேஸ்வரனை குற்றம்சாட்டுவதில் ஏதாவது நியாயம் இருக்கின்றதா? வடக்கு மாகாண சபை தேர்தலின் போது, தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்த கூட்டமைப்பு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, ஏன் அவ்வாறானதொரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைக்கவில்லை? வடக்கு மட்டும்தான் தமிழர்களின் பூர்வீக நிலமா?

வடக்கு கிழக்கிலுள்ள சிவில் சமூக அமைப்புக்கள் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் ஏகமனதாக ஜ.நாவில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவேண்டாமென்று கூறியிருந்தனர். குறிப்பாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட கால அவகாசம் வழங்குவதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாமென்று கூறியிருந்தனர். ஆனால் எவரையும் பொருட்படுத்தாமல் கால அவகாசத்தை சுமந்திரனும் சம்பந்தனும் ஆதரித்தனர். அதனால் தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன? ஒரு விடயத்தை ஆதரித்தால் அதனால் ஏதாவது நன்மை வரவேண்டுமல்லவா? இந்த விடயங்களில் ஏதாவது ஒன்றிற்காவது பொய் கலக்காமல் பதில் சொல்லும் நிலையில் சம்பந்தனோ அல்லது சுமந்திரனோ இருக்கின்றனரா?

சம்பந்தனின் இன்னொரு பச்சைப் பொய். திருகோணமலையில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசுகின்ற போது, இந்தியா தங்களுக்கு பின்னாலிருப்பதாக சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். இதனை கேட்டுக்கொண்டிருக்கும் அப்பாவி தமிழ் மக்கள் வேண்டுமானால் வாய்பிளக்கலாம். உலகில் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் வரிசையில் இருக்கின்ற, பிராந்திய சக்தியான இந்தியா, இலங்கையிலுள்ள, சிறிய கட்சியொன்றின் பின்னாலிருக்கிறதென்றால், அது ஒரு சதாரணமான விடயமா? அவ்வாறாயின் அந்த நாட்டைக் கொண்டு ஏன் சம்பந்தன் எதனையும் செய்யவில்லை? அவ்வாறாயின் இதுவும் ஒரு தேர்தல் காலத்து சுயநலப் பொய்தானே! ஆனால் சுயநலத்திற்காக ஒரு நாட்டை முன்வைத்து கூறப்படும் மோசமான பொய்.

ஆனால் இதிலுள்ள முக்கியமான விடயம். இந்த விடயம் தொடர்பில் சுமந்திரன் தவறியும் வாய்திறப்பதில்லை. ஏனெனில் சுமந்திரனுக்குத் தெரியும் தாங்கள் கடந்த ஜந்து வருடங்களில் இந்தியாவை நாடியிருக்கவில்லை. இந்தியாவின் தலையீடின்றியே ஒரு தீர்வை காணமுடியுமென்றே சுமந்திரன் எண்ணியிருந்தார். மேலும் சுமந்திரனுக்கு இந்தியா தொடர்பில் ஒரு தெளிவான புரிதலும் இருந்திருக்கவில்லை. அவரைப் பொறுத்தவரையில் கொழும்பிலுள்ள ஜக்கிய தேசியக் கட்சியின் உயரடுக்கு அரசியல்வாதிகளுடன் அதாவது, ரணில் மற்றும் மங்கள போன்றவர்களுடன் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதன் மூலமும், அவர்களுடன் தனிப்பட்டரீதியில் நட்பை பேணிக்கொள்வதன் மூலமாகவும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம். சுமந்திரன் இவ்வாறு எண்ணியிருந்தால் அதில் தவறில்லை. ஏனெனில் அவருக்கு அரசியல் மிகவும் புதிது.

ஆனால் தனது முற்சி தோல்வியில் முடிந்த பின்னரும் கூட, அந்த தோல்வியை மக்கள் முன்னால் ஒப்புக்கொள்ள முடியாமல் அதற்கு வரட்டுநியாயங்களை கூறிக்கொண்டிருப்பதுதான் உண்மையிலேயே பிரச்சினையானது. கடந்த ஜந்து ஆண்டுகளில் கூட்டமைப்புக்குள் இருந்துகொண்டே, அரசியல் யாப்பு வரப்போவதில்லை என்று சித்தார்த்தன் மட்டுமே கூறிக்கொண்டிருந்தார். அப்படிப் பார்த்தால் சித்தார்த்தன் உண்மை பேசியிருக்கின்றார். அதே போன்று கூட்டமைப்பில் சம்பந்தனின் அனைத்து விடயங்களோடும் ஒத்துப்போய்விட்டு இறுதிக்கட்டத்தில் வெளியேறி, சம்பந்தனை தவறென்று விமர்சிப்பதும் கூட, ஒரு வகையான அரசியல் பொய்தான்.

ஒரு தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் அதற்கு நியாயங்களை கூற முற்படும் போதுதான், அரசியலில் பொய்கள் அதிகம் தேவைப்படுகின்றது. ஒரு முறை, ஒரு பொய்யை கூறிவிட்டால், பின்னர் அதனை பாதுகாப்பற்கு அதிக பொய்கள் தேவைப்படுகின்றன. பின்னர் பொய்கள் மட்டுமே எஞ்சியிருக்கும். உண்மையில் ஒரு விடயத்திற்காக முயற்சிசெய்து தோல்வியடைவதில் எந்தக் குற்றமும் இல்லை. எதற்கும் முயற்சிசெய்யாமல் பேசிக்கொண்டிருப்பதுதான் தவறானது. ஆனால் ஒன்றில் தோல்வியடைந்த பின்னரும்கூட.

அந்தத் தோல்வியை ஒப்புகொண்டால், அதில் தனது தனிப்பட்ட கௌரவம் பாதிக்கப்படுமென்று எண்ணும்போதுதான் அரசியலில் பொய்கள் எட்டிப்பார்க்கத் தொடங்குகின்றது. இன்று கூட்டமைப்பினர் கூறும் அரசியல் பொய்களின் பின்னால் இருப்பது இந்தப் பிரச்சினைதான்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.