head


நீதிமன்றம் எச்சரிக்கை!

|Wednesday, 23rd September 2020|| Page Views: 27

திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றி மீண்டும் திருமணம் செய்து கொள்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் மாயமான, தனது பத்தாம் வகுப்பு படிக்கும் மகளை மீட்டுத் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று முன் தினம் (செப்டம்பர் 21) நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவியை போலீசார் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தினர். அந்த மாணவி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாகவும் அங்கு பணியாற்றிய ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்த போலீசார், அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்பதை மாணவியிடம் மறைத்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கு விசாரணைக்குப் பின் பெற்றோருடன் செல்வதற்கு அந்த மாணவி சம்மதம் தெரிவித்ததால் வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். மேலும் இதுபோன்று மாதத்திற்குக் குறைந்தது 20 வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிரமாக விசாரித்து ஏதாவது செய்ய வேண்டும். திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் சம்மதமில்லாமல் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணமான ஆண்களை மணந்து கொள்ளும் பெண்கள் துன்புறுத்தப்படுவதைக் காணமுடிகிறது என்று தெரிவித்த நீதிபதிகள், பெற்றோர் சம்மதமில்லாமல் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்வது கொள்வது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்று கேள்வி எழுப்பி இது தொடர்பாக ஒரு வாரத்தில் அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.