head


ஆக்சிஜன் தட்டுப்பாடு, சடலங்களின் குவியல்: இந்தியாவை பிரதிபலிக்கும் நேபாளம்

- குருப்ரீத் சைனி பிபிசி செய்தியாளர்


|Wednesday, 12th May, 2021|General| Page Views: 1

இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ளது. சுமார் மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட இந்த சிறிய நாட்டில், கடந்த மாதம் வரை, ஒரு நாளில் சுமார் 100 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், இப்போது இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 10,000 வரை எட்டியுள்ளது. நேபாள சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,127 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 139 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.தொற்று நோய் தொடங்கியதில் இருந்து, இதுவரை மொத்தம் சுமார் 4000 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். கடந்த சில வாரங்களில் இறப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமாகியுள்ளது. இந்தியாவைப் போலவே நேபாளத்திலும் கொரோனா இரண்டாவது அலை இளைஞர்களையே குறிவைத்துள்ளது. நேபாளத்தில் தொற்று பாதித்தவர்களில் பெரும்பாலானோர், 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.

நேபாளத்தின் மூத்த பத்திரிகையாளர் சுரேந்திர ஃபுயால், பிபிசி இந்திக்கு அளித்த பேட்டியில், “நேபாளத்தின் பெரும்பகுதி முடங்கியுள்ள நிலையிலும் தொற்று பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரு வீட்டுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கு சிகிச்சையளிக்கவும், சுவாசப் பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்கவும் மருத்துவமனைகள் போராடி வருகின்றன.” என்று தெரிவித்தார்.”சடலங்களை எரிக்கும் இடமான பசுபதிநாத் ஆரியகாட்டில் நீண்ட வரிசையில் சடலங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு மணி நேரமும் ஒரு ஹெலிகாப்டர் காத்மாண்டுக்கு வெளியில் இருந்து ஒரு கோவிட் நோயாளியை அழைத்து வருவதையோ அல்லது அழைத்துச் செல்வதையோ இப்போது பார்க்கிறேன். இது மிகவும் கவலைக்குரிய விஷயம்” என்கிறார். கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகள் காத்மாண்டுவில் உள்ள பாகமதி ஆற்றின் கரையில் செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களில், இறப்புகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களில் வரத் தொடங்கியது. இப்போது இந்த எண்ணிக்கை நூறுகளை எட்டிவிட்டது.

நிலைகுலையும் சுகாதார கட்டமைப்பு

கொரோனாவின் இரண்டாவது அலையில் மூழ்கியிருக்கும் நேபாளத்தை விட இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பட்டதாகவே கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நேபாளத்தின் சுகாதார உள்கட்டமைப்பு குறித்து கவலைகள் எழத் தொடங்கியுள்ளன. கடந்த மே மாதம் வெளியான அரசின் அறிக்கையின் படி, மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில், 1,595 தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் 480 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன. மருத்துவர்களின் பற்றாக்குறையும் உள்ளது. மேலும், ஒரு லட்சம் பேருக்கு 0.7 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர் என்று உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் 0.9-ஐ விட இது குறைவானது. மே 10 அன்று வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, நேபாளத்தில் 6,715 பேர் மருத்துவமனைகளிலும் மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 910 நோயாளிகள் ஐ.சி.யுவிலும், 295 நோயாளிகள் வென்டிலேட்டர் உதவியிலும் உள்ளனர். காத்மாண்டு பள்ளத்தாக்கில் 1618 பேர் தனிமைப்படுத்தப்பட்டும், ஐ.சி.யுவில் 176 பேரும், 95 வென்டிலேட்டர் உதவியிலும் உள்ளனர்.ஆனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், படுக்கையில்லாததாலோ சிகிச்சையில்லாததாலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாதவர்களும் இந்த ஆக்சிஜன் குறைபாட்டால் அல்லலுறுகின்றனர். மே 10 ஆம் தேதி தரவுகளின்படி, நாடு முழுவதும் 86,426 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.

