head


எரிசக்தி பயன்பாட்டை இந்தியா இரட்டிப்பாக்கும்!

|Tuesday, 27th October 2020|| Page Views: 29

2022-க்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை நிறுவுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, 2030-க்குள் 450 ஜிகாவாட் எரிசக்தி திறனை எட்டும் வகையில் உயர்த்தப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி கூறினார். நான்காவது இந்திய எரிசக்தி மன்றத்தின் கூட்டமான செராவீக்கில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கவுரை ஆற்றினார். மாறிவரும் உலகத்தில் இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் என்பது இந்த வருட நிகழ்ச்சியின் கருப்பொருளாகும்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியா உத்வேகத்துடன் உள்ளது என்றும், அதன் எரிசக்தி எதிர்காலம் ஒளிமயமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதென்றும் கூறினார். மின்சாரத் தேவை மூன்றில் ஒரு பங்காக குறைந்தது, நிலையற்ற விலைகள், பாதிக்கப்பட்ட முதலீட்டு முடிவுகள், அடுத்த சில வருடங்களில் குறையும் என்று எதிர்பார்க்கப்படும் எரிசக்திக்கான தேவை போன்ற பல்வேறு சவால்களுக்கு இடையிலும், முன்னணி எரிசக்தி நுகர்வோராக இந்தியா உருவாகும் என்றும், நீண்ட காலத்தில் அதன் எரிசக்தி நுகர்வு இரட்டிப்பாகும் என்றும் மதிப்பிடப்படுவதாக அவர் கூறினார்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்தை பொருத்தவரை உலகின் மூன்றாவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா இருப்பதாகக் கூறிய பிரதமர், 2024-க்குள் இந்திய விமான நிறுவனங்கள் தங்களுடைய தற்போதைய அளவான 600 விமானங்களை 1200-ஆக அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுவதாகக் கூறினார். எரிசக்தி கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைப்பதையும், நம்பகத்தன்மையுடன் விளங்குவதையும் இந்தியா நம்புவதாக அவர் கூறினார். அப்போது தான் சமூக-பொருளாதார மாற்றங்கள் நிகழும். எரிசக்தித் துறை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதாகவும், வாழ்க்கை முறையை எளிதாக்குவதாகவும் கூறிய பிரதமர், இதை நோக்கிய அரசின் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். குறிப்பாக கிராமப்புற மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்களுக்கு இந்த நடவடிக்கைகள் உதவியதாக அவர் தெரிவித்தார்.

நீடித்த வளர்ச்சிக்கான சர்வதேச விதிகளைப் பின்பற்றும் அதே வேளையில், எரிசக்தி நீதியை உறுதி செய்வதை இந்தியாவின் எரிசக்தித் திட்டம் லட்சியமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். குறைந்த கரியமிலத் தடத்துடன் இந்தியர்களின் வாழ்வை மேம்படுத்த அதிக எரிசக்தி தேவைப்படும் என்பது இதன் பொருள். இந்திய எரிசக்தித் துறை வளர்ச்சியை சார்ந்து, தொழில்களுக்கு தோழமையாய், சுற்றுச்சூழல் குறித்த பொறுப்புணர்ச்சியுடன் இருக்கும் என்று பிரதமர் கூறினார். இதனால் தான் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஆதாரங்களை அதிகரிப்பதில் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கும் நாடுகளில் இந்தியவும் ஒன்றாக இருப்பதாக அவர் கூறினார்.

36 கோடிக்கும் அதிகமான எல் ஈ டி மின்விளக்குகளை விநியோகித்தது, எல் ஈ டி மின்விளக்குகளின் விலையை பத்து மடங்கு குறைத்தது, கடந்த ஆறு வருடங்களில் 1.1 கோடிக்கும் அதிகமான திறன்மிகு எல் ஈ டி தெரு விளக்குகளை அமைத்தது போன்ற இடையீடுகள் தூய்மையான எரிசக்தி முதலீட்டுக்கான மிகவும் கவர்ச்சிகரமான வளர்ந்து வரும் சந்தையாக இந்தியாவை மாற்றியுள்ளதாக பிரதமர் கூறினார். இந்த நடவடிக்கைகளின் மூலம் வருடத்துக்கு 60 பில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் சேமிக்கப்படுவதாகவும், வருடத்துக்கு 4.5 கோடி டன்களுக்கும் அதிகமான கரியமில வாயு வெளியேற்றம் குறைந்துள்ளதாகவும், வருடத்துக்கு சுமார் ரூ 24,000 கோடி சேமிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச உறுதியைக் காப்பாற்ற இந்தியா சரியான பாதையில் செல்வதாக பிரதமர் குறிப்பிட்டார். 2022-க்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை நிறுவுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, 2030-க்குள் 450 ஜிகாவாட் எரிசக்தி திறனை எட்டும் வகையில் உயர்த்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார். தொழில் உலகத்தின் பல்வேறு நாடுகளை விட இந்தியாவின் கரியமில வாயு வெளியேற்றம் குறைவாக உள்ள போதிலும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் தனது முயற்சிகளை இந்தியா தொடரும் என்று அவர் கூறினார்.

