head


அனானிமஸ் ஹேக்கர்கள்: புதினை பலவீனப்படுத்த முயலும் இவர்கள் யார்? இது சாத்தியமா?

ஜோ டைடி

பிபிசி சைபர் நிருபர்|Tuesday, 22nd March 2022|Crime| Page Views: 1

அனானிமஸ் ஹேக்டிவிஸ்ட் கலெக்டிவ் (Anonymous hacktivist collective) – இது ஒரு ஹேக்கர்கள் கூட்டு நிழலுக குழு. இந்தக் குழுவில் இருப்பவர்கள் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மீது சைபர் போர் தொடுத்திருக்கிறார்கள். யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பு செய்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த சைபர் போரை தொடங்கியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்தக் குழுவின் கீழ் செயல்படும் பலருடனும், அவர்களின் நோக்கம், உத்தி மற்றும் திட்டம் குறித்து பிபிசி பேசியது.

யுக்ரேன் நெருக்கடி தொடங்கியது முதல் நடத்தப்பட்ட பல சைபர் தாக்குதல்களில், ‘அனானிமஸ் ஹேக்கர்கள்’ குழு ரஷ்யாவின் தொலைகாட்சி நெட்வொர்க்குகளை ஹேக் செய்தது தனித்துவமாக தெரிந்தது.

இந்த ஹேக்கிங் செயல்பாடு ஒரு சிறிய காணொளியாக பதிவாகியுள்ளது. அதில் சாதாரண நிகழ்ச்சி, யுக்ரேனில் வெடிகுண்டுகள் வெடிக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன, போரின் கொடுமைகள் குறித்து வீரர்கள் பேசுவதும் இடையில் வந்து போகின்றன.

இந்த காணொளி கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி பரவலாக பகிரப்பட்டது. பல மில்லியன் பின் தொடர்பாளர்கள் கொண்ட அனானிமஸ் சமூக ஊடகங்களின் கணக்குகளில் இந்த காணொளி பகிரப்பட்டது. அதில், “தற்போதைய செய்தி: யுக்ரேனில் என்ன நடக்கிறது என்ற உண்மையை வெளியிட ரஷ்ய நாட்டு டிவி சேனல்கள் அனானிமஸ் குழுவால் ஹேக் செய்யப்பட்டது.” என்று பதிவிட்டிருந்தனர்.

இந்த காணொளி லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டது. அது காட்சிப்படுத்தப்பட்ட விதம், தாக்கத்தை ஏற்படுத்திய வகை இணையத்தில் பகிரப்பட்டது.

அனானிமஸ் குழுவின் இந்த ஹேக்கிங் மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டது. இது கிட்டத்தட்ட சைபர் தாக்குதல்களை போலவே நடந்தது. இதை நாம் சரிபார்த்தற்கு மிக மிக கடினமாக இருந்தது. ஆனால், அனானிமஸ் ஹேக்கர்களின் சிறிய குழுவை சேர்ந்த ஒருவர், தாங்களே இதற்கு பொறுப்பு ஏற்பதாகவும், 12 நிமிடங்களில் ரஷ்ய தொலைக்காட்சிகளின் சேவைகளை ஹேக்கிங் செய்ததாகவும் நம்மிடையே கூறினார்.

இந்த காணொளியைப் பார்த்த முதல் நபர் கூட, இது உண்மைதான் என்று சரிபார்த்தார். எலிசா அமெரிக்காவில் வசிக்கிறார். ஆனால், அவரது தந்தை ரஷ்யாவைச் சேர்ந்தவர். அவர் பார்க்கும் டிவி நிகழ்ச்சிகளில் தடங்கல் ஏற்பட்ட போது, எலிசாவை அழைத்துள்ளார்.

“என் அப்பா என்னை அழைத்து, கடவுளே, அவர்கள் உண்மையை காட்டுகின்றார்கள்,” என்று கூறினார். அதனால் அவரிடம் அதை ரெக்கார்டிங் செய்யுங்கள் என்று சொன்னேன். பிறகு ஆன்லைனில் அந்த பதிவு செய்யப்பட்ட காணொளியை பகிர்ந்தேன். என் தந்தை மட்டுமின்றி அவரது நண்பரும் அதை பார்த்தாகக் கூறினார்” என்கிறார் எலிசா.

