head


அதிமுக -பாஜக கூட்டணி!

|Sunday, 22nd November 2020|| Page Views: 8

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (நவம்பர் 21) சென்னையில் தமிழக, மத்திய அரசின் திட்டங்களை தொடங்கி வைத்தார். நேற்று பிற்பகல் சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை 4.45 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கத்தில் அரசு விழாக்களில் பங்கேற்க வருகை தந்தார்.

அவர் வருவதற்கு முன்னதாகவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் வந்திருந்தனர். மேடைக்கு வந்த அமித்ஷா அங்கே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சி தொடங்கும் முன்பு தமிழக அரசின் வழக்கமான நிகழ்வான தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கும்போது அமித்ஷா எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இணைந்து குத்துவிளக்கை ஏற்றிவைத்தனர். நிகழ்ச்சி அறிவிப்பாளர் முதல்வர் பெயரையும் அமித் ஷா பெயரை மட்டுமே சொல்ல அருகில் நின்ற ஓபிஎஸ் சை அழைத்து அவரையும் குத்துவிளக்கு ஏற்றச் சொன்னார் அமித்ஷா.

இதையடுத்து அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி வழங்குவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் கையில் மடித்து வைக்கப்பட்டிருந்த சால்வையை அமித் ஷாவிடம் கொடுத்தார். அமித்ஷாவை அதை விரித்துப் போட்டு விடுங்கள் என்று சைகை மூலம் சொல்ல அதன்படியே பொன்னாடையை விரித்துப் போர்த்தினார் முதல்வர்.

நினைவு பரிசாக பிள்ளையார் சிலை ஒன்றை முதல்வர் அமித்ஷாவிடம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அமித் ஷாவுக்கு பொன்னாடை போர்த்தி நடராஜர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.

தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்புரையாற்றிய பின், சென்னையை அடுத்துள்ள தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத் திட்டம், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் ஆகியவற்றை துவக்கி வைத்த அமித்ஷா... கோவை அவினாசி இடையே 1620 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை திட்டம், கரூர் கதவணைத் திட்டம், வர்த்தக மையம் விரிவாக்கத் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் திட்டங்கள் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதன் பின் பேசிய துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம், பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் புகழ்ந்துவிட்டு, வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என்று அறிவித்தார்.

விழாவில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்த நிலையில் ஓபிஎஸ்சின் இந்த அறிவிப்பு அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவிடம் இடைவெளியை பேண முயற்சிக்கிறார் என்ற தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு முன்பே பேசிய ஓபிஎஸ், அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று அரசு விழாவில் அறிவித்துள்ளார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.