head


இலங்கை உட்பட தெற்காசியநாடுகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் இருந்து எதனை எதிர்பார்க்கலாம்? (பி.கே. பாலச்சந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றில் எழுதிய குறிப்பை தழுவி தமிழில் தருபவர் சீவகன் பூபாலரட்ணம்)

|Wednesday, 11th November 2020|Political| Page Views: 1

சீனாவைக் கட்டுப்படுத்துவது அமெரிக்காவின் தெற்காசியக் கொள்கையாக இருக்கின்றபோதிலும், புதிய அதிபர் ஜோ பைடன் தெற்காசிய நாடுகளின் கவலைகளை எதிர்கொள்ள முயல்வதுடன், அமெரிக்காவை சீனாவுக்கு மாற்றாக ஒரு பொருளாதார வளர்ச்சியின் ஊக்கியாக உருவாக்கவும் முயலுவார்.

ஆசியாவுக்கான அமெரிக்க கொள்கையில் தெற்காசியா கடந்த சில ஆண்டுகளாக முக்கியத்துவம் பெறுவதன் காரணம், சீனா, தெற்காசியாவில், உள்கட்டுமான திட்டங்களில் பாரிய அளவில் முதலீடுகளைச் செய்வதுடன் தனது கூடாரத்தை அங்கு பரப்பி வருவதுதான்.

தென்சீனக் கடலில் செய்தது போல, இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் சீனா தனது பலத்தை காண்பிக்க முயல்வது தற்போதைய பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளான இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகத்தான் இந்தியாவும் அமெரிக்காவும், கடற்போக்குவரத்து சுதந்திரம் மற்றும் விதிப்படியான கடற்போக்குவரத்து ஆகியவை குறித்து அதிகம் பேசுவதுடன், சீனாவுக்கு எதிரான ஒரு கூட்டணியாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியன சேர்ந்து “குவாட்” என்ற அணியையும் ஏற்படுத்தியுள்ளன.

அதனால்தான், ஆசியாவைப் பொறுத்தவரை, அது கிழக்கு ஆசியாவோ, தெற்கு ஆசியாவோ, தென்கிழக்காசியாவோ, எந்தப்பகுதியானாலும் ஆசியாவுடனான அமெரிக்காவின் உறவை நிர்ணயிக்கும் காரணியாக சீனாவே இருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டுடனான அமெரிக்காவின் இருதரப்பு உறவும், குறித்த நாட்டின் சீனாவுடனான தொடர்பு அல்லது உறவை மையமாகக்கொண்டே அமையும்.

பதவி விலகும் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் சீனாவுடன் ஒரு கடும்போக்கான அணுகுமுறையையே கொண்டிருந்தார். சீனாவின் ஆட்சியில் இருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியை விலக்குவதே டிரம்பின் கொள்கை என்று அவரது அரசுத்துறைச் செயலரான மைக் பொம்பியோ பல தடவைகள் கூறியுள்ளார். மறுபுறமாகச் சொன்னால், டிரம்பின் நிர்வாகம் சீனாவின் கழுத்தில் கையை வைக்கும் நோக்கிலேயே செயற்பட்டு வந்தது.

இந்த முரண்பாட்டை இரு நாடுகளுக்கு இடையிலான முரண்பாடாக இல்லாமல், இரு கொள்கைகளுக்கு இடையிலான, அதாவது ஜனநாயகத்துக்கும் கம்யூனிஸத்துக்கும் இடையிலான முரண்பாடாக நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையிலான முரண்பாடாக அமெரிக்கா உருவாக்கியிருந்தது. அமெரிக்காவின் வணிக மற்றும் தொழில்நுட்ப கொள்கைகள் “கடும் தாக்குதல்” போக்கிலும் அவர்கள் பயன்படுத்திய மொழிகூட கடினமானதாகவும் இருந்தது. கொழும்பு வந்தபோது மைக் பொம்பியோ அவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு “வேட்டைமிருகம்” என்றும் சீனாவிடம் கடன்பட்ட நாடுகள் கடன் பொறியில் மாட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். சீனாவிடம் பெருமளவு அபிவிருத்திக்கடன் பெற்ற இலங்கை போன்ற நாடுகளின் மனதில் அச்சத்தை விதைப்பதாகவே பொம்பியோவின் சிந்தனை இருந்தது.

