head


மியான்மர் போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பலி!

|Monday, 01st March 2021|Crime| Page Views: 4

மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நடந்துவரும் தொடர்ச்சியான போராட்டங்களில் ஒரு பகுதியாக, சனியன்று குறைந்தது 18 பேர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கிறது.

யங்கூன், தாவெய், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரங்களில் நடந்த ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின்போது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல் துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு தொடர்ச்சியாக போராட்டம் நடந்து வருகிறது. கடந்த வாரங்களில் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ற இந்தப் போராட்டங்களை கட்டுபடுத்த போராடுபவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை, மியான்மர் பாதுகாப்பு படைகள் எடுத்து வருகின்றன.

ஆட்சியில் இருந்த ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை நடந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் ஞாயிறன்று வெளியாகியுள்ளன.

அந்த காணொளிகளில் காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவது, தற்காலிக தடுப்பு அரண்களை காவல் துறையினர் சாலைகளில் அமைத்துள்ளது, ரத்த காயம்பட்ட பலர் காவல் துறையினரால் அடித்து விரட்டப்படுவது ஆகியவை பதிவாகியுள்ளன. போராட்டங்கள் முடிவுக்கு வருவது தொடர்பான அறிகுறிகள் எதுவும் தென்படாததால் சனிக்கிழமை தொடங்கிய குடிமக்களுக்கு எதிரான நடவடிக்கைகள், ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தன.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.