எமது குரல்கள் இஸ்ரேல் பலஸ்தீன யுத்தத்தை நிறுத்துமா ?
|2023-10-17 10:03:00|General|
Page Views: 406
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தமானது இன்று சர்வதேச ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து நாடுகளிலும் இது பேசுபொருளாகியுள்ளது. எமது நாட்டிலும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என கோரி ஒரு சிலரால் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு கருத்து மோதல்களும் ஏற்பட்டுள்ளன.
இந்த கருத்து மோதல்கள் தேவையற்ற ஒன்றாகும். எமது நாடானது நீண்ட கால யுத்தமொன்றை சந்தித்த நாடு என்றவகையில் இறுதி யுத்தத்தின் பின்னர் படிப்படியாக முன்னேற்றமடைந்து ஒரு ஸ்திர நிலையை அடைவதற்குள் கொவிட் 19 காரணமாக மேலும் ஒரு பாரிய பொருளாதார சரிவில் வீழ்ந்தது.அதன் பின்னரான ஆட்சிமாற்றம் என தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து இப்போதுதான் ஓர் அமைதியான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.
பொருளாதார ரீதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் வேளையில் எங்கோ ஓர் மூலையில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தக்கோரி இங்கிருந்து குரல் எழுப்புவதும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதும் எமது நாட்டின் அன்றாட செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிப்பதோடு நாட்டின் அமைதியையும் சீர்குலைக்கும்.
கருத்து சுதந்திரம் நம் அனைவருக்கும் உண்டு. எனினும் அவை எமக்குள் இனவாதத்தையும் பிளவையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பின் அவற்றை தவிர்த்துவிடுவது பொருத்தமானதாகும்.
இங்கு நாம் குரல் எழுப்புவதால் அங்கு ஒரு எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை .சர்வதேச நாடுகளும் உலகின் மிகப்பெரிய நிறுவனமான ஐக்கிய நாடுகள் சபையுமே இன்று வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அவர்களாலேயே முடியவில்லை எனில் எம்மால் முடியுமா?
வேற்று நாட்டுப் பிரச்சினைகளை எமக்குள் கொண்டு வந்து எமது நாட்டின் அமைதியை தயவுசெய்து சீர்குலைத்து விடாதீர்கள் .இங்கு இனவாதம் என்பது ஒருபோதும் வேண்டாம் .யுத்தத்தின் வலி என்ன என்பதை இந்நாட்டின் அனைத்து தரப்புமே நன்கு அறிந்துள்ளது.எனவே தேவையற்ற கருத்து மோதல்களையும் போராட்டங்களையும் தவிர்த்து நாட்டில் இனநல்லிணக்கத்தை பேண வழி செய்யுங்கள்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.