head


பிகார்: கொரோனா வைரஸின் கோரக்காட்சிகள், பதற வைக்கும் கதைகள் சின்கி சின்ஹா பிபிசி செய்தியாளர்

|Friday, 21st May 2021|General| Page Views: 1

கொரோனா பாதுகாப்பு கவச ஆடை (PPE) அணிந்தவாறு ஒரு இளம் பெண் தனது தாயின் சடலத்தை சவக்குழிக்குள் இறக்க முற்படும் காட்சி, பிகார் மாநிலத்தில் கோரத்தாண்டவமாடும் கொரோனா தாக்கத்தின் வலி நிறைந்த யதார்த்தத்தை புரிய வைக்கிறது. அந்த படத்தை எடுத்த தைனிக் பாஸ்கர் நாளிதழின் புகைப்பட செய்தியாளர் சந்தன் செளத்ரி.

14 வயதே ஆன சோனி குமாரி மற்றும் அவரது உடன் பிறந்தவர்களை, அவர்களின் பெற்றோர் கொரோனாவால் இறந்ததால் ஊருக்குள் சடலங்களை கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது மதுலதா கிராமம். அங்கு அவர்களின் பெற்றோரின் சடலத்தை எரிக்கவும் உள்ளூர்வாசிகள் விடவில்லை.

இந்த நிலையில்தான் தமது தாயின் சடலத்தை தனி ஆளாக புதை குழி தோண்டி புதைக்க முற்பட்ட சோனி குமாரியின் செயல், மறுநாள் நாளிதழ் செய்தியில் இடம்பெற்று வெகுஜன கவனத்தை ஈர்த்தது.

சோனி குமாரியின் தந்தை விரேந்திர மேத்தா உள்ளூர் வைத்தியர். உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபோதே அவரது தந்தைக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது.

இந்த நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருபவரான உள்ளூர் செய்தியாளர் மெராஜ் கான், சோனியின் தந்தை கடந்த 3ஆம் தேதி உயிரிழந்ததாகவும், சோனிக்கு 12 வயதில் தங்கையும், 10 வயதில் சகோதரனும் இருப்பதாகக் கூறினார்.

இதன் பிறகு கொரோனா சிகிச்சைக்காக தங்கள் வசம் இருந்த நிலம், கால்நடைகளை இந்த குடும்பம் விற்றுள்ளது.

அனைத்து சேமிப்புகளும் கரைந்த நிலையில்தான் மேத்தாவின் மரணம் நடந்தது. அப்போது ஆனால், அவர்களின் கிராமம் மேத்தாவின் சடலத்தை புதைப்பதற்கு உதவ முன்வரவில்லை. இதனால் மேத்தாவின் மனைவி பிரியங்கா தேவி தமது மூன்று பிள்ளைகளுடன் சேர்ந்து குழி தோண்டி கணவரின் சடலத்தை புதைத்தார்.

ஆனால், துரதிருஷ்டவசமாக அடுத்த மூன்று நாட்களில் பிரியங்கா தேவி உயிரிழந்தார். தந்தையின் சடலத்தை தாயார் புதைத்த துயர அனுபவத்துக்கு சாட்சியாய் இருந்த குழந்தைகள், இப்போது தாயின் சடலத்தையும் புதைக்க தாங்களாகவே குழி தோண்டி புதைத்த வலியில் இருந்து இன்னும் விடுபடவில்லை.

இந்த ஒரு காரணத்துக்காகவே, சோகமும் வலிகளும் தந்த அந்த காட்சிகளை பொதுவெளியில் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பியதாகக் கூறுகிறார் செய்தியாளர் மெராஜ்.

வதந்திகளும் சமூக புறக்கணிப்பும்

நடந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், ஆதரவற்ற மூன்று பிள்ளைகளுக்கும் உதவும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நான்கு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்குவதாக அறிவித்திருக்கிறார். இப்போது அந்த மூன்று பிள்ளைகளுக்கும் உதவி செய்யும் வகையில் அவர்களின் பெற்றோர் இறப்புச் சான்றிதழை பெற்றுத் தரும் முயற்சியில் இறங்கியிருப்பதாகக் கூறுகிறார் மெராஜ்.

