head


பெரும் தொற்று என்ற மூன்றாம் உலகப் போரா...? வலிகளுடன் மனித குலம் -சிவா

|Thursday, 24th December 2020|General| Page Views: 1

பெரும் தொற்றுக் கொரனா மனித குலத்தை மிரட்ட ஆரம்பித்து வருடம் ஒன்றாகப் போகின்றது. பெரும் தொற்று ஆரம்பித் காலத்தில் இது ஒரு சீன வைரஸ் எம்மை ஒன்றும் செய்யாது என்று மெத்தனமாக இருந்ததன் விளைவுகளை உலகம் இன்று அனுபவித்துக் கொண்டு இருக்கின்றது.

இதில் மெத்தனம் காட்டாத சீனாவும் இன்னும் பல நாடுகளும் அதன் முதல் அலை என்ற சொல்லப்படும் கால கட்டத்தில் பெரும் தொற்றை சிறப்பாக கையாண்டு தமது மக்களை கப்பாற்றி, அந்த மக்களுக்கான வாழ்வாதாரத்தையும் ஓரளவிற்குச் சீர்செய்து, தமது நாட்டின் பொருளாதாரத்தையும் தூக்கி நிலை நிறுத்தி வைத்திருக்கின்றனர். இதற்கான நாடுகளின் பட்டியலை நாம் இணையத்தளங்களில் செய்தி ஊடகங்களில் தாராளமாக அறிந்து கொள்ள முடியும்.

இந்த பெரும் தொற்று ஆரம்பித்த நாளில் இருந்து சீன நாட்டின் மீதும் இதற்கான பரம்பலை கட்டிற்குள் வைத்திருப்பதற்கு அதிக மனிதாபிமானத்துடன் செயற்பட்ட நாடு கியூபாவையும் தீண்டத் தகாதவர்களாக உலக மக்களிடம் எடுத்துச் செல்வதில் காட்டிய தீவிரத்தை தமது நாட்டு மக்களை இந்த வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றுவதில் காட்டவில்லை பல நாடுகள் என்பது வெள்ளிடைமலை.

அதுவும் இந்த வைரஸ் தொற்றின் பெரும் வீச்சை கட்டிற்குள் கொண்டு வர சீனா கையாண்ட அணுகு முறை இதற்கு கியூப மருத்தவத் துறையினர் உதவிய முறை, வியட்நாம் போன்ற நாடுகளில் மில்லியன் மக்களில் வெறும் 0.4 விகித மரணத்தை மட்டும் எற்படுத்திய மிகவும் கட்டுப்பாடாக கையாண்ட விடயங்கள் இந்த உலகம் பாடங்களாக எடுத்து அதனை பொதுமைப்படுத்தி தமது நாடுகளில் கையாளவில்லை.

இதில் ஒரு வகை விருப்பற்ற தன்மையினால் ஏற்பட்ட இழப்புகள் மனித உயிர்களாக, பொருளாதார இழப்பாக, மனித வறுமை கொடுமைகளாக, உளவியல் தாக்கங்களாக என்று பல துன்பங்கள் வெளிபட்டுவிட்டன அப்போது எல்லாம் மக்களின் உயிர்கள், அவர்கள் வாழ்வாதரம் பற்றிய கரிசனைகளை விட எவ்வாறு வியாபார நிறுவனங்களை திறந்து அந்த ஐந்து வீதமான முதலாளிகளின் மூலதனத்திற்கு இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக நாட்டைத் 'திறந்து" மீண்டும் கட்டிற்குள் வர முற்பட்டு பரவ விட்ட செயற்பாடுகளே அதிகம் நடைபெற்றன.

இடையில் ஒன்று இரண்டு மாதங்கள் பெரும் தொற்று குறைவடைவதாக காணப்பட்;ட புள்ளி விபரங்கள் மீண்டும் எகிறி கட்டிற்குள் அடங்காதது போல் திமிறிய நிலையில் வருடத்தை நாம் அண்மித்துக் கொண்டிருக்கின்றோம். மக்களின் நலன்களின் பால் அர்பணிப்புடன் செயற்படவிளையும் மருத்துவ துறை விஞ்ஞானத்தை சகல மக்களுக்கான 'உரிமம் கோராத" செயற்பாடாக செயற்படும் செயற்பாட்டை நிதி உதவிகள் அற்ற செயற்பாட்டினால் முடக்கிக் போட்ட வரலாறுகள் ஒரு மூலையில் என்றும் போல் அதிகம் பேசப்படாமல் கிடக்கின்றன.

