head


ஆன்லைன் ரம்மிக்கு தடை: அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்!

|Sunday, 22nd November 2020|| Page Views: 13

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் பலர் தங்கள் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படுகிறது.

எனவே தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் முத்துக்குமார், முகமது ரஸ்வி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ஆன்லைன் ரம்மிக்கு எதிராகத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும், சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய எவ்வளவு காலம் ஆகும் என்றும் கடந்த நவம்பர் 18ஆம் தேதி நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இளைஞர்களின் உயிர்களைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யச் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதித்து தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன் தினம் (நவம்பர் 20) ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து ஈடுபடுவதன் மூலம் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் தங்களது பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்துவிடும் அவலத்தைத் தடுக்கும் விதமாக இந்த அரசு ஒரு அவசர சட்டத்தை இயற்றவுள்ளது. இந்த அவசர சட்டம் 1930ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்ட சட்டம், 1858ம் ஆண்டு சென்னை நகரக் காவல் சட்டம், 1859ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றிற்கு சட்டத் திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக இயற்றப்படவுள்ளது.

இவ்விளையாட்டில் பணம் வைத்து ஈடுபடுவோரையும் அதில் ஈடுபடுத்தப்படும் கணனிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களைத் தடை செய்யவும்; இத்தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் வழங்கவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் ( Online gaming house) வைத்திருப்பவர்களுக்கு ரூ.10,000 அபராதமும் 2 வருட சிறைத் தண்டனையும் வழங்கவும் இவ்விளையாட்டில் பணப் பரிமாற்றங்களை இணையவழி மூலம் மேற்கொள்வதை தடுக்கவும்; இவ்விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் தண்டிக்கவும் இந்த அவசரச் சட்டம் வழிவகுக்கும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆன்லைன் ரம்மி போன்ற இணைய வழி விளையாட்டுகளைத் தடை செய்யும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.