இதன் பிறகே பலரும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவ முன்வந்தனர்.

ஆனால், பிகாரில் நடக்கும் கொரோனா அவலங்கள் பலவற்றில் இது ஒரு துளி மட்டுமே என்கிறார் மெராஜ் கான்.

நேசித்த அன்புக்குரிய உறவுகளை பறிகொடுத்த பிறகு நிராயுதபாணியாகும் குடும்பங்களின் வரிசையில் இப்போது இந்த மூன்று பிள்ளைகளும் சேர்ந்துள்ளனர்.

இதுபோலத்தான் சமீபத்தில் பிகார், உத்தர பிரதேச மாநிலங்களில் ஓடும் கங்கை நதிக்கரைகளில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்த சம்பவங்களிலும் பல சோகக் கதைகள் புதைந்திருக்கின்றன.

கரை ஒதுங்கிய சடலங்கள்-வெளிவராத கதைகள்

நெஞ்சைப் பதற வைத்த நதிக்கரையோரங்களில் சடலங்கள் ஒதுங்கி அழுகிக் கிடந்த காட்சிகள் குறித்து பாட்னா உயர் நீதிமன்றம் கூட பெரும் கவலையை வெளிப்படுத்தியது.

அந்த சம்பவங்கள் தொடர்பாக பிகார் மாநில உள்துறை செயலாளர் விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பக்சர் வட்டார ஆணையாளர் கொடுத்த விளக்கத்தின்படி, பக்சர் பகுதியில் உள்ள சார்தாம் காட் பகுதியில் மே 5 முதல் 14ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 789 சடலங்கள் தகனம் செய்யப்பட்டன.

ஆனாலும், திடீர், திடீரென கரை ஒதுங்கிய சடலங்களின் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. அதிர்ச்சியூட்டக்கூடிய இந்த சம்பவங்களின் பின்னணி பற்றி பலரும் பல கதைகளை பகிர்ந்தனர். கரை ஒதுங்கிய சடலங்களில் பல கொரோனா காரணமாக இறந்தவர்களுடையது என்று கூறப்பட்டது.

அதற்குக் காரணம், இங்குள்ள கிராமப்புறங்களில் போதிய வழிமுறைகளின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியம் காட்டப்பட்டதே என்கிறார் சுயாதீன செய்தியாளரான உமேஷ் குமார் ராய். கடந்த ஆண்டு கொரோனா தொடங்கிய காலத்தில் பல மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்து பிறகு சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க வசதிகள் செய்யப்பட்டன. ஆனால், பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் பலரும் மீண்டும் வேலைக்காக வெளியூர்களுக்குச் சென்றனர். அதனால் கொரோனா தனிமை மையங்கள் மூடப்பட்டன.

இந்த நிலைியல்தான் கொரோனா இரண்டாம் அலை தீவிரத்தால் பலரும் ஊருக்குத் திரும்பத் தொடங்கியபோது முன்பு போல கொரோனா தனிமைப்படுத்தும் வசதிகள் இல்லாததால் பல தொழிலாளர்களும் ஊருடன் கலந்து வாழ்ந்தனர். இதுதான் கிராமங்கள்தோறும் கொரோனா பரவ முக்கிய காரணமாயின என்கிறார் உமேஷ்.

உதவி கிடைக்காத குடியேறி தொழிலாளர்கள்

இங்கு லூதியாணாவில் இருந்து பாட்னாவுக்கு 40 வயதாகும் ராஜேஷ் பண்டிட் என்ற தொழிலாளி கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி வந்தார். ரயிலில் வரும் வழியிலேயே அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பாட்னா ரயில் நிலையத்தில் தரையிறங்கியதும் ஒரு நாள் இரவு முழுவதையும் அவர் அங்கேயே கழித்தார்.