மறு புறத்தில் இதற்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து இதனூடு இந்த பெருந் தொற்றை கட்டுப்டுத்தல் என்பதற்குள் ஒரு நல்ல விடயம் உள்ளது போல் காணப்பட்டாலும் இதற்குள் ஒரு மிகப் பெரிய வியாபாரமும், பணம் ஈட்டலுமே முதன்மை பெற்றது என்பதை மருந்துகள் உற்பத்தியும், நோய்களும், இதன் பக்க விளைவுகளைப் பற்றிய காப்ரேட் நிறுவனங்களின் நீண்ட வரலாற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

இதன் அடித்தளத்தில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட சில கம்பனிகளின் தடுப்பு மருந்துகள் பெருந்தொகை பணத்தை கொடுத்து வாங்கி தங்களின் மக்களுக்கு கொடுப்பதற்கு பல கோடி பணத்தை செலவு செய்யும் வியாபாரத்திற்குள் மூழ்கியும் விட்டன. இதற்கான நிதியாதாரத்தை தம்மிடம் இல்லாத நாடுகள் செய்வது அறியாது கை கட்டி சுட்டிக் காட்டும் திசை வழியில் தம்மை உள்ளாக்கும் பொறியிற்குள் தள்ளப்படும் நிலையில் இருக்கின்றன.

இதற்கு இத் தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதற்கான செலவினங்கள், நேர விரையம் என்பன முன்னுக்கு காட்டப்பட்டு இதற்கான நியாயங்களை முன் நிறுத்த முற்பட்டாலும் இதில் உள்ள வியாபாரம் புரியப்பட வேண்டியதுதான். சகல மக்களுக்கும் சமமாக கிடைப்பதற்கு வாய்புள் இல்லாத சூழலில் இது பேசுபொருளாகி நிற்பதுவும் இதற்குள் கேள்விகளைத் தொடுப்தும் நியாயமானததானே. அதனால்தான் ஒரு தடுப்பு மருந்தை கண்டு பிடிக்க ஒரு வருடமாக முயன்று அதில் வெற்றியும் அடைந்துவிட்டோம் என்ற பல நிறுவனங்களுக்குள் இருக்கும் வியாபாரப் பெருமிதங்கள், அரசியலை பேசவிளைகின்றேன்.

இதன் ஆரம்ப நாட்களிலேயே அதுவும் அதிக வீரியத்துடன் பரவிய வைரசை எவ்வாறு சீனா கட்டிற்குள் கொண்டு வந்தது இதற்கு கியூப மருத்து துறையின் துறைசார் பங்களிப்பு என்பதுவும் வசதிகள் அதிகம் அற்ற நிலையில் உள்ள வியட்டநாம் எவ்வாறு இதனைக் கையாண்டு இறப்பு விகித்திதை மிகக்குறைந்த அளவில் மக்கள் தொகைப் பரம்பலின் அடிப்படையில் கட்டிற்குள் வைத்திருந்தது என்பது பற்றிய விடயத்தை ஒரு வருடத்திற்கு முன்பே கையில் எடுத்திருந்தால் உலகம் இவ்வளவு மோசமான இழப்புகளை சந்தித்து இருக்கத் தேவை இல்லை. இவை நடைபெற்று இருந்தால் இதன் தொடர்ச்சியாக இன்று கண்டு பிடிக்கப்பட்ட தடுப்ப மருந்திற்கு இத்தனை கோடி பணமும் செலவழிக்கத் தேவையில்லை. இந்த வகையலேயே இந்த பெரும் தொற்றிற்குள் இருக்கும் அரசியலை நான் பார்க்க விளைகின்றேன்.

