head


பந்தயக் குழந்தைகளா? குழந்தைகள் உலகமும் அவர்களது உரிமைகளும் -தோழி

|Thursday,, 22nd October 2020|General| Page Views: 1

குழந்தைகள் உலகம் அழகானதும் அலாதியானதுமானது. அதைச் செம்மைப்படுத்தி அடுத்தடுத்த படிகளில் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை பெற்றோர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பாகவும் உறுதியானதுமாகவும் வளர்த்தெடுப்பதற்கு, அவர்களின் வாழ்வின் அத்திவாரம் சரியான முறையில் கட்டப்பட வேண்டும்.

இன்றைய புலம் பெயர் தமிழ் சமுதாயத்தில் குழந்தை வளர்ப்பில் பலவிதமான சிக்கல்களும் விரக்தியும் பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கும், அதே வேளை குழந்தைகளுக்கும் கூட ஏற்படுவது கண்கூடாக இருக்கிறது. இது குழந்தைகளின் உள வளத்தை சிதைக்க வல்லதாகவும் இருப்பது துயரம்.

கல்வியறிவில் உயர்ந்து சிறந்த பதவிகளில் உள்ள பல பெற்றோர்களே தம் குழந்தைகளை தமது சமூகத்திலுள்ள ஏனைய பெற்றோர்களுக்குப் போட்டியாக வளர்க்க முற்படுவது எமது சமுதாயத்தின் சாபக் கேடாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது.

குழந்தைகளை எப்போதும் மற்றவர்களுடன் போட்டி போட வைத்து ஒரு பந்தயக் குதிரையின் மனப்பாங்குடன் வளர்ப்பது எம்மைச் சுற்றி நடை பெறுகிறது. இது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டி எழுப்பாது. மாறாக ஒருவரில் ஒருவர் பொறாமை கொள்ளும் ஒரு மனச்சிக்கல் கொண்ட ஒரு சமுதாயத்தையே பிரசவிக்கும். போட்டி மனப்பான்மையில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுத்து அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி அவதியுறாமல் அன்பான, சமூகப் பிரக்ஞை உள்ள குழந்தைகளை வளர்த்தெடுப்பதற்கு பாடுபடுவோம்

எது எப்படியாயினும் குழந்தைகளின் உடல், உள வளத்தைக் கருத்தில்க் கொள்ளாது பெற்றோர்களோ பாதுகாவலர்களோ தமது எதிர்பார்ப்புக்களை குழந்தைகள் மீது சுமத்துவது ஆபத்தானது. அவர்களது விருப்பு வெறுப்புகளை ஆராயாது அவர்களை தமது விருப்பத்தை நிறைவேற்றச் சொல்வது குழந்தைகளின் ஜனநாயக உரிமைகளை மழுங்கடிக்கச் செய்கிறது.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஒரு பகுதியாக இயங்கும் யூனிசெஃப் (UNICEF) நிறுவனம் குழந்தைகளின் உரிமைகளை ஆவணப்படுத்தி இருப்பது மாத்திரமன்றி அதை பல நாடுகளிலுமுள்ள அரச பாடசாலைகளை அவ்வுரிமைகளை பாதுகாக்கும் அமைப்புகளாக மாற்றம் செய்தும் வருகிறது.

உதாரணமாக இங்கிலாந்திலுள்ள பாடசாலைகள் 'உரிமைகளை மதிக்கின்ற பாடசாலைகள்' (Rights Respecting Schools Scheme) என்கின்ற ஒரு திட்டத்தின் கீழே யூனிசெஃப் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கின்றன. இவற்றில் பலவிதமான உரிமைகளும் மிக விபரமாக குறிப்பிடப்படுள்ளது. இதன் அடிப்படையில் ஆசிரியர்களை குழந்தைகளின் உரிமைகளின் பாதுகாவலர்களாகவும் குழந்தைகளை அவ்வுரிமைகளை பாவிப்பவர்களாகவும் கருதப்படுகிறது.

இவ்வாவணமானது 54 சிறிய பகுதிகளைக் கொண்டது, இந்த 54 பகுதிகளில் 43வதிலிருந்து -54 வது பகுதிகள் அரசும் குழந்தைகளை சுற்றியிருக்கும் பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர்களும் எவ்வாறு இந்த உரிமைகளை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இவற்றில் சிலவற்றை நாம் பார்த்தோமானால், சாதாரணமாக நாம் நினைக்கும் பல விடயங்கள் செய்யப்படக்கூடாதவையே! கீழ் வரும் பந்திகளில் சில உதாரணங்களைப் பார்ப்பது பயனளிக்கக் கூடியவையாகலாம்.

உங்கள் கவனத்திற்கு !