பிறகு காலையில் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து சமஸ்திபூரில் உள்ள கிராமத்துக்கு பயணம் செய்தார். சொந்த கிராமத்துக்கு வந்ததும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. பின்னர் உள்ளூரிலேயே ஒரு கிராமத்து மருத்துவரிடம் காண்பித்தார். அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர், சில ஊசிகளை போட்டார். ஆனாலும், உடல்நிலை தேறவில்லை. கடைசியில் சமஸ்திபூரில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்தில் ராஜேஷ் சேர்ந்தார். அங்கும் நிலைமை முன்னேற்றம் அடையாததால் தார்பங்கா மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அவர் சேர்க்கப்பட்டார். கடைசியில் ராஜேஷ் உயிரிழந்தார்.

முறைப்படுத்தப்படாத தற்காப்பு நடவடிக்கைகள்

இம்முறை வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பிய தொழிலாளர்களுக்கு உரிய கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்தப்படும் வசதிகள், மருத்துவ சிகிச்சை செய்து தராததே பலரும் இங்கு உயிரிழக்க காரணம் என்று மக்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஆண்டு இதே நிலைமை இருந்தபோது மே முதல் ஜூன் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் மாநிலத்துக்குள் நுழைந்த வெளிமாநிலத்தவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களை கவனிப்பதற்காகவே சிறப்பு ஆஷா பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அத்தகைய ஒரு பணியாளர்தான் மம்தா. தார்பங்காவின் முராய்தா பகுதியில் வசிப்பவர். நோய் அறிகுறியுடன் யாராவது இருந்தால், உடனே அவர்களை ஆரம்ப சுகாதார மருத்துவ நிலையத்துக்கு செல்ல அறிவுறுத்துவோம். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும் என்றார்.

ஆனால், இம்முறை அத்தகைய வேலை மம்தாவுக்கு வரவில்லை. 53 வயதாகும் அவர் பல நாட்களை வீட்டிலேயே கழிக்கிறார். அதற்கு காரணம், அரசு அறிவித்திருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடு.

இப்போதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளியே செல்கிறேன். பார்ப்பவர்களிடம் எல்லாம் முக கவசம் போடுங்கள், சளி, தும்மல், இருமல் இருந்தால் மருந்து எடுத்துக் கொள்ளுமாறு கூறுவேன். ஆனால், பலரும் மருத்துவமனைகளுக்கு செல்ல தயாராக இல்லை. அங்கு சென்றால் செத்து விடுவோம் என அவர்கள் பயப்படுகிறார்கள், என்றார் மம்தா.

அரசு கணக்கும் முரண்படும் சடலங்களின் எண்ணிக்கையும்

முஸாஃபர்பூரை சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளர், முக்திதாம் தகன மேடைக்கு வரும் சடலங்களை எண்ணுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அங்கு தினமும் வரும் சடலங்களையும் அரசு அறிவிக்கும் கொரோனா உயிரிழப்பு சடலங்களையும் அவர் ஒப்பிட்டு வருகிறார்.

அவரிடம் நாம் பேசியபோது, கடந்த திங்கட்கிழமை இங்கு எட்டு பேர் உயிரிழந்ததாக அரசு கூறியது. ஆனால், அதே நாளில் உள்ளூர் மயான பராமரிப்பு ஊழியர் இங்கு 15 சடலங்கள் வந்ததாக கூறினார், என்றார்.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி இங்குள்ள மயானத்தின் பராமரிப்பாளரான அசோக் குமார், மாதத்தின் மத்திய பகுதியில் மட்டும் சடலங்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது என்று தெரிவித்தார். முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு சடலங்களே வரும். இப்போதெல்லாம் அந்த எண்ணிக்கை 25ஐ தொடுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள கள நிலைமையை கவனித்து வரும் பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் நம்மிடையே பேசிய உள்ளூர் பத்திரிகையாளர், ஒவ்வொரு நாளும் இங்கு தெரிவிக்கப்படும் சடலங்களின் எண்ணிக்கைக்கும் நடைமுறை எண்ணிக்கைக்கும் 15 சடலங்களின் எண்ணிக்கையாவது முரண்படும், என்றார்.

