நரேந்திர மோதி - மஹிந்த ராஜபக்ஷ உரையாடல்: இலங்கையுடன் இந்தியா திடீர் நெருக்கம் காட்டுவது ஏன்? - பரணி தரன்
|Monday, 28th September 2020|Political|
Page Views: 1
|
|
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் பிரதமர்கள் இடையிலான காணொளி வாயிலான பேச்சுவார்த்தை, முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைந்துள்ளது என்றாலும், அது நடத்தப்பட்ட காலமும், நேரமும் விவாதிக்கப்பட்ட விஷயங்களும் இரு தரப்பிலும் அரசியல் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்தியா, இலங்கை இடையே, பெளத்த தொடர்புகளை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்த அதே வேளை, அங்கு வாழும் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமை வலியுறுத்தினார்.
இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பிறகு, இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் முதல் முறையாக இரு நாட்டு நல்லுறவு தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை சனிக்கிழமை காணொளி கூட்டம் வாயிலாக நடத்தப்பட்டது.
இலங்கை தமிழர் உரிமைக்கு முன்னுரிமை
இந்த பேச்சுவார்ததையின்போது இரு தரப்பு பொருளாதாரம், இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்றவை விவாதிக்கப்பட்டபோதும், இலங்கை தமிழர்கள் உரிமைகள் விவகாரத்துக்கும் இரு தலைவர்கள் அதிக முன்னுரிமை கொடுத்தனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்ற நிலையில், அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், இலங்கை தமிழர் விவகாரத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி முக்கியத்துவம் கொடுத்து இலங்கை பிரதமருடன் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இருவருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, கடல்சார் பாதுகாப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது, வர்த்தக மற்றும் முதலீட்டு உறவை வலுப்படுத்துவது, கொழும்பு துறைமுகத்தில் இந்தியா, ஜப்பான் இணைந்து மேற்கொள்ளும் கிழக்கு கன்டெய்னர் முனையம் (ECT) திட்டத்தை செயல்படுத்துவது என இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்தியா, இலங்கை கூட்டறிக்கை வெளியீடு
அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்துவது அவசியம் என்று தனது உரையின்போது இந்திய பிரதமர் மோதி வலியுறுத்தினார். இந்த தகவலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுவு அமைச்சக இணைச் செயலாளர் (இந்தியப் பெருங்கடல் மண்டலம்) அமித் நரங் உறுதிப்படுத்தினார்.
அரசியலமைப்பு விதிகளை அமல்படுத்தி நல்லிணக்கத்தை அடைவதன் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கெளரவம் ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்பார்ப்புகளை உணரும் வகையில் செயல்படுமாறு இலங்கையில் புதிய அரசாங்கத்துக்கு இந்திய பிரதமர் மோதி அழைப்பு விடுத்தார் என்று இந்திய வெளியுறவு அதிகாரி நரங் தெரிவித்தார்.
மேலும், இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாட்டு அரசுகள் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், மக்களின் தீர்ப்புப்படி பேணப்பட்ட நல்லிணக்கத்தை அடைவதன் மூலமும், அரசியலமைப்பு விதிகளை அமல்படுத்துவதன் மூலமும் தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து தமது நாடு செயல்படும் என்ற நம்பிக்கையை இலங்கை பிரதமர் ராஜபக்ஷ வெளிப்படுத்தினார் என்றும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ஆவது திருத்தம் என்றால் என்ன?
இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம், அங்கு வாழும் தமிழ் சமூகத்திற்கு அதிகாரப்பகிர்வு வழங்க வழிவகுக்கிறது. 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தத்தை செயல்படுத்த இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த திருத்தம், 1987ஆம் ஆண்டு, நவம்பர் 14ஆம் தேதி, இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 'ஐக்கியம், இறையாண்மை மற்றும் ஆட்புல உறுதிப்பாட்டைக் கட்டிக்காக்கும் அதேவேளை இலங்கை இனச் சிக்கலைத் தீர்த்து வைப்பதை இந்த திருத்தம் நோக்கமாகக் கொண்டது. தமிழர்கள் வாழும் மாகாண சபைகளுக்கு அரசியல் அதிகாரத்தை கொடுப்பதற்காகவே இந்த 13ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த விடுதலைப்புகளுக்கும் இலங்கை படையினருக்கும் இடையிலான உள்நாட்டு போர் முடிவுக்கு பிறகு அந்த திருத்தம் கள அளவில் அமல்படுத்தப்பட வேண்டும் என ஒலிக்கப்பட்டு வந்தாலும், அது தேர்தல் காலங்களில் தமிழர்களின் கவனத்தையும் வாக்குகளையும் ஈர்க்கும் முழக்கமாகவே இருந்து வருகிறது.