ஹேக் செய்யப்பட்ட சேவைகளை நடத்தும் ரஷ்ய நிறுவனமான ரோஸ்டெலிகாமிடம், இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு நாம் கேட்டுக் கொண்டோம். ஆனால், மறுமுனையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

எச்சரிக்கும் ஹேக்கர்கள், சளைக்காத ரஷ்யா “அப்பாவி யுக்ரேனியர்கள் படுகொலை செய்யபடுகிறார்கள்,” என்று கூறிய ஹேக்கர்கள், தாங்கள் செய்தது சரியே என்றும் தெரிவித்தனர்.

“யுக்ரேனில் அமைதி திரும்ப எதுவும் நடக்கவில்லை எனில், கிரெம்ளின் (ரஷ்யா) மீதான தாக்குதல்களை நாங்கள் தீவிரப்படுத்துவோம்,” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

ரஷ்யாவின் வலைதளங்களை ஹேக் செய்து, அந்நாட்டு அரசின் தரவுகளையும் திருடி இருப்பதாக அனானிமஸ் கூறுகிறது. ஆனால், ரெட் கோட் (Red Goat) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் பங்குதாரரான லிசா ஃபோர்டே, “இதுவரை நடந்த தாக்குதல்கள் பெரும்பாலும் ஆரம்பநிலையிலானவை,” என்கிறார். “ஹேக்கர்கள் ‘டிடிஒஎஸ்’ தாக்குதல் முறைகளை பயன்படுத்தியுள்ளனர். இந்த வகையில், ஒரு சேவையகத்தில் பல கோரிக்கைகள் குவியும். இதை எளிதில் நடத்த முடியும்; மேலும் தற்காலிகமாகவே வலைதளங்களை முடக்க முடியும்,” என்கிறார் அவர்.

“ஆனால், இந்த டிவி ஹேக்கிங் செயல்முறை நம்பமுடியாத அளவுக்கு படைப்பாற்றலுடன் இருக்கிறது. இதை சரிசெய்வது மிகவும் கடினம் என்று நினைக்கிறேன்”, என்று அவர் ஒப்புக் கொள்கிறார்.

line யார் இந்த அனானிமஸ்? கடந்த 2003ஆம் ஆண்டு ‘4chan’ என்ற வலைதளத்தில் இருந்து ‘அனானிமஸ் ஹேக்டிவிஸ்ட் கலெக்டிவ்’ முதன்முறையாக உருவானது. இந்த குழுவிற்கு தலைமை என்று எதுவும் இல்லை. ‘நாங்கள் பெரும் படை” என்பதே அவர்களின் கோஷம்.

இந்த குழுவின் உறுப்பினர்களாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த நோக்கத்திற்காகவும் அவர்கள் ஹேக் செய்யலாம். ஆனால், அவர்கள் பொதுவாக அதிகாரத்தை தவறாக உபயோகப்படுத்தும் அமைப்புகளையே இலக்கு வைப்பதாக கூறிக் கொள்கின்றனர்.

தங்களின் அடையாளம் ‘கய் ஃபாவ்கிஸ் மாஸ்க்’ (Guy Fawkes mask). இது பிரபல ஆலன் மூரின் கிராஃபிக் நாவல் ஆசிரியரான ‘வி ஃபார் வென்டெட்டா’ என்ற நாவலைத் தழுவிய வடிவமைக்கப்பட்ட முக கவச மனிதர்களை குறிக்கிறது. ஊழல் செய்த பாசிச அரசை புரட்சியாளர்கள் வீழ்த்துவதே நாவலின் கதை.

இந்த குழுவிற்கு பல சமூக ஊடக கணக்குகள் இருக்கின்றன. இவர்களுடைய ட்விட்டர் பக்கத்தை 15.5 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.

line கவலையில் சைபர் வல்லுநர்கள் அனானிமஸ் ஹேக்கர்கள் ரஷ்ய வலைதளங்களை சிதைத்துள்ளனர். அந்த வலைதளங்களில் காட்டப்படும் உள்ளடக்கத்தை மாற்ற இணையதளத்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதுதான் இதன் பொருள் என்று லிசா கூறுகிறார்.