சடலங்களின் இறப்புக்கு காரணமாக, மருத்துவமனையில் இருந்து வரும் குறிப்பில், நுரையீரல் அல்லது இதய நோயால் இறந்தார் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதேவேளை கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களின் இறுதி நிகழ்வுக்கு ஏழாயிரம் ரூபாய் வரை நகராட்சி நிர்வாகம் தருகிறது. சிலரிடம் உயிரிழப்புக்கு காரணம் கேட்டால் மூச்சுத்திணறல், காய்ச்சல், சளி என்று கூறும்படி அறிவுறுத்துவார்கள், என்று அவர் கூறினார்.

இப்படித்தான் பிகாரின் பல கிராமங்களில் கொரோனா மரணங்களும் அதைத்தொடர்ந்து நிகழும் தகனங்களும் பதிவாகின்றன. பல கிராமங்களில் கிராமப்புற சுகாதாரம் என்பது அறவே இல்லாதது போல உள்ளது. கொரோனா மரணங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் உள்ளூர் பத்திரிகையாளர்கள்.

சில இடங்களில் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதையே அறிய முடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுப்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் தனியாக இடுகாடுகள் இருப்பதால் வெளிநபர்களை அவை அனுமதிப்பதில்லை என்று வேறு சில பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிகிச்சைக்கு பணத்தை சுரண்டும் தனியார் மருத்துவமனைகள்

இது ஒருபுறமிருக்க, பல இடங்களில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பணத்தை சுரண்ட சில மருத்துவமனை நிர்வாகங்கள் முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாஹேப்கஞ்ச் என்ற முன்னாள் சர்பாஞ்ச் ஆன சரஸ்வதி தேவி, இரண்டு அரசு மருத்துவமனைகளில் சேர இடம் கிடைக்காததால் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். மூன்று நாட்களுக்கு அங்கு அவர் வைக்கப்பட்டிருந்தார். ஆனால், சேரும்போதே, இரண்டு லட்சம் ரூபாயை செலுத்துமாறு அவரிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மேற்கொண்டு மருத்துவ சிகிச்சைக்கு பணம் செலுத்த வசதியில்லாததால் மூன்று நாட்களுக்குப் பிறகு அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். வந்தவுடனேயே அவர் இறந்து விட்டார்.

கடந்த மே 11ஆம் தேதி சரஸ்வதி தேவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் அந்த மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது.

இங்கு களத்தில் செய்தி சேகரிக்கும் நிருபர்களைப் பொருத்தவரை, கிராமத்தில் வசிப்பவர்களால் தனியார் மருத்துவமனைகளில் அதிக பணம் கொடுத்து மருத்துவ சிகிச்சை பெற வசதியற்றவர்களாக உள்ளனர். மறுபுறம் அரசு மருத்துவமனைகளிலும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அவ்வளவு எளிதாக இடம் கிடைப்பதில்லை. மேலும், மருத்துவனைக்கு சென்றால் தாங்கள் இறந்து விடுவோம் என்ற அச்சம் இங்குள்ளவர்களிடம் குடிகொண்டுள்ளது.

முசாஃபர்பூரில் உள்ள சான்பூர் கிராமத்தில் இருந்து 30 கி.மீ தாண்டிச்சென்றால் அங்கு ஒரு முதலுதவி சிகிச்சை மையம் உள்ளது. அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 10-12 கிராமங்களில் தடுப்பூசி முகாம் என்பதே இதுவரை நடத்தப்பட்டதில்லை. அதனால், அங்குள்ள கிராமவாசிகளால் கொரோனா தடுப்பூசிக்கான பதிவை செய்ய முடியவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு ஒருவர் உயிரிழந்தார். ஆனால், அதற்கு ஒரு சில வாரங்களாகவே இங்குள்ள பலருக்கும் கொரோனா அறிகுறி இருந்துள்ளது. ஒரு வழியாக சாகும் தருவாயில் இருந்த நபருக்கு ஆக்சிஜன் கிடைக்க கிராமப்பெரியவர் உதவினார். ஆனாலும் அந்த நபரால் உயிர் பிழைக்க முடியவில்லை.

