head


கொவிட் தொற்று பரவல் குறைகிறது தமிழகம் உட்பட இந்தியா முழுவதும்!

|Monday, 07th June 2021|| Page Views: 1

இந்தியா முழுவதும் தினமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதுடன் குணமடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்றுக் காலை வரையான 24 மணிநேரத்தில் 2,31,456 பேர் கொவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடி 61 இலட்சத்து 79 ஆயிரத்தை தாண்டியது. ஒரேநாளில் 1,32,788 இலட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடி 83 இலட்சத்து 07 ஆயிரத்தை கடந்தது. தற்போது 17.93ஈலட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,35,102 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் தற்போது கொவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் வீதம் 92.48 ஆகவும், உயிரிழந்தவர்கள் வீதம் 1.18 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 6.34 வீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதேவேளை தமிழகத்தில் வேகமாக பரவிய கொவிட் தொற்று, அதிவேகமாக குறைந்து வருகிறது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால், தொற்றில் இருந்து மீளலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டு உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் கொவிட் நோயாளிகள் இல்லாத சூழ்நிலை விரைவில் உருவாகும் என்றார் அவர்.

பாரபட்சமின்றி, அனைத்து மாவட்டங்களுக்கும் சம அளவில் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஜூன் மாதத்திற்காக 42 இலட்சம் தடுப்பூசிகளில் 5ஈலட்சம் டோஸ் தடுப்பூசிகள் நேற்றுமுன்தினம் வந்துள்ளன. தற்போது 6.5 இலட்சம் டோஸ் கையிருப்பில் உள்ளது. இன்னும் 4 நாட்களுக்கு தேவையான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேசமயம் மலைக் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது சுகாதாரத் துறையினருக்கு பெரும் சவாலாக இருப்பதாக டொக்டர் சம்பத் என்பவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி பச்சைமலை மலைப் பகுதியில் உள்ள சேம்பர் கிராமத்திற்கு கடந்த 17-ந் திகதி டொக்டர் சம்பத் தலைமையிலான மருத்துவ குழுவினர் காய்ச்சல் சிறப்பு பரிசோதனை முகாம் நடத்துவதற்காக அங்கு சென்றனர். அங்கு ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருந்தனர். பெரும்பாலான வீடுகளில் மக்கள் இல்லை. காய்ச்சல் இருந்தால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுவார்கள் என பயந்து குழந்தைகளுடன் வயல்களுக்கு தப்பிச் சென்று விட்டதை அறிந்த மருத்துவக் குழு அதிர்ச்சிக்குள்ளானது.

இது போன்று அந்த மலைக்கிராமத்தில் தடுப்பூசி போடுவதற்கும் பழங்குடி மக்களிடம் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேதனை தெரிவித்தனர்.

பச்சைமலையில் 16 கிராமங்களில் 4000 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 800 பேர் 45 வயதை கடந்தவர்கள். இவர்களில் கடந்த சில வாரங்களில் 170 பேரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்திய போது 85 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதுவரை 225 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிந்தது. இதுபற்றி பச்சைமலை செங்காட்டுபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டொக்டர் கூறும் போது தடுப்பூசியின் பயன்கள் குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பரிசோதனைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் பழங்குடி மக்கள் தயங்குகிறார்கள் என்றார்.

கடந்த 2 வாரத்தில் மலைக் கிராமங்களில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதில் 45 வயதை கடந்தவர்கள் 200 பேர், 18 முதல் 44 வயதுக்குள்ளானவர்கள் 25 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

மக்கள் முகாம்களுக்கு வராததால் மருத்துவக் குழுவினர் வீட்டு வாசலை தட்டினர். ஆனால் அதற்கும் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. நாம் பேசுவதை செவிமடுத்து கேட்காமல் வயல்களுக்கே ஓடினர். தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும். இறப்பு ஏற்படும் என கருதி தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி மருந்து திருப்பி சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மலைக் கிராமங்களில் கூடுதல் முகாம்கள் நடத்தினால் அதிகம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என மருத்துவர் தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.