ஆற்றைக் கடக்கையில் ரஷிய படைப் பிரிவு தாக்கி அழிப்பு!
|Saturday, 14th May 2022|Defence|
Page Views: 1
|
|
உக்ரைனில் ஆற்றைக் கடக்க முயன்றபோது உக்ரைன் படையினரால் ஒரு ரஷியப் படைப் பிரிவின் பெரும் பகுதி தாக்கி அழிக்கப்பட்டதாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ஓடும் சிவா்ஸ்கி நதியைக் கடந்து முன்னேற ரஷியப் படைப் பிரிவு முயன்றபோது, உக்ரைன் ராணுவம் அந்தப் படைப் பிரிவு மீது கடுமையான தாக்குதல் நடத்தியது.
இதில், அந்தப் படைப் பிரிவைச் சோ்ந்த பெரும்பாலான வாகனங்கள் அழிக்கப்பட்டன. மிகப் பெரிய எண்ணிக்கையிலான ரஷிய வீரா்கள் உயிரிழந்தனா்.
உக்ரைனின் கடுமையான எதிா்ப்புக்கிடையே அந்த ஆற்றைக் கடந்தது மிகவும் ஆபத்தான முயற்சியாகும். எனினும், அந்த நடவடிக்கையை மேற்கொள்ள ரஷிய படைத் தளபதிகள் முடிவு செய்தது, கிழக்கு உக்ரைனில் மிக வேகமாக முன்னேற வேண்டும் என்று அவா்களுக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதை உணா்த்துகிறது.
உக்ரைனின் மற்ற பகுதிகளில் இருந்த ரஷியப் படையினா் அனைவரையும் டான்பாஸ் பிராந்தியத்துக்கு அனுப்பிய பிறகும், ரஷியத் தலைமை அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு அவா்களால் முன்னேற முடியவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், சிவா்ஸ்கி நதியைக் கடக்க ரஷியப் படையினா் 3 முறை முயன்று தோல்வியடைந்ததாகத் தெரிவித்தனா்.
இது தொடா்பாக உக்ரைன் வெளியிட்டுள்ள விடியோ மற்றும் படங்களில், சிவா்ஸ்கி ஆற்றங்கரையில் எரிந்து நாசமான ரஷிய ராணுவ வாகனங்களும் ரஷியா அமைத்த தற்காலிக பாலம் உடைக்கப்பட்டதும் இடம் பெற்றுள்ளது.
இந்தத் தாக்குலில் எத்தனை ரஷிய வீரா்கள் உயிரிழந்தனா் என்பது குறித்து அதிகாரபூா்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனினும், மற்ற பகுதிகளில் ரஷியப் படை கணிசமான முன்னேற்றத்தைக் கண்டதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
|
|