நாட்டின் 77 மாவட்டங்களில் 22 இடங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதாக நேபாளத்தின் சுகாதார அவசர சிகிச்சை மையம் மே 8 அன்று தெரிவித்தது.நிலைமை கட்டுப்படுத்த முடியாததாகி வருவதாக நேபாள சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், “நோய்த்தொற்று மிகவும் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை சுகாதார அமைப்பின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விட்டது. மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்குவது மிகவும் கடினமாகிவிட்டது.” என்று தெரிவித்துள்ளது. மேலும், நேபாளத்தில் தடுப்பூசி வழங்கப்படும் விகிதமும் மிகக் குறைவு. கடந்த மாத இறுதி வரை, மக்கள்தொகையில் 7.2% பேருக்கு மட்டுமே குறைந்தபட்சம் ஒரு டோஸாவது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் நோயாளிகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு நேபாள மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. ஆக்ஸிஜன் விநியோகமும் குறைந்து வருகிறது.ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததால் நோயாளியின் உயிர்கள் பிரிந்ததாகப் பல குடும்பத்தினர் கூறுகின்றனர். தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனைகளால் கூட அதிகரித்து வரும் தீவிர நோயாளிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்க முடியவில்லை. தங்களிடம் ஆக்ஸிஜன் மற்றும் சிலிண்டர்கள் போதுமான அளவில் இல்லை என்று கை விரிக்கிறார்கள். காத்மாண்டு, பக்தபூர் மற்றும் லலித்பூரில் தான் அன்றாடம் பாதிக்கும் மேலான எண்ணிக்கை பதிவாகின்றன. தலைநகர் காத்மாண்டுவில் அதிக எண்ணிக்கை பதிவாகி வருகின்றன. இதுவரை, அதிக எண்ணிக்கையிலான 863 இறப்புகளும் அங்கு தான் நிகழ்ந்துள்ளன.

நோயாளிகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் நகரத்தின் வீதிகளில் அலைந்து திரிந்து, ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களிடமிருந்தும், மருந்தகங்களிலிருந்தும் நோயாளிகளுக்கான ஆக்ஸிஜனைப் பெறவும் சிலிண்டர்களை நிரப்பவும் பாடுபட்டு வருகிறார்கள் என்று நேபால் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.பல மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் விநியோகம் அதிகரிக்கப் படாவிட்டால், கோவிட் -19 நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளன. சுகாதார அமைச்சகம் சனிக்கிழமையன்று 10 ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களுக்கு (பெரும்பாலும் காத்மாண்டுவில்) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், தற்போதைய நெருக்கடிக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட முறைகேடு தான் காரணம் என்று குற்றம் சாட்டியதுடன், அமைச்சகத்தின் கடிதம் இல்லாமல் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவை தனியார் மருத்துவமனைகள் எதிர்த்தன, இந்த முடிவு தனியார் மற்றும் சமூக மருத்துவமனைகளின் சிரமங்களை அதிகரிக்கும் என்றும், உயிர் காக்கும் வாயுவுக்கு அரசாங்கத்தின் பல கட்ட அனுமதிகளில் நேரத்தை வீணாக்க வேண்டியிருக்கும் என்றும் கூறின.காத்மாண்டுவின் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள், ஒரு நாளில் சுமார் எட்டாயிரம் சிலிண்டர் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. ஆனால் உற்பத்தியாளர்கள் தற்போதைய தேவை அவற்றின் திறனை மீறியதாக உள்ளதாகக் கூறுகிறார்கள். உற்பத்தியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் கடிதம் இல்லாமல் யாருக்கும் ஆக்ஸிஜன் கொடுப்பதையும் நிறுத்திவிட்டனர்.தனியார் மருத்துவமனைகளின் குழுவான நேபாளத்தின் தனியார் சுகாதார நிறுவனங்களின் சங்கம், “அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளன, ஆனால் அரசாங்கத்தின் முடிவின் காரணமாக, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சிகிச்சை அளிக்க முடியவில்லை. இப்போது வரை நாங்கள் ஆக்ஸிஜன் ஆலைக்கு வெளியே வரிசையில் நிற்கிறோம். இனி, அரசாங்கத்தின் கடிதத்திற்காக அமைச்சகத்தின் வாசலில் ஒரு வரிசை கட்ட வேண்டும்.” என்று தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.சனிக்கிழமை பிற்பகல், கிஸ்த் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தீர்ந்துவிட்டது, இங்கு 50 கோவிட் நோயாளிகள் இருந்தனர். நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற, அரசு மருத்துவமனையில் இருந்து ஆக்ஸிஜனைக் கொண்டு வர வேண்டியிருந்தது.ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பிரச்சினையை முறையாகக் கையாளும் வகையில் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது அரசாங்கத்தின் வாதம்.

