head


டிவிட்டருக்கு இந்திய அரசின் இறுதி எச்சரிக்கை!

|Sunday, 06th June 2021|| Page Views: 1

இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை உடனடியாக ஏற்று நடக்க டிவிட்டர் சமூக வலைத்தளத்துக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், தவறினால் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜூன் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய அரசு டிவிட்டருக்கு வழங்கிய நோட்டீசில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை உடனடியாக ஏற்று நடக்கத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் பொறுப்பேற்பதில் இருந்து டிவிட்டருக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கு நீக்கப்படும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் பதிலடி: "போலீஸ் சோதனை கவலை தருகிறது, கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து" இந்த விதிகளைப் பின்பற்ற டிவிட்டர் மறுப்பது இந்திய மக்களுக்கு இந்தத் தளத்தில் பாதுகாப்பான அனுபவத்தை வழங்க போதிய அக்கறையோ, முயற்சியோ இல்லை என்பதைக் காட்டுவதாக இருக்கும் என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பிய அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்தியாவில் 10 ஆண்டு காலத்துக்கு மேல் இயங்கிக் கொண்டிருந்தாலும், இந்திய மக்கள் இந்த தளத்தில் உள்ள பிரச்சனைகளை உரிய நேரத்தில், வெளிப்படையாக, நியாயமான வழிமுறைகளின் மூலம், இந்தியாவில் உள்ள தெளிவாக அடையாளம் காணக்கூடிய வளங்களின் மூலம் தீர்த்துக்கொள்ள ஒரு பொறியமைப்பை உருவாக்க டிவிட்டர் நிறுவனம் பிடிவாதமாக மறுக்கிறது என்பது நம்ப முடியாததாக இருக்கிறது" என ஐ.டி. அமைச்சகம் கூறியுள்ளது.

மே 26ம் தேதி முதல்கொண்டே பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாலும், நல்லெண்ண நடவடிக்கையாக விதிகளைப் பின்பற்றுவதற்கு ஒரு கடைசி வாய்ப்பை அளிப்பதாக அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எந்த தேதிக்குள் அந்த விதிகளை ஏற்கவேண்டும் என்பதற்கு எந்த கெடுவும் விதிக்கப்படவில்லை.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.