ஜன.,16 முதல் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு!
|Sunday, 10th January 2021||
Page Views: 1
|
|
வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின்,ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, கொரோனாவுக்கு எதிரான, கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கும் பணியை, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த, சீரம் நிறுவனம், நம் நாட்டில் மேற்கொள்கிறது.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சின் என்ற தடுப்பூசியை, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளது.இந்த இரு தடுப்பூசிகளுக்கும், மத்திய அரசு சமீபத்தில் அவசரகாலத்தில் பயன்படுத்தி கொள்ள அனுமதியளித்தது. இந்த இரண்டு தடுப்பூசிகளையும், அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: நாட்டில் வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கும். முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கும், அதனை தொடர்ந்து, இணை நோயுள்ள 50 வயதுக்கு மேற்பட்ட 27 கோடி பேருக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி குறித்தும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து, உயர் மட்ட அளவில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|