head


2024 பொதுத் தேர்தல்: இந்தியாவின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?

- ராஜன் குறை|Tuesday, 22nd March 2022|Political| Page Views: 1

பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பிரதமராகக் கொண்டு எட்டு ஆண்டுகள் ஒன்றிய அரசில் ஆட்சி செலுத்தியுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்த ஆட்சி தொடரும். இந்த எட்டு ஆண்டுக் காலத்தில் பாரதீய ஜனதா கட்சி எவ்வாறு இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்பது தெளிவாக புலனாகியுள்ளது. இப்போது நடந்த முடிந்த உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2024இல் பாஜக ஆட்சி தொடருமா, தொடர்ந்தால் என்னென்ன பிரச்சினைகள் கூர்மைப்படும் என்பதை நாட்டு நலனில் அக்கறை கொண்டோர் அச்சத்துடன் சிந்திக்க வேண்டியுள்ளது. பாஜக ஆட்சியின் அத்தகைய முக்கிய பிரச்சினைகளாக சிலவற்றை முதலில் தொகுத்துக்கொள்வோம்.

கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரம்: பொதுவாக பெருமுதலீட்டிய நிறுவனங்களுக்கு, கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக கொள்கைகளை வடிவமைக்கிறது. குறிப்பாக அம்பானி, அதானி ஆகிய இருவரது கார்ப்பரேட் நிறுவனங்களும் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவான கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள், கடன் தள்ளுபடி எனப் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பொதுத் துறை, அரசுத் துறை நிறுவனங்களெல்லாம் மெள்ள, மெள்ள தனியார் மையமாக்கப்படும் என்பதும் தெளிவாக உள்ளது. இந்த அணுகுமுறை பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை தீவிரமாக அதிகரிக்கக் கூடியதாக அமையும்.

மாநில உரிமைகள் பறிப்பு, ஒன்றிய அரசு ஒற்றை அரசாதல்: தொடர்ந்து “ஒரே நாடு” என்ற கோஷத்தின் கீழ் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதும், கவர்னர்கள் மா நில அரசுக்கு எதிராக அரசியல் செய்வதும் அதிகரித்தவண்ணம் உள்ளன. ஒன்றிய அரசில் அதிகாரத்தைக் குவிப்பது கார்ப்பரேட் நலன்களுக்கு உகந்தது என்பதாலும், மக்கள் நலத் திட்டங்கள் மாநில அரசியல் நிர்பந்தங்களினால் நிகழ்வதைக் குறைப்பதற்கு என்பதாலும் மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதைக் காண முடிகிறது. இது இந்தியக் கூட்டாட்சிக்கும், ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கும் என்பது பெரியதொரு ஆபத்தாகும்.

இந்து பெரும்பான்மைவாதம், சிறுபான்மையினர் உரிமைகள் பறிப்பு: பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு, தொழிலாளர் விவசாயிகள் நலன்கள் பாதிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றிலிருந்து மக்களைத் திசை திருப்ப இந்து பெரும்பான்மை அடையாளவாதமே பாஜகவின் முழு முதல் ஆயுதமாக உள்ளது. முதலில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாட்டு இறைச்சி உண்கிறார்கள், தயாரிக்கிறார்கள் என இஸ்லாமியர்கள் கும்பல் கொலைக்கு ஆட்படுத்தப்பட்டனர். இத்தகைய செயல்களில் ஈடுபடும் இந்துத்துவ சக்திகள் ஊக்கப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து மதக் கலவரங்கள், குடியுரிமை சீர்திருத்தச் சட்டம், முத்தலாக் தடை சட்டம், ஹிஜாப் தடை என்று பல்வேறு வடிவங்களில் சிறுபான்மையினர் உரிமைகள் கேள்விக்குறியாகி வருகின்றன. குடியுரிமை சீர்திருத்தச் சட்டமும், தேசிய குடி நபர்கள் பதிவேடும் இணைந்து செயல்படுத்தப்படும் முயற்சி, கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. காஷ்மீரின் விசேஷ அந்தஸ்துடன் சேர்த்து மாநில அந்தஸ்தே பறிக்கப்பட்டு, அது மூன்று ஒன்றிய ஆட்சிப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது, இன்னமும் சீர் செய்யப்படவில்லை.

கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல், கல்வி அமைப்புகள் சீரழிப்பு: இந்துத்துவ அமைப்புகளால் கல்புர்கி, பன்சாரே, கெளரி லங்கேஷ் உள்ளிட்ட சிந்தனையாளர்கள் வரிசையாக கொலை செய்யப்பட்டது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் இந்துத்துவ ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே இந்தக் கொலைகளை ஆதரித்ததும் நிகழ்ந்தது – அவர்களில் பலர் இன்றும் மகாத்மா காந்தி கொல்லப்பட்டதைக் கொண்டாடுவது போல. அதிகாரபூர்வமாக பாஜக இந்தச் செயல்களிலிருந்து விலகி நின்றாலும், கண்டித்தாலும்கூட, இந்த ஆட்சி உருவாக்கும் கருத்தியல் சார்ந்துதான் அதன் விமர்சகர்கள் கொல்லப்படுகின்றனர் என்பது கண்கூடு. புகழ்பெற்ற கல்வி நிலையங்களைச் சீரழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. உலகப் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நடைமுறைகள் சிதைக்கப்பட்டுள்ளன. அதனுள் இந்துத்துவ ஆதரவாளர்களின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. மாணவர்கள் உரிமைகள் பறிக்கப்படுவதும், அவர்கள் போராட்டங்கள் வெளியிலிருந்து வரும் குண்டர்களால் தாக்கப்பட்டு ஒடுக்கப்படுவதும் நிகழ்கிறது. முழுக்க, முழுக்க தனியார் முயற்சியில் உருவாக்கப்பட்ட உலகத்தரமான அசோக பல்கலைக்கழகமே பாஜக ஆட்சியை விமர்சித்து எழுதிய பிரதாப் பானு மேத்தா என்ற அறிஞரையும், அர்விந்த் சுப்ரமணியன் என்ற பொருளாதார அறிஞரையும் வேலையை விட்டுவிட கோரும் அளவு கல்வி நிலையங்களில் அச்சமும், கருத்துரிமை காவு கொடுக்கப்படுவதும் நிகழ்கின்றன.

சனாதன தர்மம், பார்ப்பனீய மீட்பு வாதம்: இப்போதைக்கு ஓட்டரசியலில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களின் ஓட்டுகள் தேவைப்படுவதால் சற்றே அடக்கி வாசிக்கப்படும் சனாதன தர்ம, பார்ப்பனீய மீட்பு வாதம் பாஜகவின் இறுதி இலக்கு, இலட்சியம் என்பதில் பெரிய ரகசியம் இருக்க முடியாது. ஏற்கனவே கல்லூரிகளில் கீதையைக் கட்டாயமாக்குதல், சமஸ்கிருத கல்வியைப் பரவலாக்குதல் எனப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமஸ்கிருத மொழி என்பதே சனாதனம் என்று கருத முடியாது என்றாலும். பாஜக அந்த மொழியைப் பரவலாக்குவது சனாதன தர்ம மீட்பிற்காக என்று கருதாமல் இருக்க முடியாது. பல்கலைக்கழகங்களில் திட்டமிட்டு இந்துத்துவ ஆதரவு கருத்துகள் நுழைக்கப்படுகின்றன. சனாதனத்தின் முக்கிய அம்சமான ஆணாதிக்க சிந்தனைகள் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படுவதையும் காண முடிகிறது. கடந்த நூற்றாண்டுகளில் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பெற்று வந்துள்ள உரிமைகளும், சுதந்திரமும் சனாதன தர்ம மீட்பு முழுவீச்சில் தொடங்கும்போது ஆபத்திற்குள்ளாகும் சாத்தியங்களை மறுக்க முடியாது.