எரிசக்தித் துறையின் சீர்திருத்தங்கள் கடந்த ஆறு வருடங்களில் வேகமெடுத்துள்ளதாக பிரதமர் கூறினார். ஆராய்ச்சி மற்றும் உரிமக் கொள்கையில் செய்யப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள், வருவாய் அதிகப்படுத்துதலில் இருந்து உற்பத்தி அதிகப்படுத்துதல் நோக்கிய கவன மாற்றம், அதிக வெளிப்படைத்தன்மை மீதான கவனம், ஒழுங்குப்படுத்தப்பட்ட நடைமுறைகள் மற்றும் 2025-க்குள் சுத்திகரிப்பு திறனை 250 மில்லியன் மெட்ரிக் டன்களில் இருந்து 400 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரித்தல் போன்ற பல்வேறு பெரும் சீர்திருத்தங்களை அவர் பட்டியலிட்டார்.

உள்நாட்டு எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பது அரசின் முக்கிய முன்னுரிமை என்று கூறிய அவர், 'ஒரே தேசம், ஒரே எரிவாயு தொகுப்பின்' வாயிலாக எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக நாட்டை மாற்றுவதன் மூலம் இது எட்டப்படும் என்று கூறினார். கச்சா எண்ணெய் விலையை இன்னும் அதிகப் பொறுப்புணர்ச்சியுடன் நிர்ணயிக்குமாறு சமூகத்தை பிரதமர் வலியுறுத்தினார். எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு வெளிப்படையான மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க சந்தையை உருவாக்குமாறு தொழில் துறையை அவர் கேட்டுக் கொண்டார். இயற்கை எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், எரிவாயுவின் சந்தை விலையில் சீரானத் தன்மையை கொண்டு வரவும், இயற்கை எரிவாயு சந்தைப்படுத்துதல் சீர்திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளதாகவும், இதன் மூலம் மின்-ஏலத்தின் வாயிலாக இயற்கை எரிவாயுவின் விற்பனைக்கு அதிக சந்தைப்படுத்துதல் சுதந்திரம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் முதல் தானியங்கு தேசிய அளவிலான எரிவாயு விற்பனை தளம் இந்த வருடத்தின் ஜூன் மாதம் தொடங்கப்பட்டதாகவும், எரிவாயுவின் சந்தை விலையை கண்டறிவதில் நிலையான செயல்முறைகளை இது பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். தற்சார்பு இந்தியா என்னும் லட்சியத்தை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் கூறினார். தற்சார்பான இந்தியா உலக பொருளாதாரத்துக்கும் வலுவூட்டும் என்றும், இந்த முயற்சிகளின் மையத்தில் எரிசக்தி பாதுகாப்பு உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இந்த சவாலான காலக்கட்டத்திலும், எண்ணெய் மற்றும் எரிவாயு மதிப்பு சங்கிலியில் அதிக முதலீட்டைக் கொண்டு வந்திருப்பதன் மூலம் இந்த முயற்சிகள் பயனளிப்பதாகவும், இது போன்ற அறிகுறிகள் இதரத் துறைகளிலும் தெரிவதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய சர்வதேச நிறுவனங்களுடன் யுக்தி சார்ந்த மற்றும் விரிவான எரிசக்தித் தொடர்புகளை அரசு ஊக்கப்படுத்தி வருவதாக அவர் கூறினார். சுற்றுப்புறத்துக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் கொள்கையின் ஒரு பகுதியாக, நமது அண்டை நாடுகளுடன் எரிசக்தி தடங்கள் அமைப்பதற்கு பரஸ்பர நலன் கருதி முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் கூறினார். சூரிய பகவானின் ரதத்தை இயக்கும் ஏழு குதிரைகளைப் போன்று, இந்தியாவின் எரிசக்தி வரைபடம் ஏழு முக்கிய உந்து சக்திகளைக் கொண்டிருப்பதாக பிரதமர் கூறினார்.

1. எரிசக்தி-சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி முன்னேறுவதற்கான நமது முயற்சிகளை வேகப்படுத்துதல்

2. குறிப்பாக பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி போன்ற தொல்படிம எரிபொருட்களின் தூய்மையான பயன்பாடு

3. உயிரி-எரிபொருட்களுக்கு ஊக்கமளிப்பதற்காக உள்நாட்டு ஆதாரங்களின் மீது அதிக சார்பு

4. 450 ஜிகாவாட் என்னும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை 2030-க்குள் எட்டுதல்

5. போக்குவரத்தை கார்பன் மயத்தில் இருந்து குறைப்பதற்காக மின்சாரத்தின் பங்களிப்பை அதிகப்படுத்துதல்

6. ஹைட்ரஜன் போன்ற வளர்ந்து வரும் எரிசக்திகளை நோக்கி முன்னேறுதல்

7. அனைத்து எரிசக்தி அமைப்புகளிலும் டிஜிட்டல் புதுமைகள்

கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக அமலில் இருக்கும் துடிப்பான எரிசக்தி கொள்கைகள் தொடரும் என்று அவர் கூறினார்.

தொழில்துறை, அரசு மற்றும் சமூகத்துக்கிடையேயான முக்கிய தளமாக இந்திய எரிசக்தி மன்றம்-செராவீக் திகழ்வதாகக் கூறிய பிரதமர், சிறப்பான எரிசக்தி எதிர்காலத்துக்கான பலனளிக்கக்கூடிய நடவடிக்கைகள் இந்த மாநாட்டில் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.