முக கவசங்கள், கிருமிநாசினி, வீட்டில் இருத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இந்த நோயைத் தவிர்க்க முடியும் என்று அரசாங்கம் இப்போது கூறியுள்ளது. ஆனால் று குடிமக்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அரசு கை விரித்த பின்னர், உள்ளூர் சமூகங்களும் அண்டை அயலாரும் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளையும் ஆக்ஸிஜன் வங்கிகளையும் தயார் செய்கின்றன.பல சுயாதீன இளைஞர் குழுக்களும் தேவைப்படுபவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகிக்க முன்வருகின்றன. ‘100’ஸ் க்ரூப் (ஹன்ட்ரட்ஸ் க்ரூப்) குழுவுடன் தொடர்புடையவர்கள் காத்மாண்டு பள்ளத்தாக்கில் தொழில்துறை ஆக்ஸிஜன் பயன்படுத்துபவர்களிடமிருந்து ஆக்ஸிஜனைப் பெற்று, நோயாளிகளுக்கு அனுப்ப முயற்சிக்கின்றனர். சமூக சேவையாளர்கள் சமூக ஊடகங்கள் மூலம் உதவி வழங்குகிறார்கள் மற்றும் சில தொலைபேசி எண்களைப் பகிர்ந்தும் வருகிறார்கள்.ஆக்ஸிஜனைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளிடம் பயன்பாட்டை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 100’ஸ் க்ரூப்பைச் சேர்ந்த பப்லு குப்தா நேபாளி தனது பேஸ்புக் பக்கத்தில், “அரசியல் தலைவர்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கிறார்கள், இளைஞர்கள் வெளியே சென்று தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகிக்கிறார்கள். நாமும் பாதிக்கப்படலாம் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் இன்னொருவரின் உயிரும் உயிர் தான் என்று உணர்ந்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.காத்மாண்டுவில் உள்ள சில மருத்துவமனைகளுக்கு இரவும் பகலும் இலவச ஆக்ஸிஜனை வழங்க ‘ஹம்ரோ டீம் நேபால்’ குழுவும் செயல்பட்டு வருகிறது.நேபாளத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்தான அளவிற்கு உயரக்கூடும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் (ஐ.எஃப்.ஆர்.சி) கடந்த வாரம் எச்சரித்திருந்தது.நேபாள செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் டாக்டர் நேத்ர பிரசாத் திம்சினா ஒரு அறிக்கையில், கொரோனாவின் தற்போதைய நிலைமையை நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், இந்தியாவில் நடப்பது தான் நேபாளத்திலும் நடக்கும் என்று எச்சரித்தார். நேபாளத்தில் பல மருத்துவமனைகள், குறிப்பாக இந்திய எல்லைகளை ஒட்டியுள்ள தெற்கு நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. மேலும் ஏராளமான கோவிட் -19 நோயாளிகள் அங்கு வருகிறார்கள் என்று அந்த நிறுவனம் கூறியது. இதே நிலை தொடர்ந்தால், அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளும் ஏற்படும் என்ற அச்சம் இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்தது.