இலங்கையில் குறிப்பாக தமிழர் பகுதிகளிலும், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் இந்த முழக்கம், தேர்தல் காலங்களில் வாக்குகளை ஈர்க்கும் வகையில் அதிகமாகவே ஒலிப்பதை கேட்கலாம்.
அந்த திருத்தத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் அல்லது ரத்து செய்யப்பட வேண்டும் போன்ற குரல் இலங்கையில் சமீபகாலமாக ஒலிக்கப்படுகிறது. இருப்பினும், அதை அங்குள்ள தமிழ் கட்சிகளும் அமைப்புகளும் ஆட்சேபித்து வருகின்றன.
துறைமுக திட்டத்துக்கு உதவி
இந்திய பிரதமரும், இலங்கை பிரதமரும் நடத்திய பேச்சுவார்த்தையில், கொழும்பு துறைமுகத்தில் ECT திட்டம் தொடர்பான பிரச்சனையை இந்தியா எழுப்பியது. அதை செயல்படுத்த 2019 ஆம் ஆண்டில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தம் கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு இலங்கை அரசால் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த திட்டங்களை செயல்படுத்த புதிய அரசாங்கம் ஆரம்பகால மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார் என்று இந்தியா மற்றும் ஜப்பான் செயல்படுத்தும் திட்டம் குறித்து கேட்டபோது இந்திய வெளியுறவு அதிகாரி நரங் தெரிவித்தார்.
இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையின்போது, சில இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை விதித்துள்ள தற்காலிக கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறிய மோதி, அவை நாட்டின் பொருளாதாரத்திற்கும்மக்களுக்கும் பயனளிக்கும் என்றும் நரங் நம்பிக்கை தெரிவித்தார்.
உளவுத்தகவல் பரிமாற்றத்துக்கு ஒப்புதல்
உளவுத் தகவல் பகிர்வு, தீவிரவாத தடுப்பு, கடும்போக்குவாத மீளாய்வு, திறன் மேம்பாடு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வழங்கவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாக இரு நாட்டு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி இரு நாடுகளும் இனி அதிக அளவில் ஆலோசனைகள் நடத்தி, துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி துறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புத் திட்டங்களை விரைவுபடுத்தவும் நரேந்திர மோதியும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒப்புக் கொண்டதாக கூட்டறிக்கை மேலும் கூறுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நாகரிக தொடர்புகள் மற்றும் கலாசார பாரம்பரியங்களை விவரித்த மோதி, இந்தியா, இலங்கை இடையிலான பெளத்த தொடர்புகளை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியை வழங்குவதாக அறிவித்தார்.
பொருளாதார விவகாரங்கள் குறித்து விரிவாக இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது, இந்தியாவுக்கு இலங்கை நிலுவை பாக்கி வைத்துள்ள கடனை திருப்பித்தரும் அவகாசத்தை தள்ளிவைக்கவும், 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான கூடுதல் பண உதவி கோரும் விவகாரம் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார மீட்புக்கு உதவியுடும் வகையில் ஏற்கெனவே 400 மில்லியன் டாலர்கள் அளவிலான பண மாற்றல் வசதியை இந்தியா வழங்கியிருக்கிறது.
மனிதாபிமானத்துடன் மீனவர்கள் விவகாரம்
இரு தரப்பிலும் நடுக்கடலில் சர்வதேச எல்லையை அறியாமல் கடக்கும் மீனவர்களை பிடிக்கும் நாடுகள் அவர்களை மனிதாபிமானத்தோடு நடத்தவும், தற்போது கடைப்பிக்கப்பட்டு வரும் இரு தரப்பு அணுகுமுறையை ஆக்கப்பூர்வமாக கையாள்வது குறித்தும் இந்திய, இலங்கை பிரதமர்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இரு தரப்பு தலைவர்களின் பேச்சுவார்த்தை, நட்பார்ந்த, வெளிப்படையான மற்றும் நல்ல முறையில் நடந்தது என்றும் இந்திய வெளியுறவு அதிகாரி நரங் கூறினார்.
பணியாளர்கள் பரிமாற்றம் மற்றும் பயிற்சி, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு, பாதுகாப்புத் துறைகளில் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பைத் தொடரவும் அவற்றை மேலும் வலுப்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்று இந்திய அதிகாரி தெரிவித்தார்.
இது தவிர, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், விவசாயம், கால்நடை வளர்ப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாக கூறினார்.