இதுவரை நடந்த தாக்குதல்கள் ரஷ்ய செயல்பாடுக்கு இடையூறையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளன, ஆனால் யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியது முதல், ஹேக்டிவிசம் பெரிய அளவில் இருப்பதால், சைபர் வல்லுநர்கள் அது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஒரு ஹேக்கரால் தற்செயலாகக் கூட ஏதேனும் ஒரு மருத்துவமனையின் கணினி நெட்வொர்க்கை ஹேக் செய்து விடலாம்; அல்லது முக்கியமான தகவல் தொடர்பு இணைப்புகளை இடைமறிக்கலாம் என்பது அவர்களின் கவலை.

இந்தத் தாக்குதல்களில் ஆபத்துகள் அதிகம். [அவை] தீவிரமடைய வழிவகுக்கும், அல்லது யாராவது தற்செயலாக பொதுமக்களின் வாழ்வில் முக்கியமான விஷயத்திற்கு உண்மையான சேதத்தை ஏற்படுத்தலாம்,” என்கிறார் லிசா.

அனானிமஸ் பல ஆண்டுகளாக தீவிர செயல்பாட்டில் இருக்கவில்லை. யுக்ரேனிய தொழில்நுட்ப தொழில்முனைவோரான ரோமன், ‘ஸ்டாண்ட் ஃபார் யுக்ரேன்’ ( Stand for Ukraine) என்ற ஹேக்கர்களின் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். ரஷ்யா தனது தாய்நாடு மீது படையெடுப்பு மேற்கொள்ளும்வரை, அந்த அமைப்புடன் அவருக்கு எந்த தொடர்பும் இருக்கவில்லை.

ஆனால் அவரும் அவரது குழுவும் ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸின் (Tass) இணையதளத்தை புதினுக்கு எதிரான போஸ்டருடன் சில நேரங்களிலேயே முடக்கினர். அந்த செயல்பாட்டின்போது, அவர்கள் ‘அனானிமஸ்’ சின்னத்தை பயன்படுத்தினர்.

யுக்ரேனை காக்கும் முயற்சிக்கு உதவுவதற்கும், ரஷ்யாவின் இலக்குகளை ஹேக் செய்வதற்கும் இணையதளங்கள், ஆண்ட்ராய்டு செயலிகள் மற்றும் டெலிகிராம் போட்களை இவர்கள் உருவாக்குகிறார்கள். இந்தக் குழுவை ஒருங்கிணைக்கும் நோக்குடன், யுக்ரேன் தலைநகர் கீயவில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி ரோமன் வேலை செய்கிறார்.

“நான் யுக்ரேனுக்காக துப்பாக்கியை கையில் எடுக்கத் தயாராக இருக்கிறேன், ஆனால் தற்போது எனது திறமைகள் கணினியில் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே நான் எனது இரண்டு மடிக்கணினிகளுடன் எனது வீட்டில் இருக்கிறேன், இங்கிருந்தபடி ரஷ்யாவுக்கு எதிரான தகவல் தொழில்நுட்ப ரீதியிலான எதிர்ப்பை ஒருங்கிணைக்கிறேன்,” என்கிறார் ரோமன்.

தனது குழு பல மணி நேரத்துக்கு ரஷ்யாவின் பிராந்திய ரயில் டிக்கெட் சேவையை முடக்கியதாகவும் ரோமன் கூறுகிறார். இந்தக் கூற்றை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.,

“உங்களுக்கோ, உங்கள் உறவினருக்கோ இதனால் அச்சுறுத்தல் ஏற்படும்வரை இதுபோன்ற செயல்பாடுகள் சட்டவிரோதமானவை, தவறானவை என தோன்றலாம்” என்று அவர் தனது செயல்களை நியாயப்படுத்துகிறார்.

அனானிமஸ் குழுவுடன் இணைந்த மற்றொரு குழுவானது ஸ்க்வாட் 303 எனப்படும் போலந்து ஹேக்கிங் குழு ஆகும். இது இரண்டாம் உலக போரில் புகழ்பெற்ற போலந்து போர் படையான ஸ்க்வாட் ரானின் பெயரிடப்பட்டது.

“நாங்கள் எல்லா நேரத்திலும் அனானிமஸ் குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறோம், இப்போது என்னை அனானிமஸ் இயக்கத்தின் உறுப்பினராகக் கருதுகிறேன்,” என்று இரண்டாம் உலக போரின் விமானி படை வீரர் ஜான் ஜூம்பாக்கின் பெயரைப் பயன்படுத்திய குழுவில் உள்ள ஒருவர் கூறுகிறார்.