நிலைமை மோசமடைந்தது எப்படி? நேபாளத்தின் தற்போதைய நிலைமைக்குப் பொது மக்களும் அரசாங்கமும் பொறுப்பாளிகள் என்று கூறப்படுகிறது. இந்தியாவைப் போலவே பண்டிகைகளும், அரசியல் கூட்டங்களும், திருமணங்களும் முழுவீச்சில் நடந்தன. கொரோனாவின் தாக்கம் ஏப்ரல் மாதத்தில் மோசமடையத் தொடங்கியது. பின்னர் பிரதமர் கே.பி. சர்மா ஓலி கொரோனாவைத் தவிர்ப்பதற்கு நாட்டு வைத்திய முறைகளைக் கையாள அறிவுறுத்தினார். கொய்யா இலைகளைக் கொண்டு, கொப்பளித்தால், வைரஸைக் குணப்படுத்த முடியும் என்று வேறு கூறினார். முன்னதாக அவர் நேபாள மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வலுவானது, ஏனெனில் அவர்கள் நிறைய மசாலாப் பொருள்களை உட்கொள்கிறார்கள் என்று வேறு கூறியிருந்தார். மத நிகழ்வுகளுக்காக மக்கள் அதிக எண்ணிக்கையில் வீட்டை விட்டு வெளியே வரத் தொடங்கினர். கும்பமேளாவிற்காக இந்தியாவுக்குப் பலர் வந்தார்கள். அவர்களில் பலர் கொரொனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. காத்மாண்டுவில் உள்ள நோர்விக் சர்வதேச மருத்துவமனையின் அறிக்கையின்படி, கும்ப மேளாவிலிருந்து திரும்பி வந்தவர்களில் நேபாள முன்னாள் மன்னரான ஞானேந்திர ஷா மற்றும் ராணி கோமல் ஷா ஆகியோருக்கும் கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில், பாஹன் சரை திருவிழாவிற்காக நேபாள தலைநகரில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். பிஸ்கா: ஜாத்ரா கொண்டாட அருகில் உள்ள பக்தபூரில் மக்கள் கூடினர். இவற்றைப் பொது வெளியில் கொண்டாட வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தல் வெளியிட்டிருந்தது. ஆனால் மக்கள் இதை ஏற்கவில்லை. “எங்கள் திருவிழாக்கள் எங்கள் உயிரை விட எங்களுக்கு மிகவும் முக்கியம்” என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஏப்ரல் 24 ஆம் தேதி 2,400 நோய்த்தொற்றுகள் பதிவாகிய பின்னர், ஏப்ரல் 29 அன்று 4,800 க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் கண்டறியப்பட்டது. அதன் பிறகு தான் இரண்டு வாரப் பொது முடக்கத்தை அரசு அறிவித்தது. அடுத்த நாள், கோவிட் நெருக்கடியால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் மக்கள் தொகை அமைச்சகம் ஒப்புக்கொண்டது.இந்திய – நேபாள எல்லை திறந்திருந்த காரணத்தால், இந்த நெருக்கடிக்கு இந்தியாவைப் பொறுப்பாக்குகின்றனர் சிலர். நேபாள மக்கள் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டுக்குச் செல்ல பாஸ்போர்ட்டைக் காட்ட வேண்டியதில்லை. நேபாளத்தைச் சேர்ந்த பலர் இந்தியாவில் வேலை செய்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே பயணித்து வருகிறார்கள்.காத்மாண்டுவுக்கு அடுத்தபடியாக, உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள பாங்கே மாவட்டத்தின் நேபல்குஞ்ச் நகரம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மூடப்படுவதற்கு முன்னர் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான நேபாளத் தொழிலாளர்கள் திடீரென இம்மாவட்டத்திற்குள் நுழைந்ததைக் காண முடிந்தது.இது தவிர, கே.பி. ஓலி தலைமையிலான அரசாங்கமும் விமரிசனத்துக்கு உள்ளானது. ஏனெனில் கோவிட் -19 தீவிரமாகப் பரவி வந்த நிலையிலும், இமயமலையின் சிகரங்களை ஏற மக்களை அனுமதிக்க அவர் முடிவு செய்தார். கடந்த மாதம் எவரெஸ்ட் மலையேறும் முகாம் வரை தொற்றுநோய் பரவியதாகச் செய்தி வந்தது. ஆனால் அதிகாரிகள் அதை மறுத்தனர். நோய்த்தொற்றின் அலை மூடி மறைக்கப்படுவதாக மலையேறும் வீரர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். இந்தப் பருவ காலத்தில் நேபாளம் 740 பேருக்கு மலையேறும் அனுமதியை வழங்கியது. அதில் 408 பேர் எவரெஸ்டு சிகரம் ஏறுபவர்கள்.நேபாள அரசு என்ன செய்து கொண்டிருக்கிறதுவிமரிசனங்களைத் தொடர்ந்து, படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முயன்று வருவதாகவும் மனம் தளராமல் உழைத்து வருவதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்துள்ளதாக காத்மாண்டு போஸ்ட் தெரிவிக்கிறது.நீண்ட விடுப்பில் சென்றுள்ள சுகாதாரத் துறை ஊழியர்கள் திரும்ப அழைக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில், நேபாள ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மருத்துவர்களும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கில் பொது முடக்கத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க மாவட்ட கோவிட் நெருக்கடி மேலாண்மை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலதிக உத்தரவு வரும் வரை 10, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் கொரியாவிலிருந்து 40 ஆயிரம் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நேபாள சுகாதாரத் துறை அமைச்சர் ஹிருதயேஷ் திரிபாதி கடந்த வாரம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். நேபாளம் தனது ஜெட் விமானங்களில் ஒன்றை 800 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களைப் பெற, சீனாவிற்கு அனுப்பியுள்ளது. நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் கியாவலி, ட்விட்டரில் பகிர்ந்துள்ள தகவல்களின் படி, சீனா தேவையான மருத்துவப் பொருட்களை நன் கொடையாக பீஜிங்கில் நேபாள தூதரிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது. நேபாளம் சர்வதேச உதவியை நாடுகிறது. பிரதமர் ஓலியின் சிறப்பு பொருளாதார ஆலோசகர் மோதி லால் துக்கர், ஊடகங்களுடனான உரையாடலில், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வார்டுகளை அதிகரிக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அரசு கட்டிடங்கள் தனிமை வார்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார்..நேபாளம் ஏராளமான முகக்கவசங்கள், சானிடைசர்கள், வென்டிலேட்டர்களைத் தயாரித்து வருகிறது

