head


தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது: பிரதமர் மோடி!

|Tuesday, 12th January 2021|| Page Views: 1

கொரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது. தங்களுக்கான வாய்ப்பு வரும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் 16ம் தேதி முதல் துவங்க உள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக நேற்று (ஜன.,11) மாலை 4 மணிக்கு அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மாநிலங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்துள்ளன. பெருந்தொற்றுக்கு மத்தியில் மிகப்பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சிக்கு இந்தியா மிகச்சிறந்த உதாரணம். கொரோனா காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றியது, விரைவாக முடிவெடுத்தது திருப்தி அளிக்கிறது. இதனால், உலகளவில் கொரோனா பரவியது போல், இந்தியாவில் பரவவில்லை.

முக்கியமான கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். 2 தடுப்பூசிகள் தயாராகியுள்ளது பெருமைப்பட வேண்டிய விஷயம். மேலும் 4 தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. தடுப்பூசி குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வரும் 16ம் தேதி முதல், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் திட்டம் துவங்குகிறது. இந்தியாவில் தயாரான இரண்டு தடுப்பூசிகளை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். தூய்மை பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், பாதுகாப்பு படையினர், போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும்.முதல்கட்டமாக 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ள முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் 3 கோடி சுகாதார பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு, முதல்கட்டமாக தடுப்பூசி போடும் செலவை மாநில அரசு ஏற்க வேண்டியதில்லை. மத்திய அரசு ஏற்று கொள்ளும். தடுப்பூசி போடப்படுவதை முன்னிட்டு கோவின் செயலிலி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தடுப்பூசி முதல் போஸ் போட்டதும் கோவின் செயலி மூலம் சான்று அளிக்கப்படும்.

இந்தியாவின் திட்டத்தை உலக நாடுகள் பின்பற்றும். தடுப்பூசி குறித்த வதந்திகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது. தங்களுக்கான வாய்ப்பு வரும் போது, அரசியல்வாதிகள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

கேரளா, ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், குஜராத், ஹரியானா, உ.பி., ம.பி., டில்லி மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பண்ணைகள், விலங்கியல் பூங்காக்களை உன்னிப்பாக கவனித்து நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.