head


மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்: ராணுவப் புரட்சி அல்ல என்கிறார் பிரதமர்!

|Wednesday, 13th January 2021|Political| Page Views: 1

மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைக்கு ஏதுவாக அந்நாட்டின் மாமன்னர் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று (ஜனவரி 12) காலை வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நாட்டில் அவசரநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மலேசியாவில் இரண்டாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (லாக் டவுன்) அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கையானது ராணுவப் புரட்சி அல்ல என்றும், நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும் மலேசியப் பிரதமர் மொகிதீன் யாசின் தெரிவித்துள்ளார். கூட்டரசு மற்றும் மாநில அரசுகள் நீடிக்கும் என்று குறிப்பிட்ட அவர், பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாது என்ற உறுதிமொழியையும் அளித்துள்ளார். இன்று காலை தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றியபோது அவர் இதை தெரிவித்தார்.

நாட்டில் வைரஸ் தொற்றுப்பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளது தெரியவந்ததால் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என மாமன்னர் சுல்தான் அப்துல்லா ஹாஜி அகமட் ஷா உணர்ந்ததாக அரண்மனைக் காப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுப் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படும் பட்சத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பாகவே அவசரநிலை உத்தரவு மீட்டுக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மலாய் ஆட்சியாளர்களின் கருத்துகளையும் கேட்டறிந்த பிறகே மாமன்னர் முடிவெடுத்ததாகவும், அரசுத்தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவ, சுகாதார நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட சுயேச்சை சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் (ஜனவரி 11) பிரதமர் மொகிதீன் யாசீனுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வைரஸ் தொற்றுப்பரவலை முற்றிலும் முறியடிக்கும் நடவடிக்கையாக அவசரநிலை பிரகடனத்திற்கு மாமன்னர் அனுமதி வழங்கி உள்ளதாகவும் அரண்மனைக் காப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாமன்னர் கவலை அடைந்துள்ளதாகவும் தொற்றுப் பரவலை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் மக்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்பதை அவர் உணர்ந்துள்ளதாகவும் அரண்மனை அறிக்கை தெரிவிக்கிறது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.