வடகொரியாவில் முதல் கரோனா பாதிப்பு: முழு ஊரடங்கு அமல்!
|Friday, 13th May 2022|Political|
Page Views: 1
|
|
வடகொரியாவில் முதன்முறையாக ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கரோனா தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து வடகொரியாவில் எத்தகைய பாதிப்பும் பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டிற்குள் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி வருவதாக வடகொரியா தெரிவித்து வந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் நிலவி வந்த நிலையில் தற்போது பியோங்யாங் நகரில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிஏ.2 வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் கரோனா பரவல் குறித்து வடகொரியா தொழிலாளர் கட்சி ஆலோசனை நடத்தியதாகவும் இந்த ஆலோசனையின்போது தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த கிம் ஜாங் உன் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல்முறையாக ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, முழு பொது முடக்கத்தை அதிபர் கிம் ஜாங் உன் அமல்படுத்தியுள்ளதாக ஏஎப்ஃபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
|
|