head


சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ற வகையில் தீர்மானங்களை எடுக்கும் தலைவர் மஹிந்த ராஜபக்ச!

|Wednesday, 25th November 2020|| Page Views: 3

இறுதி கட்ட யுத்தத்தின் போது, முல்லைத்தீவு -முள்ளிவாய்க்கால் - நந்திக்கடல் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பிணை கைதிகளாக வைக்கப்பட்டிருந்த சிவில் மக்களை மீட்பதற்கு, கப்பலை வழங்க முன்வந்த நாடொன்றின் யோசனையை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்தார் என்று முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இறுதி கட்ட யுத்தம் நடந்த தருணத்தில், அலரி மாளிகைக்கு தன்னை அவசரமாக வருமாறு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்ததாக கூறினார். இலங்கை இறுதி யுத்தத்தில், பொதுமக்களை காப்பாற்ற முன்வந்த நாட்டின் உதவியை மறுத்த மஹிந்த ராஜபக்ஷ அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமை அமைச்சராக பதவி வகித்த தான், ஜனாதிபதியின் அழைப்பை அடுத்து, அலரிமாளிகைக்கு சென்றதாகவும் அங்கு உலகின் பலம் வாய்ந்த வெளிநாடொன்றின் தூதுக்குழு தனக்கு முன்பாக வந்திருந்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.

அந்த வெளிநாட்டு தூதுக்குழுவிற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடந்ததாகவும், இறுதி கட்ட யுத்தம் நடந்து வரும் முள்ளிவாய்க்கால் - நந்திக்கடல் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் லட்சக்கணக்கான மக்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மஹிந்தவிடம் கூறியதாக மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

யுத்த பகுதிகளிலுள்ள மக்களை காக்க தங்களுடைய நாடு கப்பலொன்றை வழங்க முன்வந்ததாகவும், இலங்கையை அண்மித்த கடல் பரப்பில் அந்த கப்பல் உள்ளதாகவும் மக்களை பாதுகாப்பாக மீட்க அந்த கப்பலை வழங்க தயார் எனவும் அந்த பலம் வாய்ந்த நாட்டின் தூதர் கூறியதாக மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன், யுத்தம் இடம்பெறும் பகுதிகளிலுள்ள மக்களை காப்பாற்றி, திருகோணமலை துறைமுகத்தில் இறக்குவதற்கான உதவிகளை தாம் செய்ய தயார் என வெளிநாட்டு தூதுவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். அதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, இவ்வாறான சந்தர்ப்பத்தில் உதவி வழங்க முன்வந்தமையை இட்டு மகிழ்ச்சி அளிப்பதாகவும் நந்திக்கடல் பகுதியில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்றுவதற்காக மற்றொரு நாடு தமக்கு உதவி வழங்க முன்வந்துள்ளதாகவும் தூதுக்குழுவிடம், மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

தூதுக்குழு சென்றதன் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தன்னை அழைத்து கப்பலை ஏற்றுக்கொள்ளாத காரணத்தை தன்னிடம் தெளிவூட்டியதாகவும் சமரசிங்க கூறினார். ''கப்பலை கொண்டு வர இடமளித்தால், அந்த கப்பலில் பொதுமக்கள் மட்டுமன்றி, விடுதலைப் புலிகளின் தலைவர்களும் ஏறுவார்கள். அப்படி விடுதலைப் புலிகளின் தலைவர்கள் ஏறினால், பெருங்கடலில் என்ன நடக்கும் என்பது எமக்குத் தெரியாது. அதனால் தான் அப்படி கூறினேன். அந்த வேண்டுகோளை அப்போது தட்டிக் கழித்தேன்" என தன்னிடம் மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில், தீர்மானங்களை எடுக்கும் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்பதை தெளிவூட்டுவதற்காகவே இந்த விடயத்தை பதிவு செய்வதாக மஹிந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான தீர்மானத்தை எட்டியமையினாலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளையை அழிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இல்லையென்றால், பிரபாகரனும், குறித்த கப்பலில் ஏறி தப்பியிருப்பார் என முன்னாள் மனித உரிமை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.