சீனா குறித்தமாறுபட்ட அணுகுமுறை

உலகில் அமெரிக்காவின் முன்னிலைக்கு சவாலாக இருக்கும் சீனாவை கட்டுப்படுத்தத்தான் ஜோ பைடனும் முயல்வார். ஆனால், அவர் கையாழும் முறைகள் வேறுபடும். அவரது திட்டத்தின் கீழ், அவர் கேந்திர/இராணுவ கூட்டுறவை மாத்திரமல்லாமல், இரு தரப்புக்கும் நன்மை பயக்கக்கூடிய பொருளாதார கூட்டுறவையும் வலியுறுத்துவார். பதவி விலகும் ஜனாதிபதி டிரம்ப் Trans Pacific Partnership (TPP) போன்ற பொருளாதார அமைப்புகளில் இருந்து வெளியேறினார். ஆனால், அப்படியான அமைப்புகளுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுப்பதற்கு பைடன் ஊக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவின் கடன்பொறி மற்றும் பட்டுப்பாதை பொருளாதார திட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நாடுகளுக்கு Trans Pacific Partnership (TPP) போன்ற அமைப்புகளின் மூலம் ஒரு நம்பிக்கையான மாற்றை கொடுக்க அவர் முயலுவார்.

டிரம்பைப் போலல்லாது, பைடன் சீனாவை பிறப்பு எதிரியாகப் பார்க்காமல் ஒரு போட்டியாளராக மட்டும் பார்ப்பார். வணிகம், தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் துறை உட்பட்ட சர்வதேச விவகாரங்களில் சீனா தனது நடத்தையை மறுசீரமைப்பு செய்தால், அதற்கு நன்மை கிடைக்கும் என்று அந்த நாட்டுக்கு உணர்த்தும் வகையிலான அணுகுமுறையை பைடன் கடைப்பிடிப்பார். சீனாவில் ஆட்சி மாற்றத்தை செய்ய அவர் முயலமாட்டார், அதற்குப் பதிலாக சீனாவின் மனித உரிமைகள், வணிகம், தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் கொள்கைகளில் மாற்றங்களை செய்வதற்காக அந்த நாட்டின் மீது அழுத்தங்களைக் கொடுக்க ஜனநாயக நாடுகளை அணிதிரட்டுவார். சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை கொள்ளைக்காரன் என்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தி அழைப்பதற்கு பதிலாக, அமெரிக்க ஜனாதிபதிக்கு உரிய கௌரவத்துடன் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பார்.

டிரம்ப் செய்ததுபோல வெறுமனே சீனாவைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக பைடன், அமெரிக்காவின் சொந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தகமைகளை அதிகரிக்க முயற்சிப்பார். அதனை அவர் தான் மாத்திரம் தனியாக செய்வதற்காக அல்லாமல், தனது கூட்டணி நாடுகள் மற்றும் ஏனைய ஜனநாயக நாடுகளுடன் சேர்ந்து அனைத்து தரப்புக்கும் நன்மை தரக்கூடிய வகையில் செய்ய முயற்சிப்பார். அதற்காக, தாம் நட்புக்கொள்ள விரும்பும் நாடுகளுக்கு நன்கு செவிசாய்ப்பதுடன், அவர்களின் கரிசனைகளை கையாளவும் முயற்சிப்பார். இதன் அர்த்தம் என்னவென்றால், சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தினால், தாங்கமுடியாத கடனில் மூழ்கியிருக்கும் நாடுகளுக்கு ஒரு மாற்றுத்திட்டத்தை பைடன் முன்வைக்க விரும்புவார். சீனா வழங்கிய அபிவிருத்திக்கடன்களை வெறுமனே விமர்சித்துக்கொண்டிராமல், அமெரிக்கா இலங்கையில் முதலீடுகளைச் செய்ய முன்வரவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கும் இலங்கை போன்ற நாடுகளுக்கும் இது பொருந்தும்.

இந்தியா

இந்தியாவைப் பொறுத்தவரை அந்த நாட்டுக்கு 1959 முதலே சீனாவுடன் எல்லை குறித்த பிரச்சினை இருந்துவருவதுடன், 1962இல் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு மாதகால போரும் நடந்தது. தான் மூன்று தடவை போரிட்ட தனது மற்றுமொரு அண்டைநாடான பாகிஸ்தானுடன் சீனா தனது உறவை வளர்த்து வருவதும் இந்தியாவுக்கு தொல்லையாக இருக்கிறது. பாகிஸ்தானுடனான இந்தியாவின் போர்களில் இரண்டு காஸ்மீருக்காகவும் மற்றொன்று வங்கதேசத்துக்காகவும் நடந்தன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு கொடுப்பது இந்தியாவுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது.