தொடர்ந்து செய்திகளை வாசிக்கும், பாஜக ஆதரவாளர்களின் பேச்சுகளைக் கேட்பவர்கள் யாருக்கும் மேற்சொன்ன அம்சங்களில் எந்த ஐயமும் வர முடியாது. தீப்பற்றிவிட்டது; கருகும் வாசனை வருகிறது; உஷ்ணம் அதிகரிக்கிறது. ஆனால் பொதுமன்ற உரையாளர்களும், அறிவுஜீவிகளும் இன்னமும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. காந்தியை குறித்து மாய்ந்து, மாய்ந்து எழுதும் ராமச்சந்திர குஹா இந்த நெருக்கடியான தருணத்தில் காங்கிரஸ் கட்சியைக் கடிந்துகொள்வது, அதில் நேரு குடும்பம் தலைமை வகிப்பதுதான் மிகப்பெரிய பிரச்சினை என்று திசை திருப்புவது ஆகியவற்றையெல்லாம் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு பாசிச சூழ்நிலையை உணராமல் இருப்பதை உருவகமாகச் சித்திரிக்கும் விதமாக ஐயனெஸ்கோ என்ற நாடக ஆசிரியர் அபத்த நாடகமொன்றை எழுதினார். அதில் மக்கள் ஒவ்வொருவராக காண்டாமிருகமாக மாறிக்கொண்டிருப்பார்கள். அதைப் பொருட்படுத்தாமல் பிறர் இயல்பாக இருப்பது போல பேசிக்கொண்டிருப்பார்கள். அதுதான் இந்திய பொதுமன்ற போக்கைக் கவனிக்கும்போது தோன்றுகிறது.

பாரதீய ஜனதா கட்சியை வெல்ல முடியாதா?

இதற்கு இணையான மற்றொரு அணுகுமுறை பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்கவே முடியாது, காங்கிரஸ் முழுவதும் வீழ்ந்துவிட்டது, மாநிலக் கட்சிகளால் ஒன்று திரள முடியாது என்றெல்லாம் பிலாக்கணம் வைப்பது. பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் முந்நூற்று மூன்று உறுப்பினர்களை (303/543) கொண்டிருந்தாலும், அதன் ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 244 மட்டும்தான். இது பெரும்பான்மைக்கும் குறைவானது. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் கூட்டுத்தொகை 285 ஆக உள்ளது. அதாவது பெரும்பான்மையான மாநிலங்கள் பாஜக வசம் இல்லை. இந்தக் கட்டுரையின் இறுதியில் தரப்பட்டுள்ள அட்டவணையை கவனமாகப் பரிசீலித்தால் பாஜகவின் மக்கள் ஆதரவு அவ்வளவு பிரமாண்டமானதல்ல என்பதை உணரலாம். அதேபோல காங்கிரஸ் கட்சி என்பது காணாமல் போய்விடவில்லை. பன்னிரண்டு மாநிலங்களில் அது கணிசமான ஆதரவு தளத்தைக் கொண்டுள்ளது. எல்லா மாநிலங்களிலுமே அது தன் இருப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் தொடர்ந்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது சமச்சீராகவும், சமூக நீதியுடனும், கூட்டாட்சி முறையிலும், சுதந்திரமான சிந்தனை வளர்ச்சியுடன் இணைந்து நிகழ்வதற்கு சாத்தியமில்லை என்பதும், நாட்டில் ஒடுக்குமுறையும் அடையாளவாத ஜாதி, மத மோதல்கள் அதிகரிக்கும் என்பதையும் புரிந்துகொள்ளும் யாரும் இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸும், பிற மாநிலக் கட்சிகளும் இணைந்து வலுவான கூட்டணி கண்டு ஆட்சி அமைக்க வேண்டும் என்பதையே விரும்புவார்கள். அத்தகைய ஆட்சிக்கான நியாயத்தை முழுவதும் புரிந்துகொண்ட தலைவராக ராகுல் காந்தி விளங்குகிறார் என்பதும் ஐயத்துக்கு அப்பால் தெளிவாகப் புலனாகிறது. கர்நாடகாவில் அவர் குமாரசாமிக்கு முதல்வர் பதவியைக் கொடுக்க தயாரானதே அவர் எப்படி “காங்கிரஸ் மட்டுமே” என்ற எண்ணத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார் என்பதை உணர்த்தும். காங்கிரஸின் கட்சி கட்டமைப்பு தளர்வுற்றிருக்கிறது. அது சரி செய்ய முடியாத விஷயமல்ல. அதே போல எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டிய தேவையில்லை. முற்போக்கு சிந்தனையுள்ள மாநிலக் கட்சிகள் பாரதீய ஜனதாவுக்கு வலுவான மாற்றாக விளங்கும் மாநிலங்களில் காங்கிரஸ் அந்தக் கட்சிகளின் வளர்ச்சியை அனுமதிக்கும் வகையில் கூட்டணி காண்பதுதான் பொருத்தம். ஆனால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவதுதான் அந்த ஆட்சிக்குத் தேவையான வலுவை, நீடித்து நிற்கும் உறுதியைத் தரும் என்பதும் வரலாற்றில் நிரூபணமாகியுள்ளது. இலட்சியவாதம், கற்பனாவாதம் ஆகியவற்றை புறந்தள்ளிவிட்டு, யதார்த்தமான சூழலைப் புரிந்துகொள்வது என்பது இந்திய மக்களாட்சியை மீண்டும் சரியான பாதையில் செலுத்துவதற்கு இன்றியமையாததாகும்.

