head


மோடி முதல் கலைஞர் வரை: உளவு பார்த்த சீன நிறுவனம்!

|Wednesday, 16th September 2020|| Page Views: 1

இந்தியா-சீனா இடையே லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. இந்த நிலையில் சீன அரசுடனும், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனும் தொடர்புள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று 10,000க்கும் மேற்பட்ட இந்தியாவின் முக்கிய நபர்களைக் கண்காணித்தது தெரியவந்துள்ளது.

சீனாவின் ஷென்சென் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஷென்ஹூவாதகவல் தொழில்நுட்ப நிறுவனம்தான் தனது இணையதளத்தின் மூலம் உளவுபார்த்துள்ளது. ஏப்ரல் 2018 இல் ஷென்ஹூவா ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு, பல்வேறு நாடுகள் மற்றும் மாகாணங்களில் 20 செயலாக்க மையங்களை அமைத்து செயல்பட்டு வந்துள்ளது.

நிறுவனத்தின் இணையதளம் சீன நாட்டின் உளவுத் துறை, ராணுவம், பாதுகாப்பு ஏஜென்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்தியா மட்டும் அல்லாமல் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் இந்த நிறுவனம் தகவல்களை திருடியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினரையும், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, அமரீந்தர் சிங், அசோக் கெலாட் உள்ளிட்ட மாநில முதல்வர்களையும் சீன நிறுவனம் உளவு பார்த்துள்ளது. அதேபோல ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஸ்ருமிதி இராணி, பியூஷ் கோயல் உள்ளிட்ட அமைச்சர்களும் அதில் இடம்பெற்றுள்ளனர்.

அரசியல் மற்றும் ஆட்சியில் இருப்போருடன் நின்றுவிடாமல் நீதிபதிகள்; விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் என முக்கிய நபர்களையும் அந்நிறுவனம் கண்காணித்துள்ளது. இதேபோல பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்டோரின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டுள்ளன. தற்போது மட்டுமல்லாமல் பல ஆண்டுகள் முன்பிருந்தே அந்த நிறுவனம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

முக்கியமாக தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மறைந்த மு.கருணாநிதி, பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரையும் இந்த நிறுவனம் உளவுபார்த்துள்ளது. 2 மாதங்களுக்கும் மேலாக இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து உளவு பார்த்தது தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சீன நிறுவனம் உளவு பார்த்தது தொடர்பாக மக்களவையில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் அளித்துள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.