சர்வதேச நிபுணர்களை அனுமதிக்கத் தயார்: சீனா அறிவிப்பு!
|Monday, 11th January 2021|Political|
Page Views: 1
|
|
கரோனா தோற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர் குழுவை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு தேசிய சுகாதாரத் துறை இணை ஆணையர் ஸெங் யிக்ஸின் கூறியதாவது:
கரோனா உருவானது தொடர்பான ஆய்வுகளை சர்வதேச நிபுணர்கள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து உலக சுகாதார அமைப்பினருடன் காணொலி மூலம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதையடுத்து, அவர்களை சீனாவுக்கு வரவேற்கத் தயாராக இருக்கிறோம். கரோனா முதல் முதலாக பரவத் தொடங்கிய வூஹான் நகருக்கு ஆய்வுக் குழுவினர் எப்போது வருவார்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார் அவர்
வூஹானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் பரவியுள்ளது.
அதுதொடர்பான உண்மைகளைக் கண்டறிய 10 நிபுணர்கள் அடங்கிய குழுவை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவுக்கு அனுப்பியது.
அடுத்தகட்டமாக, மிக விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கா அதிக எண்ணிக்கையிலான நிபுணர்களைக் கொண்ட குழுவை இந்த மாதம் சீனா அனுப்பவிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
எனினும், அந்தக் குழுவினரை தங்கள் நாட்டுக்குள் அனுமதிப்பதை சீனா இழுத்தடித்து வருவதாக அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் அதிருப்தி தெரிவித்தார்.
இந்த நிலையில், சர்வதேச நிபுணர் குழுவை அனுமதிக்கத் தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது
|
|