சாகும் தருவாயில் இருந்த நபரின் குடும்பத்தாரிடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ரூ. 50 ஆயிரம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவ்வளவு பெரிய தொகை அந்த குடும்பத்தாரிடம் இல்லை.

மறைக்கப்படும் தரவுகள்

கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடம் கொரோனா மருத்துவமனை நிர்வாகம் பரிசோதனை செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இங்கு அரசு வெளியிடும் கொரோனா பாதிப்பு தரவுகளுக்கும் நடைமுறையில் உள்ள தரவுகளுக்கும் மிகப்பெரிய முரண்பாடு இருப்பதாகக் கூறுகிறார் ஹெச்டிவி நியூஸ் நிறுவர் அன்சருல் ஹக். சவானில் உள்ள மயானத்துக்கு சென்றபோது அங்கு கடந்த மூன்று நாட்களில் மட்டும் 15 சடலங்கள் வந்ததாக தன்னிடம் அங்கிருந்த ஊழியர்கள் கூறியதாக தெரிவித்தார்.

அந்த செய்தி ஊடகத்தின் நிருபர் காசித் அன்வர் சமீபத்தில்தான் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆக இருந்தது. காசித்தின் ஆக்சிஜன் அளவு 35 ஆக இருந்தது. அவரை மோதிஹாரிக்கு கொண்டு சென்றோம். ஆனால், ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்கவில்லை. 37 வயதே ஆன அவரது மரணம் கொரோனா உயிரிழந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அவர் இறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு காசித்தின் தந்தை மொஹம்மத் தஸ்லிமும் இறந்து போனார் என்கிறார் ஹக்.

இங்கு குறைந்தபட்சம் பாரசிட்டமால் மாத்திரைகள் கூட கிடைப்பதில்லை. இங்குள்ள கிராமங்களின் நிலை பற்றி வெகுஜன ஊடகங்களில் செய்திகள் வருவதில்லை. மோத்திஹாரி பகுதியில் மூன்று மருத்துவமனைகள் உள்ளன. அதனால் நோய் பாதிப்புடன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் பலரும் இறக்கிறார்கள் என்றார் ஹக்.

பிகாரைச் சேர்ந்த மற்றொரு பத்திரிகையாளர் விஷ்ணு நாராயண், தனது கிராமத்தில் ஒரு மருந்தகம் கூட கிடையாது என்கிறார். 700 பேர் வாழும் தனது கிராமத்தில் எத்தனை பேர் கொரோனாவால் இறந்தார்கள் என்ற தரவுகள் பராமரிக்கப்படுவதில்லை என்கிறார்.

பிகார் மாநிலத்தில் சுமார் 37 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. இங்கு தினமும் கிராமத்தில் கொரோனா உயிரிழப்பு தீவிரமாகிக்கொண்டே போகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் நான்கு லட்சம் தருகிறது அரசு. ஆனால், இந்த அறிவிப்புக்கு பின்னணியில் பல நடைமுறைகள் வெளிப்படையாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு யாரும் விடைதரவில்லை.

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனைக்கு செல்கிறார் என்றால் அவருக்கு நடத்தப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை, மருத்துவமனையில் தங்கியிருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகள், அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், எடுத்துக் கொண்ட மருந்துகள், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் யார், அவரது உடலில் என்னென்ன மாற்றங்கள் கண்டறியப்பட்டன, அவரது மரணம், அதற்கான காரணம் என பல விவரங்கள் பதிவாகியிருக்க வேண்டும். ஆனால், இவை எதுவும் முறையாக நடப்பதில்லை என்பதே களத்தில் காணும் யதார்த்தமாக உள்ளது என பலரும் கூறுகிறார்கள்.