பாரதீய ஜனதா கட்சி மக்களின் எதிர்ப்பினால் வீழாதா?

ஒரு சிலர் பாரதீய ஜனதா ஆட்சி தொடர்ந்து விவசாய சட்டங்கள் போல மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும்போது மக்களாக அணி திரண்டு பாரதீய ஜனதா ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்வார்கள். அதன்மூலம் மேலும் முற்போக்கான அரசியல் சக்திகள் உருவாகலாம் என்றெல்லாம் நினைக்கிறார்கள். இது பாரதீய ஜனதா கட்சி சர்வாதிகார ஆட்சியாக மட்டும் இருந்தால் சாத்தியம். ஆனால், அது தொடர்ந்து மக்களை மூளைச்சலவை செய்யும் பெரும் படையினை உருவாக்கியுள்ளது.

உதாரணமாக காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தையே எடுத்துக்கொள்வோம். பாதி உண்மை பொய்யைவிட ஆபத்தானது என்பதைப்போல, காஷ்மீரி பண்டிட்கள் மீது உண்மையில் நடந்த கண்டனத்துக்குரிய தாக்குதலை ஒருதலைபட்சமாகப் பிழையாகச் சிந்தித்து காஷ்மீர் அரசியலையே கொச்சைப்படுத்துகிறது. இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் வாய்மொழிப் பிரச்சாரத்தின் மூலம் மக்களிடையே கொண்டு செல்கிறார்கள். ஏற்கனவே, எந்த ஆதாரமும், அடிப்படையும் இல்லாமல் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு ராமர் கோயில் இருந்தது, அது பாபரால் பதினைந்தாம் நூற்றாண்டில் இடிக்கப்பட்டது, அந்தக் கோயில் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டது என்ற ஒரு புனைவைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து, அதை உண்மையென மக்கள் மனதில் பரவலாக நிறுவி, அந்த மசூதியை இடித்து, இப்போது அதே இடத்தில் ராமர் கோயிலையும் கட்டப்போகிறார்கள். பிரதமரே பூமி பூஜை செய்து தொடங்கி வைத்துள்ளார்.

இதுபோல உண்மைகளைச் சிதைத்து தங்களுக்குத் தேவையான கதையாடலை நிறுவி மூளைச்சலவை செய்வதை வழக்கமாக, ஒரு திறமையாகக் கொண்டுள்ள கட்சி பாரதீய ஜனதா கட்சி. அதனால் மக்கள் அவ்வளவு சீக்கிரம் கிளர்ந்தெழாமல் அவர்களை மூளைச்சலவை செய்ய அந்தக் கட்சியால் முடியும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் சொல்லொண்ணாத் துயருக்கு ஆட்பட்ட பின்பும், கொரோனா ஊரடங்கில் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே சென்று பலர் மடிய நேரிட்டபோதும் மக்கள் பாஜக அரசுக்கு எதிராக கிளர்ந்தெழவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அதனால் மக்களாகக் கிளர்ந்தெழும் வரை பாஜக ஆட்சி செய்வது என்பது மக்களாட்சி அமைப்புகள் அதற்குள் பெருமளவு பலவீனப்பட்டுவிடவும், சமூக உறவுகள் சீர்குலைந்துபோகவுமே வழிவகுக்கும். எனவே, எந்தவித தாமதமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதும், பாரதீய ஜனதா கட்சியின் இந்துத்துவ கதையாடலுக்கு மாற்றான ஓர் அரசியல் கதையாடலை உருவாக்கி மக்களிடம் எடுத்துச் செல்வதுமே காலத்தின் தேவையாகும்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.