· மேற்குறிப்பிட்ட குழந்தைகளின் உரிமைகளின் அடிப்படையில் குழந்தைகளின் தனியுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் அனுமதி அல்லது பெற்றார்களின் அனுமதியின்றி அவர்களது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கப்படக் கூடாது. இங்குள்ள பாடசாலைகளில் எமது வகுப்பில் கல்வி கற்கும் எந்த மாணவ, மாணவியையும் நாம் பாடசாலைக்கு வெளியே பிரசுரிக்கும் உரிமை இருப்பதில்லை. அது தண்டனைக்குரிய குற்றமாகும். அதே போல பாடசாலைக்கு எதாவது ஒரு காரணத்தோடு உள்ளே வரும் பெற்றோர்கள் தமது குழந்தைகள் தவிர்ந்த ஏனைய குழந்தைகளைப் புகைப்படம் எடுப்பதும் அதை சமூக வலைத்தளங்களில் குழநதைகளின் பெற்றோர் அனுமதியின்றி பிரசுரிப்பதும் பாடசாலை நிர்வாகத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.

· குழந்தைகள் விளையாடுவதற்கும் ஓய்வு எடுத்துக் கொள்வதற்கும் அவர்களுக்கு உரிமைகள் உண்டு. அவர்களை ஓய்வில்லாமல் இங்கும் அங்குமாகப் படிப்பதற்காக மட்டும் விரட்டிக் கொண்டே இருப்பது உரிமை மீறல் மாத்திரமல்ல அவர்களது உடல், உள வளத்திற்கு நீண்ட காலத்தில் பாதிப்பைக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு ஆற்றல் உண்டு என்பதும் ஒவ்வொரு குழந்தையும் அதை வெளிக்கொணரும் நேரம் வேறுபடும் என்பதும் பெற்றோர்களால் உணரப்பட வேண்டும்.

· இன்னொரு குழந்தை கல்வியில் அல்லது சங்கீதத் துறையில் திறமையாக இருக்கிறதென்பதற்காக தமது குழந்தையும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்குமேயல்லாமல் வளருவதற்கு உதவி செய்யாது.

ஒரு குழந்தையின் ஆற்றலுக்கும் அவர்களது திறமைக்கும் அதிகமாக அவர்களுக்கு தேவையில்லாத அல்லது அவர்களுக்கு விருப்பம் இல்லாத ஒரு துறையில் அவர்களை ஈடுபடும்படி வற்புறுத்துவது அவர்களை பாதிக்கும் என்பது மட்டுமல்லாது இது ஒரு சிறுவர் துஷ்பிரயோகமாகவே இங்கு கருதப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள அநேகமான இளம் பெற்றோர்கள் தாயகத்தில் போர் காலங்களின் துயரம் அறிந்து, அனுபவப்பட்டு புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் தமது அனுபவங்களை தமது குழந்தைகளுக்கு தகுந்த முறையில் எடுத்துச் சொல்வது என்பது வேறு, குழந்தைகளைக் கட்டாயமாகக் கொடூரமான காணொளிகளைப் பார்க்க வைப்பது, கொடிகளைப் பிடிக்க வைப்பது, வயதுக்கு மீறிய, அரசியல் சார்ந்த வார்த்தைகளைப் பாவிக்க வைப்பது என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது தவிர குழந்தைகளுக்கு எடுத்ததெற்கெல்லாம் வெகுமதி கொடுப்பதை இயலுமானவரை தவிர்க்கப்பட வேண்டும். வெகுமதிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் , குழந்தைகள் தமது படிப்பை அல்லது ஒரு நல்ல விடயத்தை வெறும் வெகுமதிக்காகவே செய்ய முற்படக்கூடும். அது மட்டுமில்லாமல் தாம் ஈடுபட்ட துறையில் நல்ல தரங்கள் கிடைக்காவிடின் அதை தமது வாழ்வின் தோல்வியாக நினைத்து துவண்டு விடும் சந்தர்ப்பங்கள் கூட வரலாம்.

நல்ல தரங்கள் கிடைக்காதவிடத்து குழந்தைகளுடன் இருந்து அதைக் கதைத்து, அடுத்த தடவை என்ன செய்யலாம் என்பதற்கான வழிவகைகளை எடுத்து சொல்வது, அவர்கள் தமது தவறுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வழி செய்யும்.

பெற்றோர்கள் பாதுகாவலர்கள் தமக்கும் குழந்தைகளுக்குமிடையே ஒரு பலமான, பாதுகாப்பான, அன்பான உறவைக் கட்டி எழுப்ப வேண்டுமானால், பெற்றோர்கள் பாதுகாவலர்கள் குழந்தைகளுக்கான சுய மரியாதையை அவர்களுக்கான உரிமைகளை இயன்றவரை அவர்களுக்கு கொடுத்து வளர்ப்பது அவசியம். உணர்வுகள் மதிக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் தமது உள வளத்திலும் தாம் ஈடுபட்ட துறையிலும் திறமையுடன் செயற்பட்டு வெற்றியாளர்களாய் திகழ்வார்கள்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.