சரியான வழிமுறைகள் இல்லாததால், தகன மையத்துக்கும் மயானத்துக்கும் வரும் சடலங்கள், கொரோனா சடலமா இல்லை சாதாரணமாக இறந்த சடலமா என்பது முறையாக வகைப்படுத்தப்படுவதில்லை. இதை ஒழுங்காகச் செய்தால்தான் கொரோனா உயிரிழப்புகளை சரியாக கணக்கிட முடியும் என்று உறவுகளைப் பறிகொடுத்த உறவினர்கள் கூறுகிறார்கள்.

சமூகத்தின் அலட்சியம்

கொரோனா மரணங்கள் மற்றும் சிகிச்சை குளறுபடிகள் ஒருபுறமிருக்க, கொரோனாவால் மரணம் அடையும் சடலங்களை ஒதுக்கும் ஒரு சில சமூகத்தின் போக்கு கவலைக்குரியதாக இருக்கிறது என்கிறார் பிகாரின் கயா மாவட்டத்தில் உள்ள அரசு சாரா அமைப்பிற்காக பணியாற்றும் விஜய் கேவத். இவரது கூற்றுப்படி இவர் குறிப்பிடும் கிராமங்களில் சமீப காலங்களில் 30-35 வயதுக்குட்பட்ட மரணங்கள் அதிகமாக நடந்துள்ளன. அதற்கு காரணம், பலருக்கும் முறையான சிகிச்சை கிடைப்பதில்லை என்கிறார் கேவத்.

கடந்த 2ஆம் தேதி சாஹரா பாஹரா என்ற பகுதியைச் சேர்ந்த தொழிலாளி நான்கு நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு பிறகு மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கிறார். அவரது கிராமம் கயாவில் இருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ளது.

இதேவேளை, பிரவேஷ் குமார் மன்ஜி என்பவர் சமீபத்தில் இறந்து போனார். ஆனால், அவரது மகன் பிரின்ஸ் குமார், தனது தந்தை திடீரென இறந்து விட்டதாக கூறினார்.

ஆனால், அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் அதை வெளிப்படுத்தினால், தன்னைச் சுற்றிய சமூகத்தால் தமது குடும்பம் புறக்கணிக்கப்படும் என்ற அச்சத்தில் தனது தந்தைக்கு கொரோனா இருந்ததை பிரின்ஸ் வெளிப்படுத்த தயங்குவதாக கேவத் கூறுகிறார்.

பிரின்ஸின் கிராமத்தில் ஆயுர்வேத மருத்துவர்களே உள்ளனர். அந்த கிராமத்தினரை பொருத்தவரை, ஒருவர் கொரோனாவால் இறந்தாலும் அவர் சாதாரண மரணத்தை தழுவியவராகவே கருதப்படுகிறார். இங்குள்ள பலரிடம் மருத்துவமனைக்கு சென்றால் உயிரிழப்போம் என்ற அச்சம் குடிகொண்டிருப்பதாகக் கூறுகிறார் கேவத்.

இத்தகைய மனோபாவம் கொண்ட சமூகத்தின் அலட்சியத்தாலும் உண்மையான கொரோனா உயிரிழப்பை பதிவு செய்வது கடினம் என்கிறார் கேவத்.

இங்குள்ள பல கிராமங்களில் ஏற்படும் ஒவ்வொரு மரணத்துக்கு பின்னாலும் ஒரு கதை உள்ளது. இங்கு பதிவாகும் மரணங்களின் பின்னணிக்கு சாட்சியாக வாய் வழியாக மக்கள் தெரிவிக்கும் தகவல்களே உள்ளன. ஆனாலும், விசாரணை என வரும்போது கொரோனா மரணத்தை ஊர்ஜிதப்படுத்த பலரும் முன்வருவதில்லை. இப்போதும் இங்குள்ள பல கிராமவாசிகளிடம் கேட்டால், தங்களின் உறவுகள், காய்ச்சல் அல்லது மூச்சுத்திணறலால் இறந்தார்கள் என்றே கூறுவார்கள் என்கின்றனர், இங்குள்ள களத்தை தினமும் கவனித்து வருபவர்கள்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.