இந்த பேச்சுவார்த்தையில், இலங்கையில் இந்தியாவின் அபிவிருத்தி கூட்டுத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், 2020 ஆம் ஆண்டு தொடங்கி ஐந்தாண்டு காலத்திற்கு உயர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சமுதாய அபிவிருத்தி திட்டங்கள் (எச்.ஐ.சி.டி.பி) தொடர்பான ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வை இரு தலைவர்களும் எட்டினர்.
இரு தலைவர்களும் இலங்கையில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திய வீட்டுவசதித் திட்டத்தைத் தொடர ஒப்புக் கொண்டதோடு, தோட்டத் துறையில் 10,000 வீடுகளை விரைவாகக் கட்டமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர் என்றும் நரங் கூறினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு வெகு அருகே உள்ள நட்பு நாடு ஒன்றுடன் காணொளி வாயிலாக அலுவல்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறை.
இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்த பிறகு தனது அண்டை நாட்டுடன் இரு தரப்பு நல்லுறவு தொடர்பாக காணொளி வாயிலாக பேசுவதும் இதுவே முதல் முறை.
சமீபத்தில் இலங்கை கடல் பகுதியில் 2,70,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இந்திய கடற்படையும், கடலோர காவல்படையும் துரிதமாக வழங்கிய உதவியை இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராட்டினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோர் இந்த காணொளி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் 2021-22 ஆண்டில் நிரந்தமல்லாத உறுப்பினராக இந்தியா தேர்வாக சர்வதே சமூகம் வலுவாக ஆதரித்த நிகழ்வுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து கூறியதாக இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
திடீர் நெருக்கம் ஏன்?
இந்தியாவின் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே எல்லைக்கு அப்பால் சீன அத்துமீறல் அல்லது எல்லை தாண்டிய ஊடுருவல் நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக அங்கெல்லாம் இந்தியா படைகளை குவித்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி முதல் கிழக்கு லடாக் பகுதியில் சீன படையினருடனான மோதல் சம்பவத்தால் எல்லை பதற்றம் தொடர்கிறது. தற்போதைக்கு அங்கு ஆத்திரமூட்டல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் தவிர்க்க, இரு தரப்பு ராணுவ கட்டளை அதிகாரிகள் நிலையிலான கூட்டத்தில் சமீபத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், அது களத்தில் எந்த அளவுக்கு கடைப்பிடிக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் எல்லை விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், மறுபுறம் நேபாளத்துக்கு ஆதராகவும் சீனா செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி தடைவிதிக்கப்பட்டபோது, நேபாளத்துக்கு தேவையான வெங்காயத்தை சீனா முன்வந்து வழங்கியது. மேலும், அந்நாட்டில் பல்வேறு சாலை கட்டுமான திட்டங்களையும் சீனா மேற்கொண்டு வருவதால், அதனுடன் முன்பு இந்தியா கொண்டிருந்த உறவை விட சீனாவின் உறவு நெருக்கமாக இருக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவின் தென்கோடிக்கு கீழே இந்திய பெருங்கடல் பகுதியில் தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ள சீனாவுக்கு இருக்கும் ஒரே ஆதாரமாக இலங்கை திகழ்கிறது.
இலங்கையில் உள்நாட்டுப் போருக்குப் பிறகு இந்தியாவை விட அதிகமாகவே சீனா உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தப்பின்னணியில், சீனாவின் மறைமுக அச்சுறுதல் இந்தியாவுக்கு பாதகமாகி விடாமல் பாதுகாக்கும் வகையிலேயே இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடனான பேச்சுவார்த்தையை இந்தியா தற்போது நடத்தியிருப்பதாக தெற்காசிய விவகாரங்களை கவனிக்கும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஊடலும் கூடலும்
2015இல் நடந்த இலங்கை தேர்தலின்போது தமது கட்சியின் தோல்விக்கு இந்தியாவின் ரா உளவுப்பிரிவே காரணம் என்று இலங்கை அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 2018இல் இதே குற்றச்சாட்டை அப்போது இலங்கை அதிபராக இருந்த மைத்திரிபால சிறிசேனவும் முன்வைத்தார். இந்த நிலையில், இந்திய வெளியுறவு அதிகாரிகள் மேற்கொண்ட இடைவிடாத ராஜீய உறவுகள் காரணமாக, ஊடலாக இருந்த இலங்கையுடனான உறவு, தற்போது கூடலாகியிருக்கிறது.
அந்த கூடலின் வெளிப்பாடுதான், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, முன்னெப்போதும் இல்லாத வகையில், மஹிந்த ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தை விவரங்களை ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளிலும் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
நன்றி: பிபிசி
|
|