head


தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியமானது: உச்சநீதிமன்றம்!

|Thursday, 03rd June 2021|| Page Views: 1

தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியமானது எனவும், அரசின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தடுப்பூசி தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஓய் சந்திரசூட், எல் என் ராவ் மற்றும் எஸ்ஆர் பட் ஆகியோர் அமர்வு விசாரணையின் போது கூறியதாவது: முதல் இரண்டு கட்டங்களில் இலவசமாக தடுப்பூசி வழங்கிவிட்டு, 3வது கட்டமாக 18 - 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் போது, மாநிலங்கள் ஃ யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் கொள்கை, முறையற்றது மற்றும் தன்னிச்சையானது. தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியமானது. அதுவே அரசின் முதன்மையான முக்கிய பணியாக இருக்க வேண்டும்.

கடந்த 2021-22 பட்ஜெட்டில் தடுப்பூசி கொள்முதலுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும், இந்த நிதியில் இருந்து 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடக்கூடாது என்பது குறித்தும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும், நாட்டில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் எத்தனை பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளனர் என்ற விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். தடுப்பூசி கொள்முதலுக்கு எப்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, எவ்வளவு ஊசி கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டது, தற்போது வரை கிடைத்துள்ள தடுப்பூசிகள் குறித்த தகவல்களையும் அளிக்க வேண்டும்.

முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களில் விடுபட்டவர்களுக்கு எப்படி, எப்போது தடுப்பூசி வழங்கப்படும் என கேள்வி எழுப்பியதுடன், 18 -44 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படுமா என்பதையும் விளக்க வேண்டும் என தெரிவித்தனர். கொரோனாவுக்கு பிந்தைய பூங்சை தொற்றுக்கு தேவையான மருந்துகளையும் முறையாக விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.