என்றும் கோவிட் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பல மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் இருந்தாலும், உற்பத்தி தொடர்பான சவால்களும் உள்ளன என்றும் அவர் கூறினார். மூலப்பொருட்களுக்காக நேபாளம் இந்தியாவை பெரிதும் நம்பியுள்ளது. இந்தியாவே போராடி வருகிறது. நேபாளம், ரஷ்யாவிலிருந்து தடுப்பூசி தருவிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 20 லட்சம் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் உத்தரவிடப்பட்டுள்ளன. மேலும் கோவிட் தடுப்பூசிக்காக, இந்தியா மற்றும் சீனாவுடன் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள் மக்கள் தொகையில் குறைந்தது 60 முதல் 70 சதவீதம் வரை தடுப்பூசி போடுவதே அரசாங்கத்தின் குறிக்கோள்.நேபாளத்தின் பிரச்னை இத்துடன் முடிவடையவில்லை. நேபாளம் ஒரு அரசியல் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. அது தான் அந்நாடு எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடி. பிரதமர் கே.பி. சர்மா ஓலி திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததையடுத்து, மீண்டும் நேபாள அரசியலில் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது.ஊசலாடிக் கொண்டிருக்கும் அரசியல் எதிர்காலம், கொரோனாவை எதிர்கொள்வதை மேலும் சிக்கலாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.