இன்று மீண்டும் பிரிதானியாவில் இந்த வைரசின் ஒரு வகை வீரியம் பெற்ற வைரஸ் இன் புதிய தாக்கமும் இரண்டாவது அலையாக தாக்கத் தொடங்கியிருக்கும் கோவிட் 19 இன் செயற்பாடுகளும் திறந்து விட்ட வியாபாரங்களை மீண்டும் பகுதியாகவேனும் முடக்குவது என்ற அவல நிலைக்கு மனித குலம் தள்ளப்பட்டிருக்கின்றது. இந்த பெரும் தொற்று ஆரம்பமான காலத்திலேயே நான் எழுதிய பதிவுகளில் இந்த பெரும் தொற்றை கையாளுவதற்கு உலகம் முழுவதற்குமான ஒரு பொது அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதுதான் நாடுகளுக்குரிய தலமை கட்டளைகளை பணிப்பதற்கான செயற்பாடுகளில் இறங்கி குறைந்தபட்ச புரிந்துணர்வுடன் செயற்பட்டால் தடுக்கும் முறை, பொருளாதார மேம்பாடு, மக்களின் வாழ்வாதாரம், தடுப்பு மருந்து என்று எல்லாவற்றிலும் உலகம் நிச்சயம் தற்போதையை விட மேம்பட்ட செயற்பாட்டை அடைந்திருக்க முடியும்.

இதில் எமது மக்கள்... எமது நாடு.... என்று பார்க்காமல் மனித குலம் எமது வாழும் கிரகம் என்று செயற்பட வேண்டும். இதற்கான பொது கட்டளைத் தலமையகத்தை பன்முகப்படுத்தப்பட்ட ஐக்கிய தலமையாக உருவாக்கி செயற்பட வேண்டும் என்ற வேண்டுகோளை விட்டிருந்தேன். இதுதான் சரியான அணுகு முறை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இதனை பலரும் வலியுறுத்தியிருந்தனர். உலகின் மிக வல்லமை நாடுகளான அமெரிக்கா, சீனா ரஷ்யா, பிரித்தானியா, இந்தியா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, பிரேசில் போன்றவை இணைந்து இதற்கான முன்னெடுப்புகளை எடுத்திருக்க வேண்டும்.

மேலும் துறைசார் நிபுணத்துவம் உடைய கியூபா.. மிகத் திறமையான உள் கட்டுமானங்களை உடைய வியட்நாம்... மக்கள் நல அரசுகளை அதிகம் கொண்ட ஸ்கன்டிநேவியன் நாடுகளின் அனுபவங்களை இணைத்துச் செயற்பட ஆரம்பித்திருக்க வேண்டும். எல்லாம் வெறும் கனவுகளாகிப் போன நிலமைகளே இங்கு ஏற்பட்டிருக்கின்றன. குறைந்த பட்சம் உலக சுகாதார நிறுவனத்தின் சில அடிப்படையான விடயங்களை உலக நாடுகள் கடைப்பிடித்ததை இங்கு பாராட்டித்தான் ஆக வேண்டும்.

இதனைச் செயற்படுத்தியிருதால் இந்த இரண்டாம் அலை, புதிய வைரஸ் இன் தாக்கம், பொருளாதார நலிவு, மக்களின் வாழ்வாதாரம், தவிப்பு, வறுமை, தடுப்பு ஊசியை வாங்க முடியாத நிலை என்ற வியடங்கள் சிறப்பாக கையாண்ட இருக்கலாம் ஆனால் இதற்கு தயாராக இந்த 'உலகம்" இருக்கவில்லை.

மாறான தடுப்பூசியை தனியாக கண்டுபிடித்து இதற்கு பெரும் தொகையான பணத்தை திரட்டுதல் என்ற வியாபாரமும் தவிச்ச முயலை அடிப்பது போன்று மக்களின், நாடுகளின் வறுமையை தமக்கு சாதமாக்கி பணம் ஈட்டும் வியாபாரங்களே அதிகம் நடாத்தப்படுகின்றன தற்போது.

இதற்கான வலிகளை நாம் சுமந்தவர்களாக வருடம் ஒன்றைக் கடந்து பெருந் தொற்றின் புதிய வீரியம் பெற்ற வைரஸ் இன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மனித குலம் ஓடிக் கொண்டு இருக்கின்றது. குண்டுகள் வெடிக்கப்பட்ட இரண்டாம் உலக மகா யுத்தம் போலல்லாது குண்டுகள் வெடிக்காத மூன்றாம் உலகப் போராக பேரழிவாக கடந்து கொண்டிருக்கும் மூன்றாம் உலகப் போர்தான் இன்றைய பெருந்தொற்று பேரிடர் காலம் நகர்ந்து கொண்டிருக்கின்றதோ.....?
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.