head


மீண்டும் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை!

|Sunday, 02nd May 2021|Political| Page Views: 1

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேசப் பேச்சுவார்த்தையை ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் மீண்டும் சனிக்கிழமை ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஈரானுடனான 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் தொடா்பாக வியன்னாவில் நடைபெற்று வரும் மாநாடு மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.

ரஷியா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்காவை இணைப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது.

அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன. ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்து வந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தார். அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை ஈரான் படிப்படியாக மீறியது. இதனால் அந்த ஒப்பந்தம் முறிந்துபோகும் அபாயம் நிலவி வருகிறது.

இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தச் சூழலில், ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக வியன்னாவில் கடந்த மாதத் தொடக்கம் முதல் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.