அவர் தனது புகைப்படத்தை வெளியிட விரும்பவில்லை. ஆனால் குழுவின் மற்றொரு உறுப்பினர் யுக்ரேன் நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஹெல்மெட் மற்றும் முகமூடியில் இருக்கும் தனது படத்தை நமக்கு அனுப்பி வைத்தார். பின்னர் தமது நிலைமையை விவரித்தார்,

“பகலில் துப்பாக்கி, இரவில் ஹேக்கிங்” “பகலில் துப்பாக்கி ஏந்தியபடி போராடுகிறேன். இரவில் ஸ்காட்/ அனானிமஸ் ஹேக்கிங்”.

ஸ்க்வாட் 303 ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இது பொது உறுப்பினர்களை ஏதோ ஒரு ரஷ்ய தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்ப அனுமதிக்கிறது. இது போரைப் பற்றிய உண்மையை அவர்களுக்குத் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. 20 மில்லியனுக்கும் அதிகமான குறுஞ்செய்திகளும் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாக அவர்கள் கூறுகின்றனர்.

நான் பேசிய இரண்டு அனானிமஸ் குழுக்கள், யுக்ரேனுக்கு இதுவரை கூட்டாக செய்த மற்றும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய செயலாக தங்களின் நடவடிக்கைகளை கூறிக் கொண்டன.

ஸ்குவாட் குழுவின் சட்டவிரோத செயலை அவர் எப்படி நியாயப்படுத்தினார் என்று கேட்டதற்கு,எந்தத் தனிப்பட்ட தகவலையும் நாங்கள் திருடவில்லை அல்லது பகிரவில்லை என்றும் தகவல் போரில் வெற்றி பெறும் நோக்கத்துடன் ரஷ்யர்களிடம் மட்டுமே பேச முயற்சிப்பதாகவும் ஜான் ஜூம்பாக் கூறுகிறார்.

இருப்பினும், வரும் நாட்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ஹேக்கிற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரஷ்யாவில் உள்ள கண்காணிப்பு குழுக்கள் யுக்ரேன் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஆனால் அவை சிறிய அளவிலேயே இருப்பதாக தெரிகிறது.

ஜனவரியில் இருந்து யுக்ரேனுக்கு எதிராக ஒருங்கிணைந்த டிடிஒஎஸ் தாக்குதல்களின் (DDoS attacks) மூன்று முக்கிய அலைகள் நடந்துள்ளன. மேலும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான யுக்ரேனிய கணினி அமைப்புகளில் தரவை நீக்கிய “வைப்பர்” தாக்குதல்களின் மூன்று சம்பவங்களும் உள்ளன.

புதன்கிழமையன்று ‘யுக்ரேனின் 24’ என்ற தொலைக்காட்சி சேனல் இணையதளம் ஹேக் செய்த பிறகு, யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கியின் சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியானது.

தற்போதைய சூழலில், ஹேக்கிங் நடந்தால் அதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை துல்லியமாகத் தெரிந்துகொள்வது மிகவும் கடினம்.

“அனானிமஸ் குழுவில் இருப்பதாக யார் வேண்டுமானாலும் கூறிக் கொள்ளலாம். அவர்கள் நாங்கள் எந்த குறிக்கோளுக்காக போரிடுகிறோமோ அதற்கு எதிரான அரசு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூட இதில் இருக்கலாம் என்கிறார் நீண்ட காலமாக அனானிமஸ் குழுவில் இருக்கும் Anon2World என்ற ஹேக்கர்.

“எங்களின் தற்போதைய புகழ் அதிகரித்து வருகிறது. நிச்சயமாக (கிட்டத்தட்ட) அரசிடம் இருந்து வெளிப்படையான எதிர்வினை இதற்கு வரும். கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் இது நேரும். அத்தகைய குழப்பங்களை எல்லாம் நாங்கள் பார்த்துப் பழகி விட்டோம். குறிப்பாக ஆன்லைனில்ஏற்படும் கூச்சல்களை பார்த்து விட்டோம்,” என்கிறார் அந்த ஹேக்கர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.