head


முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொராப்ஜி கொரோனாவால் காலமானார்!

|Saturday, 01st May 2021|General| Page Views: 1

இந்தியாவின் மிகச்சிறந்த சட்ட வல்லுநர்களில் ஒருவரான முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி நேற்று காலை கொரோனா பாதிப்பால் இறந்தார். அவருக்கு வயது 91.

மூத்த வழக்கறிஞரும், பத்ம விபூஷன் பெற்றவருமான சோலி சொராப்ஜிக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. டில்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1930-ல் மும்பையில் பிறந்த சோலி ஜஹாங்கிர் சொராப்ஜி, 1953-ல் மும்பை உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

1971-ல் அவரை மூத்த வழக்கறிஞராக உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. சொராப்ஜி சுமார் 70 ஆண்டுகளாக வழக்கறிஞர் பணியில் இருந்தவர். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இரு முறை பணியாற்றியுள்ளார். முதலில் 1989-லும், பின்னர் 1998 முதல் 2004 வரையும் பதவி வகித்தார். மனித உரிமைகள் வழக்கறிஞரான சொராப்ஜியை 1997-ல் நைஜீரியாவுக்கான சிறப்பு அறிக்கையாளராக ஐ.நா., நியமித்தது. மனித உரிமைககள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. துணை ஆணையத்தில் சேர்ந்து, 1998 முதல் 2004 வரை அதன் தலைவராகவும் இருந்தார். சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கான ஐ.நா துணை ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 2000 முதல் 2006 வரை ஐ.நா. உலக நீதிமன்றத்தில் பணியாற்றியிருக்கிறார். தலைமை நீதிபதி ரமணா வெளியிட்ட இரங்கல் குறிப்பில் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்க 70 ஆண்டுகளாக அவர் ஆற்றிய பணி சர்வதேச அளவில் புகழ்பெற்றது. ஜனநாயகத்தின் தூண்களுக்கு வலிமை சேர்த்ததற்காக அவர் நினைவுகூரப்படுவார் என்றார்.

பிரதமர் மோடி வெளியிட்ட அஞ்சலி குறிப்பில், சொராப்ஜி ஒரு சிறந்த வழக்கறிஞர் மற்றும் அறிவுஜீவி. சட்டத்தின் மூலம், அவர் ஏழைகளுக்கும், நலிந்தவர்களுக்கும் உதவுவதில் முன்னணியில் இருந்தார்.

அவரது மறைவால் வருத்தமடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் இரங்கல்கள் என கூறினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.