head


இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி- 4 அதிகாரிகள் அடங்கிய குழு நியமனம்!

|Saturday, 14th May 2022|| Page Views: 1

இலங்கைக்கு பொருட்களை அனுப்ப 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் துயரப்படும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் ரூ.123 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் தொன் அரிசி, 500 தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் தமிழக அரசு சாா்பில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதேபோல, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.

இந்த விடயத்தில் தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி, தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் உதவிகள் அனைத்தும் தமிழா்களுக்கே சென்றுசேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினா்களைக் கொண்ட குழு அமைத்து, அக் குழு மூலமாக உதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியது.

இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வந்துள்ளார். இலங்கை மக்களுக்கு ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 தொன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 தொன் பால்மா ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் எஸ்.பிரபாகர், ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன், மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் தீபக் ஜோசப் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப்பொருட்களை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது நிவாரணப் பொருட்களை பார்சல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பார்சலில் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன் என்று அச்சிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வருகிற 16ஆம் திகதி (திங்கட்கிழமை) தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் இலங்கை செல்கிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் அரிசி, மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

முதல் கட்டமாக 10 ஆயிரம் தொன் அரிசி மற்றும் பால்மா, மருந்து வகைகள் கொண்டு செல்லப்பட உள்ளது. அதன் பிறகு மீண்டும் 22ஆம் திகதி 2ஆவது கட்டமாக இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து பொருள்களை அனுப்ப நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், இந்த மாதம் இறுதிக்குள் பொருட்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.