குவாட் அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதற்காக இந்த விடயங்களில் டிரம்பைப் போல பைடனும் இந்தியாவை ஆதரிப்பார். ஆனால், சீனாவைப் பொறுத்தவரை தோளை உலுப்பிக்கொண்டு சண்டைக்கு நிற்பதற்கு பதிலாக ஆக்கபூர்வமான இராஜதந்திர வழிகளில் அதனை கையாள அவர் விரும்புவார் என்பதால், பைடன், டிரம்பைப்போல இந்தியாவையும் சீனாவையும் மோதவிட்டுப் பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டார். இது இந்திய- சீனப்போர் ஒன்று உருவாவதை தவிர்க்க உதவும்.

காஸ்மீரில் மனித உரிமை மீறல்கள், முஸ்லிம்களின் மீதான பாரபட்சம் போன்ற மோடியின் கொள்கைகள் குறித்து டிரம்பைப்போல பைடன் அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டார். மோடியை ஓரங்கட்டாத வகையிலேயே மனித உரிமைகள் குறித்து பைடன் பேசுவார். ஐநாவின் மனித உரிமைக் கவுன்ஸிலுக்கு அமெரிக்காவின் ஆதரவைக்கொடுக்க வைக்க பைடன் முயலுவார். டிரம்ப் இப்போது அதனை இல்லாது செய்துள்ளார். இது இந்தியாவில் மனித உரிமைகள் விவகாரத்துக்கு கிட்டத்தட்ட ஒரு அடி மாதிரித்தான்.

இரான் குறித்த கொள்கை மீதான தாக்கம்

இரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது என்ற டிரம்பின் முடிவை மாற்ற பைடன் முயலுவார். அந்த அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினால், அது இரான் அணு ஆயுதத்திட்டத்தை தொடர்வதற்கான நிலைக்கே வழி செய்யும். ஆகவே, இரானை புகழ்ந்து பேசி மயக்கும் வகையில், அவர்கள் மீதான பொருளாதாரத்தடையை குறைக்கவும் பைடன் முயலலாம். இதன் மூலம் கைவிடப்பட்ட இந்திய – இரான் இடையிலான சில திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க உதவும். இதில் ஒரு துறைமுகத்திட்டம் மற்றும் ஒரு ரயில் திட்டம் ஆகியன அடங்குகின்றன. இரானுடனான தனது நீண்ட கால உறவை இந்தியா மீட்கவும் இது உதவும்.

இலங்கை

இலங்கை சீனாவின் கடன்பொறியில் அகப்பட்டுள்ளதாக விமர்சிப்பதை விட்டுவிட்டு, அமெரிக்கா இலங்கையில் முதலீடுகளைச் செய்ய முன்வரவேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்‌ஷ, மைக் பொம்பியோவுக்கு கூறிய விடயங்களை பைடன் அமுல்படுத்த நினைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பொம்பியோவிடம் அமெரிக்கா முதலீடு செய்யக்கூடிய துறைகளின் பட்டியல் ஒன்றை இலங்கை ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் சமர்ப்பித்திருந்தனர். அமெரிக்கா எல்லா நாடுகளுக்கு நட்பாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும் என்று காட்டும் தனது முயற்சியில் ஒரு பகுதியாக ஜனநாயக நாடுகளை தன்னோடு ஒன்றாக அழைத்துச் செல்லும் திட்டத்துக்கேற்ப, பைடன் இலங்கையின் இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்கா ஐநாவின் மனித உரிமைக் கவுன்ஸிலுக்குள் திரும்பவும் வந்த பின்னர், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்களில் பைடன் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பார் என்ற அச்சம் கொழும்பு வட்டாரங்களில் காணப்படுகின்றது. ஜனநாயகக் கட்சியினர் பாரம்பரியமாகவே உரிமைகள் குறித்த விடயங்களில் ஆர்வமாகவே இருப்பார்கள். ஒபாமா ஆட்சியும் இந்த விடயத்தில் இலங்கைக்கு எதிராக செயற்பட்டது.

துணை அதிபராக அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமலா ஹரிஸ் அவர்கள் பாதி தமிழர் என்பதால், தமிழரின் பிரிவினைவாத கோரிக்கையை முன்னெடுப்பார் என்ற ஒரு பயமும் சிங்கள பெரும்பான்மையினர் மத்தியில் காணப்படுகின்றது. எச் எல் டி மஹிபால என்னும் ஆய்வாளர் சண்டே ஒப்சேர்வர் சஞ்சிகையில் நவம்பர் 8 இல் எழுதிய கட்டுரை ஒன்றில், புலம்பெயர் தமிழர் இதற்கான நடவடிக்கையை ஏற்கனவே ஆரம்பித்திருப்பார்கள் என்ற வகையில் எழுதியுள்ளார்.

