head


கொழும்பில் அச்சுறுத்தல் நிலைமை காணப்படின் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்!

|Saturday, 17th October 2020|Defence| Page Views: 1

கொழும்பில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படினும் பாரிய அச்சுறுத்தல் நிலைமை இல்லை எனத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அவ்வாறான சூழல் காணப்படின் உடனடியாகத் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 'கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகமானோர் கம்பஹா, கட்டான, மினுவங்கொடை ஆகிய பகுதிகளிலேயே அடையாளம் காணப்படுகின்றனர். அதற்கு மேலதிகமாக மிக குறைந்த அளவிலானோர் வத்தளை, கந்தானை, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்;.

கொழும்பில் இருவர் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதேபோல் குறைந்த அளவிலான கொரோனா தொற்றாளர்களே கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொழும்பிற்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதான கருத்தை பரவலாகக் கேட்கக்கூடியதாக இருக்கின்றது. கொழும்பில் மாத்திரமல்ல நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள எவருக்கேனும் கொரோனா தொற்று காணப்படின் அந்த பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் நிலைமை காணப்படுகின்றது.

இருப்பினும் பாரிய அளவிலான அச்சுறுத்தல் நிலைமை காணப்படின் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் கட்டாயமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். இந்த ஊடரங்குச் சட்டம் பெருமளவு அச்சுறுத்தல் இருக்கக்கூடிய பகுதிகளிலேயே அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினமும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளிலேயே கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். ஆரம்பத்தில் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தோம். இருப்பினும் மேலதிக தேவைப்பாட்டை கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய சுகாதார தரப்பினர் அதற்கான ஏற்பாடுகளை உடனுக்குடன் செய்து வருகின்றனர்.

ஆகவே, ஒரு வைத்தியசாலையில் ஆரம்பித்து இப்பொழுது 16 இற்கும் அதிகமான வைத்தியசாலைகளில் இந்த சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 1700 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். அந்த வகையில் அவர்களுக்கான அனைத்து படுக்கை வசதிகளும் உள்ளன. அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சுகாதார அதிகாரிகள் கடினமாக உழைத்து வருகின்றனர்"
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.