பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிப்ரவரியில் பிரதமர் திறக்கிறார் !
|2023-11-18 11:52:11|General|
Page Views: 131
பாம்பன் புதிய ரயில் பாலத்தை வரும் பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று இந்திய ரயில்வே வாரிய கட்டமைப்புப் பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தெரிவித்தார்.
தெற்கு ரயில்வேயில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்ய நேற்று ராமேசுவரம் வந்த அவர், ஆய்வுக்குப் பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாம்பனில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில் பாலப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து, தூக்குப் பாலம் மற்றும் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2024 பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி இப்பாலத்தை திறந்து வைக்கும் வகையில் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ராமேசுவரத்தின் துணை ரயில் நிலையமாக செயல்பட்டு வரும் மண்டபம் ரயில் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து தர தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் மண்டபம் ரயில் நிலையம் மேம்படுத்தப்படும். ராமேசுவரம் - தனுஷ்கோடி இடையே புதிதாக அமைக்கப்பட உள்ள ரயில் பாதைக்குத் தேவையான நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, தெற்கு ரயில்வே முதன்மை தலைமைப் பொறியாளர் ஸ்ரீ தேஷ் ரத்தன் குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.