ஆனால், ஜனநாயகம் குறித்த தமது நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக இன மற்றும் நல்லிணக்க விடயங்களை ஜோ பைடன் நிர்வாகம் கையில் எடுக்கலாம். ஆனால், மிகவும் பலமுடன் ஆழமாக இலங்கையில் வேரூன்றி இருக்கும் கோத்தபாய அரசாங்கத்தை பகைத்து அதன் மூலம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான தமது முயற்சியை பலவீனப்படுத்திக் கொண்டுவிடக்கூடாது என்பதையும் பைடன் நிர்வாகம் மனதில் வைத்திருக்கும். ஆகவே மனித உரிமைகள் விடயத்தை பேசினாலும், அதற்கு மேல் போய் கோத்தபாய அரசாங்கத்தை தேவையில்லாமல் பகைத்துக்கொள்ள அது விரும்பாது. அதுமாத்திரமல்லாமல், தமது குவாட் நாடுகளின் அணியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இலங்கையை இணைத்துக்கொள்வதற்கும் அது முயற்சிக்கும்.

டிரம்ப் போலல்லாது, பைடன் தமது தற்போதை உறவுகளை மேலும் பலப்படுத்தவும் விரிவுபடுத்தவுமே விரும்புவார். ராஜபக்‌ஷ அரசாங்கம் மீண்டும் செய்துகொள்ள விரும்பும் எம்சிசி (மில்லேனியம் சவால் கூட்டுறவு) ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளவும் அவர் உடன்படலாம்.

பாகிஸ்தான்

பாகிஸ்தானைப் பொறுத்தவரை அதன் முடிவிலாத கவலை இந்தியாவுடன் தொடருகின்ற பதற்றமும் அண்டைய ஆப்கானிஸ்தானில் தாமதமாகின்ற அமைதி முயற்சிகளும்தான். பைடன் இந்தியாவின் நரேந்திர மோடியுடன் வெளிப்படையாக நட்பாக இருப்பது கொஞ்சம் சாத்தியமில்லை என்ற நிலையில், பாகிஸ்தானுடனான விவகாரங்களின் போது மோடி கொஞ்சம் தள்ளி இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் எதிர்பாக்கும்.

டிரம்பைப் போல ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படையை வெளியேற்றுவதில்தான் பைடனும் ஆர்வம் காட்டுவார், ஆனால், டிரம்ப் நினைக்கும் அளவுக்கு வேகமாக பைடன் வெளியேற்றத்தை செய்யமாட்டார். டிரம்பைப் போலவே பைடனும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களும் ஆப்கான் அரசாங்கமும் முடிந்த விரைவில் அமைதி நடவடிக்கைகளை முன்னேடுக்க வேண்டும் என்றுதான் விரும்புவார். அந்த அமைதி முயற்சிகளுக்கு துணையாக அமெரிக்கப் படையின் ஒரு பிரிவை அங்கு நிறுத்திவைக்க அவர் நினைப்பார். ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்கப் படையை அவசரமாக வெளியேற்றாமல் தாமதிப்பதும், அங்கு அமைதித் தீர்வை நோக்கிய நடவடிக்கைகளும் பாகிஸ்தானின் விருப்பத்துக்கு அமைவானதே.

கருத்தொற்றுமையின் ஊடாகச் செயற்படுவதில் ஈடுபாட்டுடன் இருப்பதன் அடிப்படையில், ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் அரசாங்கத்துடனும், அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பாகிஸ்தான் இராணுவத்துடனும் பேச்சுக்களை பைடன் ஆரம்பிக்கலாம். அதன் மூலம் பாகிஸ்தான் சீனாவின் காலில் ஒட்டுமொத்தமாக விழுவதையும் தடுக்க முடியும். அங்கும் அமெரிக்க முதலீடுகளை அவர் ஊக்குவிக்கலாம். முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஆட்கள் குடியேறுவதற்கான டிரம்பின் தடையை நீக்குவதற்கான அவரது செயற்பாடுகள் பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்தலாம்.

நேபாளம், வங்கதேசம் மற்றும் மாலத்தீவுகள்

இந்திய வட்டகைக்குள் வருவதன் காரணமாக நேபாளம், வங்கதேசம் மற்றும் மாலத்தீவுகளுடனான அமெரிக்காவின் கேந்திர மற்றும் பொருளாதார உறவுகள் தவிர்க்க முடியாதவை. நேபாளம் சீனாவுடன் ஒரு எல்லையை பகிர்தல் மற்றும் மாலத்தீவுகள் இந்து சமுத்திரத்தின் வாயிற்காவலனாகத் திகழ்தல் ஆகியவை காரணமாக அங்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து ஒரு கண்ணை வைத்தவாறே அமெரிக்கா இருக்கும். மாலத்தீவில் அமெரிக்கா ஒரு தூதரகத்தையும் திறக்கலாம்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.